Polymer Rupee Notes Polymer Rupee Notes
இந்தியா

"பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்" - ஆர்.பி.ஐ. திட்டம்

ரூபாய்நோட்டுக்கள் எளிதில் கிழியும் தன்னை உள்ளதால், இனி பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க ஆர். பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

மாலை முரசு செய்தி குழு

இந்தியாவில் தற்போது பயன்படுத்தும் ரூபாய்நோட்டுக்கள் எளிதில் கிழியும் தன்னை உள்ளதால், இனி பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க ஆர். பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

தற்போது நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்கள் காகிதத்தால் தயாரிக்கப்பட்டது என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் அது முற்றிலும் தவறானது. தற்போது நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்கள், காட்டன் மற்றும் லினன் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த ரூபாய் நோட்டுக்கள் எளிதில் கிழிந்து விடும், கசங்கி விடும் மற்றும் அழுக்காகிவிடும் தன்மை கொண்டது. இதனால் கிழிந்த ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக புதிதாக ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க வேண்டிய தேவை ஆர்பி.ஐ.க்கு ஏற்படுகிறது.

தற்போது பயன்பாட்டில் உள்ள காகித நோட்டுகள் விரைவில் பழுதடைவதால் அவற்றை மீண்டும் அச்சிடுவதற்கான செலவு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2024–25 நிதியாண்டில் இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவு 6,372 கோடியைத் தாண்டியுள்ளது. அதே நேரத்தில், சுமார் 23.8 பில்லியன் சேதமடைந்த நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதற்கான செலவு அதிகரித்துவருவதால், எளிதில் கிழியாத, கசங்காத பிளாஸ்டிக் அல்லது பாலிமர் ரூபாய் நோட்டுக்களை தயாரிக்க ஆர்.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

பாலிமர் நோட்டுக்கள் என்றால் என்ன?: பாலிமர் நோட்டுகள் என்பது பருத்தி அல்லது காகிதத்திற்குப் பதிலாக பாலிப்ரோப்பிலீன் (Polypropylene) எனப்படும் மெல்லிய, நெகிழ்வான பிளாஸ்டிக் பொருளால் தயாரிக்கப்படும் பணத்தாள்கள் ஆகும். இவை வழக்கமான காகித நோட்டுகளை விட அதிக பாதுகாப்பு அம்சங்களையும் நீண்ட ஆயுட்காலத்தையும் கொண்டுள்ளது.

பாலிமர் ரூபாய் நோட்டுக்களால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம்...

நீடித்து உழைக்கும்: காகித ரூபாய் நோட்டுக்களை விட இந்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள், 3 முதல் 4 மடங்கு நீண்ட ஆயுள் காலம் உழைக்கும்.

மேம்பட்ட பாதுகாப்பு: இந்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதால், கள்ள நோட்டுக்களாக உருவாக்குவது கடினம் என்பதால் இது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

சுத்தம் மற்றும் சுகாதாரம்: இந்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள், அத்தனை எளிதில் எண்ணெய், நீர் மற்றும் அழுக்கு கரையை உறிஞ்சுவது இல்லை. இதனால் இந்த ரூபாய் நோட்டுக்களில் கிருமிகள் தங்குவதில்லை. இதனால், இது சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் உள்ளது.

நீண்டகால பயன்பாடு: தற்போதைய ரூபாய் நோட்டுக்களை காட்டிலும், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள், நீண்டகாலத்திற்கு தேய்மானம் அடையாமல் மடிப்புகள், கிழிசல்கள் ஏற்படாமல் இருப்பதால் இவை நீண்டகாலம் உழைக்கும்.

சுற்றுச் சூழலுக்கு உகந்தது: இந்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் சுற்றுச் சூழலுக்கு உகந்தது என்று கூறப்படுகிறது. பிளாஸ்டிக் எப்படி சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக இருக்க முடியும் என்று யோசிப்பது சரிதான். ஆனால், பொதுவாக பிளாஸ்டிக் பொருட்களை மண்ணில் தூக்கி எரிந்ததால்தான் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படும். ஆனால் ரூபாய் நோட்டுக்களை யாரும் மண்ணில் தூக்கி எறியப்போவதில்லை. அத்துடன், அந்த ரூபாய் நோட்டுக்களை மறு சுழற்சி மூலம் புதிய பொருட்கள் தயாரிக்கலாம். அத்துடன் நீண்ட காலம் இருக்கும் என்பதால் அடிக்கடி அச்சடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. எனவே சுற்றுச்சுழலுக்கு ஏற்றதாகவே உள்ளது.

ஏ.டி.எம்.-மில் வருமா?: ஏ.டி.எம். மற்றும் பண இயந்திரங்களில் இந்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் சிக்காமல் தங்கு, தடையின்றி வரும். அந்த வகையில் இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்படும்.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை மடிக்க முடியுமா?: பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு என்றால் மடித்து பர்சில் வைக்க முடியுமா? அல்லது பேக்கில் வைக்க முடியுமா என்ற சந்தேகம் எழலாம். இந்த ரூபாய் நோட்டுக்களை மடித்து வைக்க முடியும். ஆனால் அதிக அழுத்தம் கொண்டு மடிக்க கூடாது.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?: பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களில் எத்தனையோ நன்மைகள் இருந்தாலும், ஒரு சில சங்கடங்கள் உள்ளன. காதிக நோட்டுக்களை விட, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதற்கான செலவு அதிகரிக்கும். பாக்கெட்டுக்களில் மடித்து வைப்பதில் சிரமம் மற்றும் வழுவழுப்பான தன்மை கொண்டுள்ளதால், எண்ணும் போது ஒன்றோடு ஒன்று ஒட்டுக் கொள்ளும் என்பதால் கவனத்துடன் எண்ண வேண்டும். மேலும் ஈரமான கைகளில் ஒட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் எப்போது உருவாக்கப்பட்டது?: 1988-ம் ஆண்டு பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை முதன் முதலில் ஆஸ்திரேலியா நாடு அறிமுகப்படுத்தியது. தற்போது சிங்கப்பூர், மலேசியா, கனடா, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து, இந்தியாவும் இந்த நாடுகள் வரிசையில் சேரவுள்ளது. ஒரு சில சங்கடங்கள் இருந்தாலும், அழுக்கான, சேதமடைந்த, கிழிந்த ரூபாய் நோட்டுகளின் தொல்லை, இனி இருக்காது என்பதால், இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமையும் என்பது பெரும்பாலானவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.