இந்தியா

செல்போனில் மூழ்கிய மனைவி... ஆத்திரத்தில் கணவன் வெறிச் செயல்!!

Malaimurasu Seithigal TV

கர்நாடக மாநிலம் மண்டியாவில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து கொன்ற கணவர், மாமனார் உதவியுடன் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கபிலு கிராமத்தில் வசித்து வந்தவர்கள் ஸ்ரீநாத் - பூஜா தம்பதி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில், பூஜா செல்போனிலேயே பொழுதை போக்கி வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் செயலியில் திரைப்பட பாடல்களுக்கு ரீல்ஸ் போட்டு அதன் மூலம் ஏராளமான பாலோவர்களை கொண்டுள்ளார் பூஜா.

குடும்பத்தையும், குழந்தையையும் பார்த்துக் கொள்வதை விட எந்நேரமும் இன்ஸ்டாகிராமிலேயே இருப்பதால் கோபமடைந்த ஸ்ரீநாத், பலமுறை பூஜாவை எச்சரித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமே கதி என இருந்த பூஜா, வேறு யாருடனோ திருமணம் கடந்த உறவில் இருந்ததாக சந்தேகமும் முளைத்தது.

இதையடுத்து கடந்த வாரம் வழக்கம் போல செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்த பூஜாவுடன் கடுமையான தகராறில் ஈடுபட்டார் ஸ்ரீநாத். ஆனால் அதற்கு மனைவி பிடி கொடுக்காமல் நழுவியதால் ஆத்திரமடைந்த ஸ்ரீநாத், பூஜாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பூஜாவின் தந்தையான சேகர் என்பவரிடமே தெரிவித்துள்ளார். தனது மகளை மருமகன் கொலை செய்து விட்டார் என்பதை நினைத்து அதிர்ச்சியடைந்தவர், அதனை மறைப்பதற்கே உடந்தையாக இருந்துள்ளார். பின்னர் ஸ்ரீநாத்தும், மாமனார் சேகரும் சேர்ந்து பூஜாவின் உடலை பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்று, கல்லைக் கட்டி ஆற்றில் வீசியுள்ளனர். பின்னர் சில நாட்களாக கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய ஸ்ரீநாத், தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு போலீசில் சரணடைந்தார். 

மனைவி செல்போனில் மூழ்கினார் என்பதற்காக அடித்துக் கொன்று ஆற்றில் வீசிய கணவனின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.