பெங்களூருவில் வசித்து வரும் ஒருவர் தான் வசிக்கும் வீட்டுக்கு ஒரு மாதத்திற்கு ₹16,000 தண்ணீர் கட்டணம் வந்திருப்பதாகப் சமூக வலைதளமான Reddit-ல் பதிவிட்டுள்ளார்.
அந்த நபர் தனது பதிவில், "நாங்கள் இருவரும் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள். வீட்டில் அதிக நேரம் இருப்பதில்லை. ஆனால், ஒவ்வொரு மாதமும் சுமார் ₹10,000 தண்ணீர் கட்டணம் வருகிறது. இந்த மாதம் மட்டும் ₹16,000 பில் வந்துள்ளது. இது குறித்து வீட்டு உரிமையாளரிடம் கேட்டால், சரியான பதில் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தண்ணீர் வருவதே இல்லை என்றும், இந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூருவில் தொடரும் அவலம்
இந்த பதிவைப் பார்த்த மற்ற பயனர்கள், இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல என்றும், பெங்களூருவில் பல வாடகைதாரர்கள் இது போன்ற பிரச்சனைகளைச் சந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பலர், இரண்டு பேர் இருக்கும் வீட்டிற்கு ₹300 கூட பில் வராது என்றும், இந்த கட்டணம் மிக மிக அதிகம் என்றும் கருத்து தெரிவித்தனர். ஒரு பயனர், தனது வீட்டில் நான்கு பேர் வசித்தாலும் மாதத்திற்கு ₹15,000 முதல் ₹20,000 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்துவதாகவும், அதற்கு ₹2,000-க்கு மேல் பில் வந்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், தனது வீட்டு உரிமையாளர் ஒவ்வொரு மாதமும் போர்வெல் மோட்டார் பழுதுபார்ப்புச் செலவுக்கு ரூ.300 கேட்டதாகவும், அதை தர மறுத்தால் வீட்டைக் காலி செய்யச் சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்று வாடகைதாரர்களுக்கு நியாயமற்ற கோரிக்கைகளை வைக்கும் போக்கு பெங்களூருவில் அதிகரித்து வருவதாகப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
சில சமயங்களில், வாட்டர் மீட்டரில் காற்று நுழைந்து, தண்ணீர் ஓடாவிட்டாலும் மீட்டர் ஓட ஆரம்பித்துவிடும். இதனால், பயன்பாடு இல்லாத போதும் அதிக கட்டணம் வர வாய்ப்புள்ளது. சில வீட்டு உரிமையாளர்கள், அனைத்து வாடகைதாரர்களுக்கும் சேர்த்து வரும் மொத்த பில் தொகையை, வாடகைதாரர்களிடையே பிரித்து, ஒரு குறிப்பிட்ட தொகையை அதிகமாக வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் பணத்தை அவர்கள் லாபமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் என்ன செய்யலாம் என்பதற்கான சில முக்கியமான குறிப்புகள் இங்கே:
வீட்டு உரிமையாளர் பில்லைக் கொடுக்க மறுத்தால், நீங்கள் நேரடியாக BWSSB (பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்ப் பிரிவு) அலுவலகத்திற்குச் சென்று, உங்கள் வாட்டர் மீட்டர் எண்ணைக் கொடுத்து, கடந்த மாத பில் விவரங்களைச் சரிபார்க்கலாம்.
உங்கள் வீட்டில் உள்ள வாட்டர் மீட்டரில் ஏதேனும் கோளாறு உள்ளதா, அல்லது தண்ணீர் கசிவு இருக்கிறதா என்பதை உடனடியாகச் சரிபார்க்கவும்.
உங்கள் வாடகை ஒப்பந்தத்தில் (Rental Agreement) தண்ணீர் கட்டணம் குறித்த விதிமுறைகள் தெளிவாக உள்ளதா என்பதை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கவும். ஒப்பந்தத்தில் இல்லாத கட்டணங்களைச் செலுத்த வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. வீட்டு உரிமையாளர் தொடர்ந்து தொந்தரவு செய்தால், ஒரு வழக்கறிஞரை அணுகி சட்ட ஆலோசனை பெறுவது நல்லது. அடிப்படை வசதிகளை (தண்ணீர், மின்சாரம்) நிறுத்த வீட்டு உரிமையாளருக்கு உரிமை இல்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.