இந்திய ரயில்வேயின் முதல் வகுப்பு ஏசி பெட்டி ஒன்று தேன்நிலவு அறையைப் போல அலங்கரிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோஜாபூக்கள், பலூன்கள், மலர் அலங்காரங்கள் மற்றும் "I Love You" என்ற வாசகத்துடன் அலங்கரிக்கப்பட்ட அந்த பெட்டியின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வைரலான வீடியோவில், நாந்தேட் கிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டி முழுவதும் காதல் நிறைந்த சூழலை உருவாக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தரை முழுவதும் ஆயிரக்கணக்கான ரோஜா இதழ்கள் தூவப்பட்டிருந்ததுடன், பலூன்கள் மற்றும் மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன. மேலும், பெட்டியின் சுவரில் ‘I Love You’ என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. இந்த அலங்காரத்தை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரஹத் ரூம் டெக்கரேஷன் நிறுவனம், ஜால்னாவைச் சேர்ந்த புதுமணத் தம்பதியருக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. அவர்களின் விளக்கத்தின்படி, தம்பதியினர் அவுரங்காபாத்திலிருந்து ஜால்னா ரயில் நிலையத்திற்கு காரில் வந்தபோது, நிறுவன ஊழியர்கள் முன்கூட்டியே ரயில் பெட்டிக்குள் சென்று அலங்காரப் பணிகளை முடித்துள்ளனர். பின்னர் ஜால்னா ரயில் நிலையத்தில் அந்தத் தம்பதியினர் ரயிலில் ஏறியதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த அலங்காரம் ரயில்வே அனுமதியின்றி செய்யப்பட்டதாக இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. விதிகளை மீறி அலங்கார நிறுவன ஊழியர்கள் ரயில் பெட்டிக்குள் நுழைந்தது கண்டறியப்பட்டதாகவும், இது பாதுகாப்பு நடைமுறைகளுக்கு எதிரானது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்போது பணியில் இருந்த தலைமை டிக்கெட் ஆய்வாளர் கிரிஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த முறைகேடு எப்படி நடந்தது, யார் யார் இதற்கு பொறுப்பு என்பதைக் கண்டறிய துறை ரீதியான விசாரணைக்கும் இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகளைப் பெற்றுள்ளது. சிலர், "புதுமணத் தம்பதியருக்கு மறக்க முடியாத அனுபவம்" என்று பாராட்டிய நிலையில், மற்றொரு தரப்பினர், "பயணிகள் ரயில் பெட்டியை இவ்வாறு அலங்கரிக்க அனுமதி உள்ளதா?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். மேலும், பலூன்கள், காகித அலங்காரங்கள் மற்றும் மலர்களைப் பயன்படுத்துவது தீ பாதுகாப்பு விதிகளை மீறுமா, மற்ற பயணிகளின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துமா, ரயிலின் தூய்மை மற்றும் பராமரிப்பில் சிக்கல் உருவாகுமா என்பதையும் பலர் விவாதித்து வருகின்றனர்.
இதற்கிடையில், சமூக வலைதளங்களில் இந்த பெட்டிக்கு "சுஹாக்ராத் எக்ஸ்பிரஸ்", "ஹானிமூன் ஆன் வீல்ஸ்" போன்ற பெயர்களை வைத்து ஏராளமான மீம்களும் நகைச்சுவை பதிவுகளும் வைரலாகி வருகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.