மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, நேற்று நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. இருப்பினும், தான் இந்தத் தேர்தலில் தோற்கவில்லை என்றும், பாஜவின் வெற்றி என்பது மக்களால் வழங்கப்பட்டது அல்ல, அது "திருடப்பட்டது" என்றும் கூறி மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தான் தோற்காததால் ராஜ் பவனுக்குச் சென்று ராஜினாமா கடிதத்தைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் சுமார் 100 இடங்கள் திருடப்பட்டுள்ளதாக ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்த மம்தா, மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் இரண்டும் இணைந்து இந்தச் சதியில் ஈடுபட்டதாக இன்று பகிரங்கமாகப் புகார் கூறினார். நீதித்துறை சரியாகச் செயல்படாத போதும், தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக இருக்கும் போதும், மத்திய அரசு ஒரு கட்சி ஆட்சியை மட்டுமே விரும்பும் போதும் ஜனநாயகம் முறையாக இயங்காது என்றும், இது உலக நாடுகளுக்குத் தவறான செய்தியைக் கொண்டு செல்லும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் மிகவும் மோசமான விளையாட்டை விளையாடியுள்ளதாகக் கூறிய மம்தா, தங்களுக்கு உண்மையான எதிரி பாஜ அல்ல, தேர்தல் ஆணையம் தான் என்று கடுமையாகச் சாடினார். மத்திய அரசு நேரடியாகத் தேர்தலில் தலையிடுவதாகக் குற்றம் சாட்டிய அவர், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் பீகார் மாநிலங்களில் செய்தது போலவே இப்போது வங்காளத்திலும் தேர்தலைத் திருடிவிட்டதாகத் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது தமக்குத் துளியும் நம்பிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வாக்குப்பதிவின் போது தான் தாக்கப்பட்டதாக 71 வயதான மம்தா பானர்ஜி ஒரு திடுக்கிடும் புகாரை முன்வைத்துள்ளார். தனது முதுகு மற்றும் வயிற்றுப் பகுதியில் தாக்கப்பட்டதாகவும், அந்தச் சமயத்தில் திட்டமிட்டே சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து தான் வெளியே தள்ளப்பட்டதாகவும், ஒரு பெண்ணான தன்னிடம் மிகவும் மோசமாகப் பழகுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். மத்தியப் படைகள் இப்படி நடந்துகொள்வது அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய அவர், இதற்கு முன்பு இருந்த பாஜக ஆட்சிகளில் கூட இது போன்ற நிலையைப் பார்த்ததில்லை என்றார்.
திரிணாமுல் காங்கிரஸின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இப்போது தெரிவிக்க முடியாது என்று கூறிய மம்தா, 'இந்தியா' (INDIA) கூட்டணியின் தலைவர்கள் தன்னைத் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார். தங்களது கட்சியின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்படும் இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்த ஐந்து எம்பிக்கள் கொண்ட ஒரு குழுவை அமைக்க உள்ளதாகவும், தேர்தல் முறைகேடுகள் குறித்து உண்மை கண்டறியும் பணிகளைத் தனது கட்சி மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.