இந்தியா

அசாமில் அதிரடி பொது சிவில் சட்டம்! திருமணம், விவாகரத்து இனி ஒரே சட்டம்? எதிர்ப்பு கிளம்பியது ஏன்?

இருப்பினும், அனைத்து எதிர்ப்புகளையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டது..

மாலை முரசு செய்தி குழு

உத்தரகாண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களைத் தொடர்ந்து, பாஜக ஆளும் மூன்றாவது மாநிலமாக அசாமிலும் பொது சிவில் சட்ட மசோதா (UCC) புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. மதம், இனம் மற்றும் ஜாதி வேறுபாடின்றி திருமணம், விவாகரத்து, சொத்துரிமை மற்றும் லிவ்-இன் உறவுகள் போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்கு ஒரே மாதிரியான சட்டங்களைக் கொண்டு வருவதே இந்த மசோதாவின் முதன்மை நோக்கம். அசாம் அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த இந்த மசோதா, பலிமுறை திருமணங்களைத் தடை செய்வதையும், லிவ்-இன் உறவுகளைக் கட்டாயப் பதிவு செய்வதையும் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

இந்த மசோதாவில் சில விதிவிலக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அசாமில் வசிக்கும் பழங்குடியின மக்கள் மீது இந்தச் சட்டம் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சட்டத்தை மீறினால் கடுமையான தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒருவருக்குத் திருமணமாகியிருக்கும்போது, துணையின் அனுமதியின்றி மறுமணம் செய்தாலோ அல்லது பலதார மணம் செய்தாலோ ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று இந்த மசோதா கூறுகிறது. அதேபோல், லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் அதை முறையாகப் பதிவு செய்யத் தவறினால் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் இந்த மசோதா விவாதத்திற்கு வந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்த மசோதா சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் உரிமைகளைப் பாதிக்கும் என்று அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த மசோதாவை ஒரு தேர்வுக் குழுவிற்கு (Select Committee) அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இருப்பினும், அனைத்து எதிர்ப்புகளையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் எம்எல்ஏ ஜாகிர் உசேன் சிக்தர் இதுகுறித்து பேசும்போது, கடந்த 2018-ஆம் ஆண்டே சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் தேவையில்லை என்று கருத்து தெரிவித்திருந்தது என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், ஒருவேளை அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வர விரும்பினால், அனைத்துத் தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்டத்தை அவசரமாக நிறைவேற்றுவது சமூகத்தில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. என்னதான் எதிர்ப்புகள் கிளம்பினாலும், மத்திய அரசின் முக்கிய கொள்கையான பொது சிவில் சட்டத்தை அசாம் அரசு தற்போது வெற்றிகரமாகச் சட்டமாக்கியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.