திருமண இடமாக மாறிய மயானம்  திருமண இடமாக மாறிய மயானம்
இந்தியா

இது என்னப்பா புதுசா இருக்கு! 'மயானத்தில் நடந்த கல்யாணம்' - மதநம்பிக்கை புண்படுத்தியதா 'டெஸ்டினேஷன் வெட்டிங்?'

உத்தரகாண்டில் அல்மோராவில், ஒரு தம்பதியினர் தங்கள் திருமண இடமாக ஒரு மயானத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

Vinvizhi Leninton

நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ளும் ஒரு சிறிய, தனிப்பட்ட நிகழ்வாக, ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று திருமணம் செய்து கொள்வது என்பது அனைவரின் கனவாகும். இதற்காக கடற்கரை பக்கம், இயற்கை எழில் சூழ்ந்த பக்கம் என்று பல இடங்களுக்கு மக்கள் பணம் செலவழித்து சென்று திருமணத்தை நடத்துகின்றனர். இதற்காக மக்கள் நிறைய பணம் செலவழிப்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் சில சமயங்களில், வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியில், கடலுக்கு அடியில், மலை உச்சியில், ஆபத்தான பகுதிகள் போன்ற இடங்களிலும் சென்று திருமணம் செய்கின்றனர். அந்த விதத்தில் உத்தரகாண்டில் அல்மோராவில், ஒரு தம்பதியினர் தங்கள் திருமண இடமாக ஒரு மயானத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

ஒரு ரிசார்ட்டால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் திருமணம், தற்போது கடும் விமர்சனப் புயலைச் சந்தித்து வருகிறது. ஆனால், காசியாபாத்தைச் சேர்ந்த இந்தத் தம்பதியினர் ஒரு மயானத்தில் திருமணம் செய்துகொண்டு சமூகவலைத்தளத்தில் சரி மக்களிடமும் சரி அவப்பெயர் பெற்று வருகின்றனர். ராம்கங்கா மற்றும் படங்கர் நதிகள் சங்கமிக்கும் இடமான மார்ச்சுலாவில் உள்ள ஒரு மயானத்தை அவர்கள் தங்கள் திருமண இடமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். மாலை மாற்றுதல் உட்பட அனைத்து சடங்குகளும் அங்கேயே நடந்துள்ளது.

இந்த தம்பதிகளின் திருமணக் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பெரிதாக வெடித்து, மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தத் திருமணம் தங்களின் மத நம்பிக்கைகளுக்கும் மரபுகளுக்கும் அவமானம் என்று கூறி, உள்ளூர் மக்கள் கடும் கோபத்தில் கொந்தளிக்கத் தொடங்கினர். இதனையடுத்து இந்தச் சம்பவம் சமூகவலைத்தளத்தில் ஒரு பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. சிலர் இதை 'தனித்துவமானது' என்று அழைத்தாலும், பெரும்பான்மையானோர் இதை சமூக மற்றும் மத நெறிகளின் மீறலாகவே பார்க்கின்றனர். சர்ச்சைக்குரிய இந்தத் திருமணத்திற்கு எதிராகப் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. "இறுதிச் சடங்குகள் செய்யப்படும் இடத்தில் கொண்டாட்டம் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும், அது "தங்களின் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குகிறது" என்றும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இதற்கு எதிராக நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பொது இடத்தில் எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு முன் அனுமதி தேவை என்று வட்டாட்சியர் ஆபித் அலி தெரிவித்தார். "அனுமதியின்றி மயானத்தில் நிகழ்ச்சி நடத்துவது சட்ட மீறலாகும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாங்கள் விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்," என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், திருமணத்தை ஏற்பாடு செய்த ரிசார்ட் மேலாளர் ராகேஷ் சர்மா, தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். மணமக்களுக்கு இடம் குறித்த முழு விவரங்களும் முன்பே வழங்கப்பட்டதாகவும், அவர்களே அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததாகவும் அவர் கூறினார். இந்தச் சம்பவம், உத்தரகாண்டில் வேகமாக வளர்ந்து வரும் 'டெஸ்டினேஷன் வெட்டிங்' எனப்படும் திருமணங்கள் குறித்த சில தீவிரமான கேள்விகளையும், விவாதங்களையும் எழுப்புகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்