இந்தியா

"மக்களவையில் இருந்து நீக்கம். மக்களுக்கு சேவைபுரிய வாய்ப்பு" ராகுல் பேச்சு!

Malaimurasu Seithigal TV

"மக்களவையில் இருந்து நீக்கப்பட்டது, மக்களுக்கு சேவை புரிய தனக்கு அளிக்கப்பட்ட பெரும் வாய்ப்பு" என அமெரிக்காவின் ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களிடையே ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

10 நாட்கள் பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது தொழில் முதலீட்டாளர்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து வருகிறார். இதில் நேற்று அமெரிக்காவின் ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய மாணவர்களிடையே ராகுல்காந்தி உரையாற்றினார். 

அப்போது, மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதை குறிப்பிட்டு பேசிய அவர், 2000 ஆம் ஆண்டு முதன்முதலாக அரசியலில் நுழைந்தபோது தகுதி நீக்கம் போன்ற கடுமையான தண்டனைகள் எல்லாம் சாத்தியமில்லை எனக் கருதியதாகவும், ஆனால் தற்போது அதனை நிகழ்கால யதார்த்தமாக கண்முன்னே பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். மக்களவையிலிருந்து நீக்கி தனக்கு அளிக்கப் பட்ட தண்டனையானது, மக்களை சந்திப்பதற்கும் மக்களுக்கு சேவையாற்றுவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதாக கூறிய அவர் உண்மையிலேயே இது மிகப்பெரிய வாய்ப்பு எனவும் இந்த வழியில்தான் தற்போதைய அரசியல் செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த பிரச்சினைகள் 6 மாதங்களுக்கு முன்னரே தொடங்கியதாக கூறிய அவர், பெரும் நிதி ஆதிக்கமும்  நிறுவன கட்டமைப்பும் நாட்டை ஆண்டு வருவதாகவும் ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் இந்தியாவில் ஒன்று சேர்ந்து போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை பெற்று மக்களவையில் இருந்து நீக்கப்பட்ட முதல் நபர் நான் தான் எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.