புதினுக்கு மோடி அளித்த தமிழ் புத்தகம்! 17ம் நூன்றாண்டு ரஷ்ய தொடர்பு என்ன? 
இந்தியா

புதினுக்கு மோடி அளித்த தமிழ் புத்தகம்! 17ம் நூன்றாண்டு ரஷ்ய தொடர்பு என்ன?

ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான லியோ டால்ஸ்டாய், 19-ஆம் நூற்றாண்டில் அதன் ஆரம்பகால மொழிபெயர்ப்பு மூலம் திருக்குறளை அறிந்திருந்ததாக நம்பப்படுகிறது.

மாலை முரசு செய்தி குழு

BRICS அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் நாளை தொடங்குகிறது. பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக, ஒரு நாள் முன்னதாகவே இன்று இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புதின்.

இன்று இருவரும் சந்தித்துக்கொண்டபோது, இந்தியாவின் பழமையான அறநூல்களில் ஒன்றான திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பை புதினுக்கு பரிசளித்தார் மோடி.

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள், உலகம் முழுவதும் உள்ள சிந்தனையாளர்களை ஈர்த்த நூலாகும்.

திருக்குறள் குறித்து புதினுக்கு எடுத்துரைத்த மோடி, "இந்தப் புத்தகம் நம் நாட்டு மக்களுக்கிடையேயான உறவை வலுப்படுத்த உதவும் என்று நம்புகிறேன்," எனக் கூறியதாக இந்தியா டுடே தளம் தெரிவிக்கிறது.

திருக்குறளின் ரஷ்யத் தொடர்பு

ரஷ்யர்களுக்கு நீண்டகாலமாக இந்திய தத்துவம் மற்றும் இலக்கியங்கள் மீது ஆர்வம் உள்ளது. இந்த வரலாறு 17-ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது. அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள், ரஷ்ய அறிஞர்களின் கவனத்தைப் பெற்றது.

ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான லியோ டால்ஸ்டாய், 19-ஆம் நூற்றாண்டில் அதன் ஆரம்பகால மொழிபெயர்ப்பு மூலம் திருக்குறளை அறிந்திருந்ததாக நம்பப்படுகிறது. அவரது எழுத்துகளில் திருக்குறளின் அகிம்சை, கருணை மற்றும் அறம் ஆகிய கருத்துகள் வெளிப்படுவதாக வாதிடுகின்றனர்.

திருக்குறளுக்கும் ரஷ்யாவுக்கு உள்ள தொடர்பு... புதினுக்கு பரிசளித்த மோடி!

உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றாலும், டால்ஸ்டாய்க்கும் காந்திக்குமான கடிதப் போக்குவரத்தில் திருக்குறள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், டால்ஸ்டாய் காந்திக்கு திருக்குறளை அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்றும் வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.

புதினுக்கு மோடி அளித்த திருக்குறள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் 2026-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

இந்தப் பதிப்பில், மூலத் தமிழ் குறள்களும், அவற்றின் ஒலிபெயர்ப்பும், நைரா மிருக்ட்சியன் (Naira Mkrtchyan) என்பவரின் ரஷ்ய மொழிபெயர்ப்பும் இடம்பெற்றுள்ளன.

இப்போது புதினுக்கு திருக்குறளைப் பரிசளித்திருப்பதன் மூலம், இந்தப் பழைய இலக்கிய உறவைப் புதுப்பித்துள்ளார் பிரதமர் மோடி.

மோடியும் திருக்குறளும்

பிரதமர் மோடி தனது பேச்சுகளுக்கு இடையே அடிக்கடி மேற்கோள் காட்டும் நூலாக திருக்குறள் உள்ளது. அத்துடன், தாய் மற்றும் டோக் பிசின் மொழிகளில் அதன் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுள்ளார். உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கவும் பரிந்துரை செய்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்