ஈரானுக்கு உதவி செய்த இந்திய சகோதரர்கள்.. சவுதி சிறையில் சிக்கித் தவிப்பு.. கண்ணீர் விடும் குடும்பம்!

எந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரமோ குடும்பத்தினருக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை
Indian brothers in saudi prison
Published on
Updated on
2 min read

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரஹீப் மற்றும் முகமது ஜாபர் ஆகிய இரண்டு இந்திய சகோதரர்கள், சவுதி அரேபியாவில் போலீஸாரின் பிடியில் சிக்கித் தவிப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக சவுதியின் தம்மாம் பகுதியில் வேலை செய்து வந்த இவர்கள், ஈரானில் உள்ள மக்களுக்கு உதவ நினைத்ததே இந்தச் சிக்கலுக்குக் காரணமாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தங்கள் தாயின் வேண்டுகோளுக்கிணங்க, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஈரானிய மக்களுக்கு உதவ நிதி அனுப்ப அவர்கள் முடிவெடுத்தனர்.

ஈரானிய தூதரகத்தின் இந்திய வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்ப ஜாபர் திட்டமிட்டிருந்தார். அதன்படி, தனது தம்பியின் செல்போனைப் பயன்படுத்தி 200 ரியால்களை அவர் அனுப்பியுள்ளார். இந்த ஒரு சிறிய உதவி, அவர்களது வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியது. மார்ச் 27-ம் தேதி, அந்தப் பணம் அனுப்பப்பட்ட செல்போன் எண்ணை வைத்துச் சவுதி பாதுகாப்புப் படையினர் ரஹீப்பை முதலில் கைது செய்து அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து, மார்ச் 30-ம் தேதி ஜாபரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அப்போது முதல், அவர்கள் இருவரும் எங்கே இருக்கிறார்கள், எந்தச் சூழலில் இருக்கிறார்கள் என்பது குறித்த எந்தத் தகவலும் குடும்பத்தினருக்குத் தெரியவில்லை.

சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் அரசியல் மோதல்களே இந்தச் சகோதரர்களின் கைதுக்குக் காரணமாக இருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். ஈரானுக்கு ஆதரவாகப் பணம் அனுப்பியதே இவர்களின் கைதுக்குக் காரணம் என்று சொல்லப்பட்டாலும், சவுதி போலீஸார் இது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. கைது செய்யப்பட்டதற்கான சரியான காரணமோ அல்லது அவர்கள் எந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரமோ குடும்பத்தினருக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதனால், தங்கள் பிள்ளைகளின் நிலை என்னவென்று தெரியாமல் தந்தை ஹசன் அப்பாஸ் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் தந்தை ஹசன் அப்பாஸ், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு உருக்கமான வீடியோ கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தனது பிள்ளைகள் இருவரும் சவுதியில் காணாமல் போயிருப்பதாகவும், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் கதறியுள்ளார். அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மவுலானா யாசூப் அப்பாஸ், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றுள்ளார். துபாய் விமான நிலையத்தில் முகமது ஷாபி என்ற மற்றொரு இந்தியரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், மத்திய அரசு மத்திய கிழக்கு நாடுகளில் சிறைவைக்கப்பட்டுள்ள இந்தியர்களை மீட்க விரைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து இந்தியத் தூதரகத்தின் சமூக நலப் பிரிவைச் சேர்ந்த சுமித் குமார், குடும்பத்தினருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அளித்துள்ளார். பாதுகாப்பு தொடர்பான விவகாரம் ஒன்றிற்காகவே அவர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாகச் சவுதி வெளியுறவு அமைச்சகத்தைத் தாங்கள் தொடர்பு கொண்டுள்ளதாகவும், கூடுதல் விவரங்களுக்காகக் காத்திருப்பதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஈரானுக்கு ஆதரவாக நிதி உதவி அளித்து வரும் சூழலில், இந்தச் சகோதரர்களின் நிலை சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com