இந்தியா

அமெரிக்காவிற்கு அடி பணிகிறதா இந்தியா? "மோடி நாட்டை காட்டிக் கொடுத்துவிட்டார்" பகிரங்க குற்றசாட்டு!

"யாரிடமிருந்து எண்ணெய் வாங்கலாம் அல்லது வாங்கக்கூடாது என்று அமெரிக்கா நமக்குச் சொல்லும், அது ரஷ்யா அல்லது ஈரானாக இருந்தால்..

மாலை முரசு செய்தி குழு

அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொண்டுவிட்டதாக மக்களவையில் பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். மேலும், 'எப்ஸ்டீன் பைல்ஸ்' விவகாரத்தால் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார் என்று பகிரங்க குற்றசாட்டையும் வைத்திருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி. மேலும் இந்தியாவை அமெரிக்காதான் இயங்குகிறதா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்த வண்ணம் இருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்க வரி விவகாரம்: இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போரை இந்தியா மறைமுகமாக ஆதரிப்பதாக அமெரிக்கா குற்றசாட்டை வைத்தது. மேலும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருளுக்கு 25% வரி விதிப்பதாக டிரம்ப் கூறிய நிலையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 50% வரி விதிப்பதாக கூறியது. இதனையடுத்து, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதலை கணிசமாகக் குறைக்க அல்லது நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி, இந்தியா 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க எரிசக்தி, விவசாயம், நிலக்கரி மற்றும் தொழில்நுட்ப பொருட்களை வாங்குவதாகவும் உறுதியளித்துள்ளது. இதனை குறித்து இந்தியாவின் எதிர்க்கட்சிகள் இந்த ஒப்பந்தத்தை பெரிதும் விமர்சித்தன. இது அமெரிக்காவிற்கு பெரிதும் சாதகமாகவும் விவசாயம் போன்ற துறைகளை எதிர்மறையாகவும் பாதிக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் கூறின.

இது மட்டுமின்றி, தற்போது நடைபெற்று வரும் ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போரில் கூட அமெரிக்காவை, இந்தியா கண்டிப்பதில் தயக்கம் காட்டுவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். மேலும், இது குறித்து அவர், அமெரிக்க-இஸ்ரேலிய நண்பர்களை பகைத்துக் கொள்வதைத் தவிர்க்கவே ஈரான் மீதான தாக்குதலைக் கண்டிக்க மோடி அரசு தயக்கம் காட்டுவதாக ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலை சரியாக கண்டித்த மோடி அரசு, ஈரானின் உச்சத் தலைவரை படுகொலை செய்தது குறித்தும், ஈரான் மீதான தாக்குதல் குறித்தும் முற்றிலும் அமைதியாக உள்ளது என காங்கிரசின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் "நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்" என்றும், இது இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கும் சிறு வணிகங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் கூறினார். இதுமட்டுமின்றி, அமெரிக்காவில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள சில கோப்புகளைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோரை தாக்கி ராகுல் விமர்சிக்க முயன்றபோது, ​​அவரது ஒலிபெருக்கி அணைக்கப்பட்டது. "யாரிடமிருந்து எண்ணெய் வாங்கலாம்? அல்லது வாங்கக்கூடாது என்று அமெரிக்கா நமக்குச் சொல்லும், அது ரஷ்யா அல்லது ஈரானாக இருந்தால், இதனை அமெரிக்கா முடிவு செய்யும். ஆனால் நமது பிரதமர் முடிவு செய்ய மாட்டார்" என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

'எப்ஸ்டியன் ஃபைல்ஸ்' மற்றும் அதானி வழக்கில் பிரதமர் மோடி மிரட்டப்படுவதால், இந்தியாவின் சுயாட்சி மற்றும் தேசிய இறையாண்மை ஆகியவை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று மல்லிகார்ஜூனே கார்கே தனது பதிவில் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்க இந்தியாவிற்கு விலக்கு அளித்திருந்த நிலையில் சரமாரி கேள்விகளால் துளைத்தன எதிர்க்கட்சிகள். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி முதல் அடல் பிஹாரி வாஜ்பாய் வரை எந்த பிரதமரும் எந்த நாட்டின் அழுத்தத்திற்கும் அடிபணிந்து இந்தியாவை ஒரு அடிமை நாடாக மாற்றவில்லை, மோடி ஜியைத் தவிர," என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஐ.நா கவலை: வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகள் மற்றும் ஜோர்டான் மீது ஈரானின் மிக மோசமான தாக்குதல்களைக் கண்டித்தும் , ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக தெஹ்ரான் அச்சுறுத்துவதைக் கண்டித்தும், தெஹ்ரானின் அனைத்து தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்தக் கோரும் தீர்மானத்தை பற்றி ஐ.நா தனது தீர்மானத்தை வெளியிட்டது. அதாவது, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு எதிராக ஈரானின் "மிகக் கொடூரமான தாக்குதல்களை" ஐ.நா மிகவும் கடுமையாகக் கண்டித்தது. மேலும், இதுபோன்ற செயல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் தீர்மானத்தில் தெரிவித்திருந்தது. இது குறித்து, ஐ.நா.வுக்கான ஈரானின் நிரந்தர பிரதிநிதி அமீர் சயீத் இரவானி, கவுன்சிலின் நடவடிக்கையை "அநீதியானது மற்றும் சட்டவிரோதமானது" என்று விமர்சித்தார், இது ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முரணானது, மேலும் ஆக்கிரமிப்பு செயல்கள் மற்றும் அமைதி மீறல்களை நிர்ணயிப்பதில் நிறுவப்பட்ட கொள்கைகளை முற்றிலும் புறக்கணிக்கும் ஒரு செயல் என்றும் அவர் கூறினார்.

பிப்ரவரி 28 அன்று மோதல் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,348 க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றுள்ளன, 17,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளன, 19,734 பொதுமக்கள் தளங்களை அழித்துள்ளன அல்லது சேதப்படுத்தியுள்ளது. இதனிடையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டிப்பதை விடுத்தது, ஈரானை கண்டிப்பது எவ்வகையில் நியாயம்? என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் 'மிகக் கொடூரமான' தாக்குதல்களைக் கண்டிக்கும் ஐ.நா.வில் 135 நாடுகளுடன் இந்தியாவும் இணைந்திருக்கிறது. இதில் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் பங்குபெறவில்லை. இதுபோன்ற நடவடிக்கைளால் இந்தியா அமெரிக்காவை கண்டு பயப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.

இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இந்தியா இருந்து வருவதாகவும், அமெரிக்கா சொல்வதையே இந்தியா கேட்டு தலையசைக்கிறது என்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். இதனை ஆளும் பாஜக அரசு எதிர்த்தும், புறக்கணித்தும் வந்தாலும் மேற்கூறிய சில நிகழ்வுகளால் எதிர்க்கட்சிகள் கூறுவது உண்மையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்திய வண்ணமே இருக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.