இந்தியா

15 வருஷம் தெருத்தெருவா அலைஞ்சேன்: விஜய் அரசியலில் ஜெயிச்சது எப்படி? பவன் கல்யாண் வேதனை!

கட்-அவுட்கள் மற்றும் ஹோலோகிராம் விளம்பரங்களை வைத்துக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாகத் தேர்தலைச் சந்தித்து

மாலை முரசு செய்தி குழு

ஆந்திராவின் துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் சமீபத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் மிகவும் வெளிப்படையாகத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். கடந்த 15 ஆண்டுகளாகத் தான் மேற்கொண்ட அரசியல் பயணத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் புதிய முதல்வரான விஜய்யின் அரசியல் வெற்றியைப் பார்க்கும் போது தனக்குச் சற்று பொறாமையாக இருப்பதாக வெளிப்படையாகக் கூறினார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய், இவ்வளவு குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அதைப் பார்க்கும் போது மற்றவர்களுக்கு அரசியல் பயணம் எவ்வளவு எளிதாக இருந்திருக்கிறது என்று தான் நினைப்பதாகத் தெரிவித்தார்.

மேடையில் சிரித்துக்கொண்டே பேசிய அவர், தற்போது தமிழக அரசியலைப் பார்க்கும் போது, அவர்கள் எதையும் கவலைப்படாமல் மிக எளிதாகச் சாதித்துவிட்டதாகத் தெரிகிறது, அதனால் தான் தனக்குப் பொறாமையாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். கட்-அவுட்கள் மற்றும் ஹோலோகிராம் விளம்பரங்களை வைத்துக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாகத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார். ஆனால், தான் கடந்த 15 ஆண்டுகளாகத் தெருத்தெருவாக அலைந்து கஷ்டப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார். ஒரு அரசியல் கட்சியை நடத்துவது என்பது லட்சக்கணக்கான மக்களை ஒன்றிணைக்கும் கடினமான காரியம் என்றும், ஒரு குடும்பத்தில் கூட ஒரு விஷயத்தில் அனைவரையும் சம்மதிக்க வைப்பது சிரமம் என்பதால், கட்சியைத் தொடங்கி சமூகத்தை மாற்ற முயன்றது மிகப்பெரிய ரிஸ்க் என்றும் அவர் தனது சிரமங்களை விளக்கினார்.

ஆந்திரா மற்றும் தமிழ்நாடு அரசியலை ஒப்பிட்டுப் பேசும்போது, இரண்டு மாநிலங்களின் அரசியல் சூழலும் முற்றிலும் மாறுபட்டது என்று அவர் தெளிவுபடுத்தினார். ஆந்திராவின் அரசியல் சூழலுக்கு ஏற்ப, தான் கூட்டணி அமைத்துச் செயல்பட்டதுதான் சரியான முடிவாக இருந்தது என்று அவர் வாதிட்டார். 2024-ம் ஆண்டு தனது தவெக (TVK) கட்சியைத் தொடங்கிய விஜய், மிகக் குறுகிய காலத்தில் 2026 தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளின் பிடியை முடிவுக்குக் கொண்டு வந்து முதல்வரானது வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

தென்னிந்தியாவில் சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் வெற்றி பெறுவது புதிதல்ல; எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்றவர்கள் சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்து முதல்வர்களாக உயர்ந்த வரலாறு உண்டு. அதே வரிசையில், 2014-ல் ஜனசேனா கட்சியைத் தொடங்கிய பவன் கல்யான், பல சறுக்கல்களைச் சந்தித்தார். 2019 தேர்தலில் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வென்றது, தானும் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். ஆனால், 'பவர் ஸ்டார்' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர், எதற்கும் அஞ்சாமல் தனது கட்சியை மெதுவாகக் கட்டியெழுப்பினார். இறுதியில், பி.ஜே.பி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து, 2024 ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட 21 இடங்களில் 21 இடங்களிலும் வென்று 100 சதவீத வெற்றியைப் பதிவு செய்தார். பிதாபுரம் தொகுதியில் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருக்கிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.