

கடந்த வாரம் மும்பையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததற்கு, பிரியாணிக்கு பின் தர்பூசணி சாப்பிட்டதே காரணம் என விசாரணை நடத்தப்பட்டது.பிரபலமான கோடைக்காலப் பழமான தர்பூசணியை பாதுகாப்பாக உட்கொள்வது குறித்த விவாதங்களையும் தூண்டியுள்ளது. மேலும், சில பகுதிகளில் அதன் விலை சரிந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இருப்பினும், அவர்களின் இறப்பிற்கு காரணம் தர்பூசணி போன்ற பாதிப்பில்லாத ஒரு பொருள் அல்ல, மாறாக ஏதேனும் நஞ்சு கலந்த பொருள் உட்கொண்டதாக சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் சில உறுப்புகள் பச்சை நிறமாக மாறியுள்ளது. பெரும்பாலும் விஷம் பரவினால் மட்டும் உடல் நிறம் மாறும். எனவே இதற்கு தர்பூசணி காரணம் இல்லை வேறு ஏதேனும் விஷ பொருளே என்பது தெரியவந்துள்ளது. உட்கொண்ட பொருளில் விஷம் கலந்திருக்கலாம் என்பதாக தெரிகிறது.
இந்த மர்மத்தை மேலும் கூட்டும் விதமாக, பொதுவாகக் கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவச் சூழல்களில் வழங்கப்படும் சக்திவாய்ந்த வலி நிவாரணியான மார்ஃபின், அப்துல்லா டொகாடியாவின் உடலில் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ஃபின் என்பது வலி நிவாரணி, இதை மருத்துவர் பரிந்துரையின் பேரிலே எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இது தவறாக உட்கொண்டால் மயக்கம், மலச்சிக்கல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். இறந்தவர் உடலில் இருந்து கண்டறியப்பட்ட இந்தக் கண்டுபிடிப்பு இன்னும் சந்தேகத்திற்குரிய ஒன்றாக மாறி, புலனாய்வாளர்கள் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இறப்புகளுக்கும் தர்பூசணிக்கு இடையே இதுவரை நேரடித் தொடர்பு எதுவும் இல்லை என்றும், அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தலுக்குப் பிறகே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் நடந்த இந்த சம்பவத்தை விபத்து மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையை தொடங்கியது காவல்துறை. புலாவ் சாப்பிட்டு எந்த உடல் உபாதைகளும் இல்லாமல் இருந்த குடும்ப விருந்தினர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அந்தக் குடும்பத்தினர் மன அழுத்தத்தில் இருந்தார்களா என்பது குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது. மேலும் அவர்கள் உட்கொண்ட தர்பூசணியில் ஏதேனும் வெளிப்புற நச்சுப் பொருளோ அல்லது கலப்படமோ இருந்ததா என்பது குறித்தும் மாநில FDA விசாரித்து வருகிறது.
பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் இன்னும் தங்கள் கருத்தை வெளியிடவில்லை. மேலும் நான்கு உடல்களின் உள்ளுறுப்புகள் வேதியியல் பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்த பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மொபைல் ஆக்சஸரீஸ் கடை நடத்தி வந்த 45 வயதான உள்ளூர் வியாபாரி அப்துல்லா டோகாடியா , அவரது மனைவி 35 வயதான நஸ்ரின், மற்றும் குழந்தைகள் 13 வயதான ஜைனப், 16 வயதான ஆயிஷா ஆகியோர் கடந்த சனிக்கிழமை அன்று ஐந்து உறவினர்களுக்கு மட்டன் புலாவ் பரிமாறி இரவு விருந்து அளித்தனர். உறவினர்கள் சென்ற பிறகு, அந்தக் குடும்பத்தினர் அதிகாலை 1 மணியளவில் தர்பூசணி சாப்பிட்டுள்ளனர். அதிகாலை 5 மணியளவில் அவர்கள் உடல் நலம் பாதிக்கபட்டத்தாக சொல்லப்படுகிறது. அனைவருக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகள் இருந்துள்ளது, சில மணி நேரங்களிலேயே அவர்கள் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களின் மூளை, இதயம் மற்றும் குடல் உள்ளிட்ட சில உறுப்புகள் பச்சை நிறமாக மாறி இருந்ததாக முதற்கட்ட தடயவியல் சோதனைகள் தெரிவிக்கின்றன என என்டிடிவிக்கு தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வழக்கை ஆராய்ந்த மருத்துவர்கள், அறிகுறிகளும் உள் பரிசோதனை முடிவுகளும் ஒரு வழக்கமான food poisoning வழக்கோடு ஒத்துப்போகவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்