இந்தியாவில் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் யார் யாருடைய பெயர்கள் இடம்பெறும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்குப் படிக்கச் சென்ற மாணவர்கள், வேலைக்காக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளில் வசிப்பவர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று மீண்டும் இந்தியா திரும்புபவர்கள் எனப் பலருக்கும் இந்தக் கணக்கெடுப்பு தொடர்பான சந்தேகங்கள் உள்ளன. இந்தியாவில் பிறந்தவர்கள் என்பதற்காக வெளிநாட்டில் வசிக்கும் அனைவரும் அவர்களது குடும்பத்தின் கணக்கெடுப்பில் சேர்க்கப்படுவார்களா? வெளிநாட்டினர் இந்தியாவில் தங்கியிருந்தால் அவர்களது பெயர்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா? இதற்கான விளக்கங்களை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதலில் நவம்பர் 16-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை 15 நாட்களுக்கு இணையதளம் வாயிலாக மக்கள் தாங்களாகவே தங்களது குடும்ப விவரங்களைப் பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகு டிசம்பர் 1, 2026 முதல் ஜனவரி 4, 2027 வரை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று மக்கள்தொகை விவரங்களைச் சேகரிக்க உள்ளனர்.
இந்தக் கணக்கெடுப்பில் வெளிநாடுகளுக்குத் தற்காலிகமாகச் சென்றிருப்பவர்களுக்கும், அங்கேயே நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. உதாரணமாக, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சுற்றுலா, குறுகிய கால வேலை அல்லது வேறு தற்காலிகக் காரணங்களுக்காக வெளிநாடு சென்றிருந்தால், அவர் வழக்கமாக வசிக்கும் இந்திய வீட்டின் கணக்கில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாகக் கணக்கெடுப்பு நடைபெறும் காலத்தில் வெளிநாடு சென்றவர் 35 நாட்களுக்குள் இந்தியா திரும்பினால், விதிகளுக்கு உட்பட்டு அவரது வழக்கமான வசிப்பிடத்தில் கணக்கில் சேர்க்கப்படுவார்.
உயர்கல்விக்காக வெளிநாடு சென்ற மாணவர்கள், அங்கு வேலைக்குச் சேர்ந்தவர்கள் அல்லது நிரந்தரமாக வெளிநாட்டிலேயே வசிப்பவர்கள் குறித்து வேறு விதிமுறை பின்பற்றப்படுகிறது. அவர்கள் இந்தியக் குடிமக்களாக இருந்தாலும், கணக்கெடுப்பு நடைபெறும் காலம் முழுவதும் வெளிநாட்டிலேயே வழக்கமாக வசித்து வந்தால், இந்தியாவில் உள்ள பெற்றோர் அல்லது குடும்பத்தினரின் கணக்கெடுப்பில் அவர்களைச் சேர்க்கக் கூடாது. உதாரணமாக, சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் மகள் கனடாவில் படித்து வருகிறார் என்றால், அவர் இந்தியாவில் உள்ள குடும்பத்துடன் வழக்கமாக வசிக்காத நிலையில் அவரது பெயரை அந்தக் குடும்பத்தின் கணக்கில் சேர்க்க வேண்டியதில்லை.
அதேபோல் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் கணக்கில் சேர்ப்பதற்குத் தனிப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான விவரங்கள் மத்திய அளவில் ஒருங்கிணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு முக்கியமான தகவல் என்னவென்றால், இந்தியாவில் வழக்கமாக வசிக்கும் வெளிநாட்டினரும் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படுவார்கள். அதாவது, இந்தியாவில் தங்கி வேலை பார்க்கும் வெளிநாட்டினர், இங்கு கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் உள்ளிட்டோர் குடியுரிமை அடிப்படையில் விலக்கப்பட மாட்டார்கள். அதே நேரத்தில் குறுகிய காலப் பயணமாக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கும், சட்டப்படி தனி விலக்கு பெற்ற தூதரக அதிகாரிகளுக்கும் தனிப்பட்ட விதிகள் உள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.