இந்தியா

சிங்கப்பூரில்.. வரும் 2027 முதல்.. எந்தெந்த Work Pass-க்கு எவ்வளவு சம்பளம்? முழு விவரமும் இங்கே

ஏற்கெனவே அங்கு வேலை பார்த்து வருபவர்களுக்கும் தற்போது முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது

Muthu Lakshmi

பொதுவாக இந்தியர்களுக்கு வெளிநாட்டு வேலை என்பது ஒரு கனவாக இருக்கும். அதிலும் குறிப்பாக, அதிக இந்தியர்கள் விரும்பும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இந்நிலையில், சிங்கப்பூரில் வேலை பார்க்க விரும்புபவர்களுக்கும், ஏற்கெனவே அங்கு வேலை பார்த்து வருபவர்களுக்கும் தற்போது முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 2027 ஜனவரி 1 முதல் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான Employment Pass (EP), S Pass ஆகிய பணி அனுமதிகளுக்கான குறைந்தபட்ச மாத சம்பளம் உயர்த்தப்பட உள்ளது.

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ள இந்தப் புதிய சம்பள உயர்வு அட்டவணை படி ஊதியம் உயர்த்தப்படும். குறிப்பாக, விண்ணப்பதாரரின் வயது மற்றும் அவர்கள் பணிபுரியும் துறையைப் பொறுத்து சம்பளத் தகுதி மாறுபடும் என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படியில் எந்த பாஸ் வைத்திருப்பவர்களுக்கு எந்த வரம்பு என்று பார்க்கலாம்.

Employment Pass என்பது சிங்கப்பூரில் பணிபுரிய விரும்பும் மற்ற நாட்டினருக்கு வழங்கப்படும் அனுமதி பாஸ் ஆகும். இதற்கான குறைந்தபட்ச மாத சம்பளம் தற்போது பொதுத் துறைகளில் S5,600 ஆக உள்ளது. இது 2027 ஜனவரி 1 முதல் S6,000 ஆக உயர்த்தப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 4,40,000 ஆகும்.

அதேபோல்,பைனான்சியல் செக்டாரில் பணிபுரிய விரும்புபவர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் S6,200-ல் இருந்து S6,600 ஆக அதிகரிக்கிறது. இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 4,81,470 ஆகும். இதன் மூலம் பொதுத் துறை மற்றும் நிதி சேவை துறையில் S400-ம் குறைந்தபட்ச சம்பளத் தகுதி உயர்த்தப்படுகிறது.

S Pass - சம்பள வரம்பிலும் மாற்றம்!

நடுத்தரத் திறன் கொண்ட வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் S Pass பணிகளுக்கும் சம்பளம் உயர்த்தப்படுகிறது. இந்த விண்ணப்பதாரருக்குப் Degree அல்லது Diploma மற்றும் இதர தொழில்நுட்பத் தகுதிகள் இருக்க வேண்டும். S Pass  வைத்துள்ளவர்களுக்கு பொதுத் துறைகளில் S3,300 ஆக இருக்கும் குறைந்தபட்ச மாதச்சம்பளம், 2027 ஜனவரி முதல் S3,600 ஆக உயர்த்தப்படுகிறது. நிதிச் சேவைத் துறையில் தற்போது S3,800 ஆக உள்ள சம்பளம் S4,000 ஆக அதிகரிக்கிறது. அதாவது, பொதுத் துறைகளில் S300-ம், நிதி சேவை துறையில் S200-ம் சம்பளத் தகுதி உயர்த்தப்படுகிறது. வயது வரம்புக்கு ஏற்ப இது மாறுபடலாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தொகைகள் சிங்கப்பூர் டாலரில் (SGD) கணக்கிடப்பட்டுள்ளன. மேலும், இவை 23 வயது மற்றும் அதற்குக் கீழ் உள்ளவர்களுக்கான ஆரம்ப சம்பள வரம்புகளாகும்.

வயது அதிகரித்தால் சம்பளத் தகுதியும் அதிகரிக்குமா?

இந்தப் புதிய விதிகளில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் வயது அடிப்படையில் மாறுபடும் சம்பளத் தகுதியாகும். அதாவது, 23 வயதுடைய ஒருவர் பெற வேண்டிய குறைந்தபட்ச சம்பளமும், 35 அல்லது 45 வயதுடைய ஒருவர் பெற வேண்டிய குறைந்தபட்ச சம்பளமும் ஒரே மாதிரியாக இருக்காது. விண்ணப்பதாரரின் வயது அதிகரிக்க அதிகரிக்க, அவர் பெற வேண்டிய சம்பளத் தகுதியும் உயர்ந்து கொண்டே செல்லும்.

