டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ஜென் சி போராட்டத்தின்போது, காவல்துறையினர் மட்டுமல்லாமல், வலதுசாரி வன்முறைக் கும்பலும் போராட்டக்காரர்களைத் தாக்கியதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
போராட்டக்காரர்களுக்கு நியாயம் கேட்டு, காங்கிரஸ் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் அவையைப் புறக்கணித்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) போராட்டத்தின்போது, மாணவி நிஷுவின் தந்தை சஞ்சய் குமாரின் மண்டையைப் பிளந்து, ‘ஆறு தையல்கள்’ போட வைத்ததாக பாட்காஸ்ட் ஒன்றில் ஸ்வதந்திர பாரத்வாஜ் என்ற இந்துத்துவா ஆதரவாளர் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சய் தனது மகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு தலித் தந்தை. இவரது தலையில் 60 தையல்கள் போடும் அளவுக்கு மண்டையை உடைத்ததாக பாரத்வாஜ் கூறியுள்ளார். ஆம்புலன்ஸில் அவர் உயிருக்கு போராடுவதைப் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.
“நான்தான் அந்த ஆள் மண்டையை உடைச்சேன்... என் மீது கொலை முயற்சி வழக்கு (Section 307) பாயும்... ஆனா, போலீஸ் என்னை ஜெயில்ல கூட போடல, ராத்திரி முழுக்க ஜாலியா சுத்திட்டு இருந்தேன்!” என்று கெத்தாகப் பேசியுள்ளார் ஸ்வதந்திர பாரத்வாஜ்.
மறுபக்கம், 14 வயது மாணவி நிஷுவுக்கு ஆன்லைனில் பாலியல் மிரட்டல்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அந்தப் பாட்காஸ்டில், இந்துத்துவ சித்தாந்தம் உருவாக்கிய நிலம், காதல், உமிழ்நீர் ஜிகாத் குறித்து பெருமையாகப் பேசியுள்ளார் பாரத்வாஜ். பெண்களுக்கு எதிராக பாலியல் மிரட்டல் விடுப்பதையும் சாதாரணமாக்கும் விதமாகப் பேசியுள்ளார். இவரைப் போன்ற நபர்கள் சாதி, மதப் பெருமிதங்களின் விளைச்சல் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau - NCRB) தரவுகளின்படி, இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், அனைத்து வழக்குகளிலும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இல்லை. 2024ஆம் ஆண்டின் முடிவில், SC/ST (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் பதிவான 2.87 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதேவகையில், ஸ்வதந்திர பாரத்வாஜ் இந்தச் சம்பவத்துக்கு மறுநாளே வீதிகளில் சுதந்திரமாகத் திரியத் தொடங்கிவிட்டார். கபில் மிஸ்ரா என்ற பாஜக தலைவர் தலையீட்டால், தன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
இந்த கபில் மிஸ்ரா யார் என்றால், 2020ஆம் ஆண்டு டெல்லியில் சிஏஏ (CAA) போராட்டம் நடந்தபோது, காவல் ஆணையர் அருகில் இருக்கும்போதே, “அதிகாரிகள் மூன்று நாட்களில் போராட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், நானும் எனது ஆதரவாளர்களும் இந்த விஷயத்தை எங்கள் கையில் எடுத்துக்கொள்வோம்” என மிரட்டல் விடுத்தார்.
தனியார் செய்தி நிறுவனம் கூறுவதன்படி, இந்த வீடியோ தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டபோதும், அவர் எந்தச் சிக்கலும் இல்லாமல் தப்பித்தார். கட்சியில் அவருக்கு உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
பாரத்வாஜ் தற்போது மிதப்பாகப் பேசிய கருத்துக்கள் வைரலான நிலையில், தனது நிலையில் இருந்து அந்தர்பல்டி அடித்துள்ளார். என்.டி.டி.வி. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த விளக்கத்தில், “நான் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்! அன்னைக்கு என்னைக் கூட்டமே சேர்ந்து லிஞ்ச் (கும்பல் தாக்குதல்) பண்ணப் பார்த்தாங்க... தற்காப்புக்காகத்தான் கையில் இருந்த இரும்புக் கடையால் அடிச்சேன். மத்தபடி பாட்காஸ்ட்ல சொன்னதெல்லாம் சும்மா ‘ஜோக்’கா சொன்னது” எனப் பேசியுள்ளார்.
பாரத்வாஜின் இந்த ‘கடா’ கதையைக் கேட்டு கொதித்துப்போன CJP ஆதரவாளர்கள், செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா தலைமையில் டெல்லியில் கூடியுள்ளனர். இவர்களுடன் ‘ஆசாத் சமாஜ் கட்சி’ தலைவர் சந்திரசேகர் ஆசாத்தும் களத்தில் குதிக்க, பட்டேல் சௌக்கிலிருந்து பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையம் வரை வீதியில் பேரணியாகச் சென்று கண்டனங்களை எழுப்பியுள்ளனர்.
சௌரவ் தாஸ், “அமைதியா போராட்டம் பண்ணிட்டு இருந்த எங்களோட தலித் தொண்டர் சஞ்சய் மேல தாக்குதல் நடத்தியிருக்காங்க. இது அப்பட்டமான கொலை முயற்சி! போலீஸ் உடனே SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் கொலை முயற்சி வழக்கும் போட வேண்டும்” எனப் பேசியுள்ளார்.
இந்த விவகாரம் தீயாகப் பரவ, டெல்லி போலீஸார் அவசர அவசரமாக ஒரு ‘ஃபேக்ட் செக்’ அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், RML மருத்துவமனை அறிக்கையைச் சுட்டிக்காட்டி, “சஞ்சய் குமாருக்கு ஏற்பட்டது ‘சாதாரணக் காயம்’ தான். கடையால்தான் அடிக்கப்பட்டது, எந்தப் பயங்கர ஆயுதமும் பயன்படுத்தப்படவில்லை. ‘மண்டை பிளந்தது’ என்பதெல்லாம் பொய்” எனக் கூறியுள்ளனர்.
ஆனாலும், சந்திரசேகர் ஆசாத் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவி நிஷுவின் தொடர் அழுத்தத்தால், டெல்லி போலீஸ் SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சஞ்சய் குமாருக்கு மீண்டும் புதிய மருத்துவப் பரிசோதனை நடத்தி, பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ‘கொலை முயற்சி வழக்கு’ (Section 307) சேர்க்கப்படும் என்றும், அடுத்த 72 மணி நேரத்திற்குள் ஸ்வதந்திர பாரத்வாஜ் கைது செய்யப்படுவார் என்றும் காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் தனக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவர்கள் மீதும் புகார் அளித்துள்ள நிஷு, “எங்களுக்குப் பாதுகாப்பு வேணும்... எப்போ யார் தாக்குவாங்கனு பயமா இருக்கு!” என்று கண்ணீருடன் பேசியிருக்கிறார்.
தன்னை யாராலும் தொட முடியாது என தொடர்ந்து சொல்லிவந்த பரதவாஜை டெல்லி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.