இந்தியாவில் டயட் கோக் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஈரான் போர்ச் சூழல் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து வர வேண்டிய சரக்குகள் தாமதமானதால், இந்தியாவில் டயட் கோக் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தியாவில் டயட் கோக் அலுமினிய கேன்களில் மட்டுமே விற்கப்பட்டு வந்த நிலையில், இந்த சப்ளை பாதிப்பு அதன் ரசிகர்களை, குறிப்பாக இளைய தலைமுறையினரை பெரும் கவலையில் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களில் பலரும் தங்களுக்குப் பிடித்தமான பானம் கிடைக்கவில்லை என்று வருத்தத்தைப் பகிர்ந்து வந்தனர்.
தற்போது கோகோ கோலா நிறுவனம் இந்தத் தட்டுப்பாட்டைப் போக்க ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளது. ஆனால் இதில் ஒரு சிறிய ட்விஸ்ட் உள்ளது. வழக்கமான அலுமினிய கேன்களுக்குப் பதிலாக, இப்போது கண்ணாடி பாட்டில்களில் டயட் கோக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இது போன்ற கண்ணாடி பாட்டில் பேக்கேஜிங் மிகவும் அரிதானது. சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே சண்டிகரில் இது போன்ற பாட்டில்கள் விற்பனைக்கு வந்ததாக தகவல்கள் பரவின. தற்போது பிளிங்கிட் (Blinkit) போன்ற ஆன்லைன் டெலிவரி ஆப்களில் இந்த கண்ணாடி பாட்டில்கள் விற்பனைக்கு வந்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விலையைப் பொறுத்தவரை, ஒரு 200 மி.லி கண்ணாடி பாட்டிலின் விலை 100 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக 200 மி.லி அலுமினிய கேன் 30 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், இந்த புதிய கண்ணாடி பாட்டிலின் விலை மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதாவது, ஒரு கண்ணாடி பாட்டில் வாங்கும் விலையில் நீங்கள் மூன்று கேன்களை வாங்கிவிட்டு, மீதி 10 ரூபாயைச் சேமிக்க முடியும். 200 சதவீதத்திற்கும் அதிகமான இந்த விலை உயர்வு பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
டயட் கோக் தட்டுப்பாடு நிலவிய போது டெல்லி போன்ற நகரங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் பார்களில் "டயட் கோக் பார்ட்டிகள்" என்ற பெயரில் வினோதமான கொண்டாட்டங்கள் நடந்தன. தங்களுக்குப் பிடித்த பானம் மீண்டும் கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஒன்று கூடி கொண்டாடிய இந்த நிகழ்வுகளுக்கான டிக்கெட் விலை சுமார் 29 கேன்களின் விலைக்கு சமமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.