டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் விபத்து  
இந்தியா

ரன்வேயில் நடந்த பயங்கரம்: ஸ்பைஸ்ஜெட் - 'ஆகாசா விமானங்கள்' மோதி விபத்து! பதறவைக்கும் பின்னணித் தகவல்கள்!

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை முரசு செய்தி குழு

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை மதியம் 2:15 மணி அளவில் இரண்டு விமானங்கள் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லே பகுதியிலிருந்து டெல்லி வந்திறங்கிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம், தரையிறங்கிய பிறகு தனக்கு ஒதுக்கப்பட்ட நிறுத்துமிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த ஆகாசா ஏர் நிறுவனத்தின் விமானம் மீது மோதியது. இந்தச் சிறு விபத்தில் இரண்டு விமானங்களின் சில பகுதிகள் பலத்த சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் என யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

விபத்தின் தாக்கத்தால் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் வலது பக்க இறக்கையின் நுனிப் பகுதி சேதமடைந்தது. அதேபோல், டெல்லியிலிருந்து ஹைதராபாத் செல்வதற்காகப் புறப்படத் தயாராக நின்றிருந்த ஆகாசா ஏர் விமானத்தின் வால் பகுதியில் இடது பக்க ஸ்டான்ட் பலத்த பாதிப்புக்கு உள்ளானது. விபத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி இரண்டு விமானங்களும் சேவைகளில் இருந்து உடனடியாக நிறுத்தப்பட்டு தரை இறக்கப்பட்டன. பாதிப்படைந்த விமானங்களைச் சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தச் சம்பவம் குறித்து 'ஆகாசா ஏர்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது விமானம் ஓரிடத்தில் நிலையாக நின்றிருந்த போது, மற்றொரு நிறுவனத்தின் விமானம் வந்து மோதியதாகத் தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாகக் கீழே இறக்கப்பட்டனர் என்றும், ஹைதராபாத் செல்ல வேண்டிய பயணிகளுக்காக மாற்று ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்குத் தாங்கள் எப்போதும் முன்னுரிமை அளிப்பதாகவும், இது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ (DGCA), இந்த விபத்து குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஆரம்பகட்ட தகவலின்படி, 'ஸ்பைஸ்ஜெட் விமானம்' தனது பார்க்கிங் பகுதிக்குச் செல்லும்போது, 'ஆகாசா' விமானத்தின் வால் பகுதியில் மோதியது உறுதி செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் விதிகளும், பாதுகாப்பு நெறிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டதா ?என்பது குறித்தும், இந்த விபத்திற்கு விமானிகளின் கவனக்குறைவு காரணமா? அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா? என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.