இனிமேல் டீ, காபி இல்லை! எரிவாயு தட்டுப்பாட்டால் ஹாஸ்டல் உரிமையாளர் சங்கங்கள் அதிரடி அறிவிப்பு!

எரிவாயு மூலம் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கும் இது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது..
இனிமேல் டீ, காபி இல்லை! எரிவாயு தட்டுப்பாட்டால் ஹாஸ்டல் உரிமையாளர் சங்கங்கள் அதிரடி அறிவிப்பு!
Published on
Updated on
2 min read

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் காரணமாக நாடுமுழுக்க எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பிஜி மற்றும் ஹாஸ்டல் சங்கத்தினர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் இன்னும் முடிவிற்கு வராத காரணத்தாலும், ஹார்முஸ் வர்த்தக வழித்தடத்தில் போர் பதட்டம் நிலவுவதன் காரணமாக அவ்வழித்தடத்தை பயன்படுத்த முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளதால், உலகெங்கிலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்த போரின் எதிரொலி இந்தியாவையும் நோக்கி அதிரவைத்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களிலும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. அதே சமயத்தில், தமிழகத்தில் சென்னை, மதுரை போன்ற நகரங்களில் பெருவாரியான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. திறக்கப்பட்டுள்ள சில கடைகளிலும் கூட்டுகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன. மேலும் வெரைட்டி சாதம் மட்டுமே வழங்கிவருகின்றனர். இச்சூழலில் ராமநாதபுரம் பகுதிகளில் உணவகங்கள் விறகு அடுப்பினை கொண்டு சமையல் செய்து வருகின்றனர். மதுரையிலும் கூட உணவக உரிமையாளர்கள் வணிக சிலிண்டர்களுக்கு மாற்றாக விறகு அடுப்புகள் மற்றும் எலக்ட்ரிக் அடுப்புகளை வாங்க முன்வந்துள்ளனர். வரும்காலங்களில் இதன் போக்கு தீவிரமடைய வாய்ப்புள்ளதால் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

சமையலுக்கு மட்டுமின்றி, எரிவாயு மூலம் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கும் இது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுவரை அவர்களுக்கு என்று வழங்கப்பட்டு வந்த எரிவாயு நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. இதில் அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே போன்ற நாடுகளும் இந்தியாவுடன் எரிவாயு சிலிண்டர் வர்த்தகத்தை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் கச்சா எண்ணெய் விலை பேரல் 130 அமெரிக்க டாலர்களை கடந்தால் எரிபொருள்களின் விலை உயர வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் விமானப் போக்குவரத்துக்கான எரிபொருளும் நம்மிடம் போதுமான அளவு இருப்பு உள்ளதால், இதுகுறித்தும் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வீட்டு சமையல் எரிவாயுவிற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இருந்தாலும், பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சமையல் எரிவாயுவிற்கே தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியா தனது 80% சமையல் எரிவாயுவிற்கான தேவையை வளைகுடா நாடுகளிடம் இருந்தே இறக்குமதி செய்கின்றன. தற்போது போர் சூழல் இன்னும் மோசமாக மாறிவரும் நிலையில் சமையல் எரிவாயு இறக்குமதி கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் பிஜி மற்றும் ஹாஸ்டல் உரிமையாளர்கள் சங்கம் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். விடுதிகளில் இனி காபி மற்றும் டீ வழங்கப்படமாட்டாது எனவும், கலவைச் சாதங்கள் வழங்கப்படும், வாரத்தில் இரண்டு முறை அப்பளம் அல்லது முட்டை வழங்கப்படும். மேலும், தோசை மற்றும் சப்பாத்தி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாகவும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பாரத் பெட்ரோலியம் (BPCL) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் போதுமான இருப்பு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே, எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோருடன் உயர்மட்ட கலந்துரையாடல்களை நடத்தினார். இந்த நிலையை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ள போகிறது, என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com