எனவே, சிங்கப்பூரில் வேலை தேடுபவர்கள் தங்களது வயதுக்கு ஏற்ற சம்பளத் தகுதியை முன்கூட்டியே தெரிந்துகொள்வது அவசியம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள வயதுகளுக்கு இடைப்பட்டவர்களுக்கும் தனித்தனி சம்பள வரம்புகள் உள்ளன.

ஏற்கெனவே சிங்கப்பூரில் வேலை செய்பவர்களுக்கு எப்போது புதிய விதி?

இந்த அறிவிப்பில் மற்றொரு முக்கியமான அம்சம், ஏற்கெனவே சிங்கப்பூரில் பணிபுரிந்து வருபவர்களுக்கான கால அவகாசம். புதிய சம்பள விதிகள் 2027 ஜனவரி 1 முதல் சமர்ப்பிக்கப்படும் புதிய Employment Pass மற்றும் S Pass விண்ணப்பங்களுக்குப் பொருந்தும். ஆனால், ஏற்கெனவே பணி அனுமதி பெற்றவர்களின் விசா புதுப்பித்தலுக்கு (Renewal) இந்த விதிகள் உடனடியாக அமலுக்கு வராது.

அதன்படி, 2027-ஆம் ஆண்டில் காலாவதியாகும் பணி அனுமதிகளைப் புதுப்பிப்பவர்களுக்கு பழைய சம்பள வரம்புகளே பொருந்தும். 2028 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு காலாவதியாகும் பணி அனுமதிகளைப் புதுப்பிக்கும்போதுதான் புதிய சம்பளத் தகுதி கட்டாயமாகும். இதன் மூலம் நிறுவனங்களுக்கும் ஏற்கெனவே பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் புதிய விதிகளுக்கு ஏற்ப தயாராகிக்கொள்ள கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Employment Pass பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்சச் சம்பளத்தைப் பெறுவது மட்டும் போதாது. இதனுடன் COMPASS (Complementarity Assessment Framework) எனப்படும் புள்ளிகள் அடிப்படையிலான மதிப்பீட்டிலும் விண்ணப்பதாரர் தகுதி பெற வேண்டும்.

இந்த மதிப்பீட்டில் சம்பளம், கல்வித் தகுதி, நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பன்முகத்தன்மை மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்புக்கு நிறுவனம் வழங்கும் ஆதரவு உள்ளிட்ட அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பொதுவாக, இந்த மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 40 புள்ளிகள் பெற வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு விதிவிலக்குகளும் உள்ளன.

மேலும், சம்பளத் தகுதியைக் கணக்கிடும்போது நிலையான மாதச் சம்பளம் (Fixed Monthly Salary) மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். போனஸ், ஓவர்டைம் தொகை மற்றும் மாறுபடும் ஊக்கத்தொகைகள் ஆகியவை இந்தக் கணக்கில் சேர்க்கப்படாது.

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு!

சிங்கப்பூர் அரசு வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான சம்பளத் தகுதியை உயர்த்துவதன் மூலம், அந்நாட்டின் உள்ளூர் ஊழியர்களின் சம்பள வளர்ச்சிக்கு ஏற்ப வெளிநாட்டுப் பணியாளர்களின் தகுதியையும் மாற்றியமைக்கிறது. இதனால், 2027 முதல் சிங்கப்பூரில் வேலை தேடுபவர்கள் தங்களது கல்வித் தகுதி, பணித்துறை, வயது மற்றும் எதிர்பார்க்கப்படும் சம்பளம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வேலைவாய்ப்புகளைத் திட்டமிட வேண்டியிருக்கும்.

குறிப்பாக, Employment Pass அல்லது S Pass மூலம் சிங்கப்பூருக்குச் செல்லத் திட்டமிடுபவர்கள், புதிய சம்பள வரம்புகளைத் தெரிந்துகொள்வதுடன், தங்களது பணி அனுமதிக்கான பிற தகுதிகளையும் சரிபார்த்துக்கொள்வது நல்லது.

 உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.