பீகார் தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் நிலையில் பீகாரில் கணவர் ஒருவர் தனது மனைவியை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனெனில் அந்த தாக்குதலுக்கு பின் இருக்கும் காரணம் அப்படி பட்டது. 18 வயது முடிந்த ஒருவர் ஓட்டளிப்பது என்பது ஜனநாயக கடமை மேலும் ஒருவர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பது தனிப்பட்ட உரிமை. யாரும் அவரை கேள்வி கேட்க முடியாது.
ஆனால் பீகாரை சேர்ந்த கணவர் ஒருவர் காங்கிரஸ் கூட்டணியில் நிற்கும் தேஜஸ்வி யாதவின் ஆதரவாளர் என அறியப்படுகிறது. எனவே காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என தனது குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களிடமும் தேஜஸ்வி யாதவுக்கு வாக்களிக்க கூறியுள்ளார். அதன்படி குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சென்று நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் வாக்களித்து விட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது அவரது மனைவி “நான் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வில்லை, பாரதிய ஜனதா கட்சிக்கு தான் வாக்களித்தேன்” என தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவியிடம் வாக்குவாதம் செய்து வீட்டிற்கு வெளியில் வைத்து பாஜகவிற்கு வாக்களித்ததற்காக சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை தனது கணவரிடமிருந்து மீட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்ததாக சொல்லப்படுகிறது. இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்து சிலர் அந்த கணவரை கைது செய்ய வேண்டும் எனவும், இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் சிலர் கணவன் மனைவி இருவருமே திருமணத்திற்கு முன்பே தங்களது அரசியல் நிலைப்பாடுகளை பேசிக்கொண்டு ஒத்துப்போனால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவை கைப்பற்றிய பீகார் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.