நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், தனியார் நிறுவனத்தின் பொது மேலாளரைப் பல மணி நேரம் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை மீட்கச் சென்ற காவல்துறையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் 12 போலீசார் காயமடைந்துள்ளனர். நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட ஆய்வுப் பணிகளே இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், இந்தப் பிரச்சினை வன்முறையாக மாறியுள்ளது.
இந்தச் சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்டத்தில் உள்ள பதல்பாரா - கல்யாண்பூர் பகுதியில் நடைபெற்றுள்ளது. இப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக ஹரியானா பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு நிலக்கரித் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிலத்தடியில் எவ்வளவு நிலக்கரி உள்ளது, அதன் தரம் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக சினர்ஜி ஜியோடெக் என்ற தனியார் நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
அந்த நிறுவனம் கனரக இயந்திரங்களைக் கொண்டு வந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, கிராம சபையின் ஒப்புதல் பெறாமல் நிலக்கரி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்பதே அவர்களின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது. கடந்த மூன்று மாதங்களாக இதுதொடர்பாகப் போராட்டங்களும் நடைபெற்று வந்தன.
பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க நிறுவன அதிகாரிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, நிறுவன ஊழியர்களும் அரசு அதிகாரிகளும் கிராமத்திற்கு வந்தனர். அப்போது நிறுவனத்தின் பொது மேலாளர் சாகர் சிங் மீனா மட்டும் கிராம மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவரது வாகனம் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், நிறுவனத்தின் இயந்திரங்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இயந்திரங்களை அகற்றாவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தின்போது தன்னைத் தாக்கி தண்ணீரில் தூக்கி வீசியதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது அவர் தியோகர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிகாரியை மீட்பதற்காக சுமார் 70 முதல் 80 போலீசார் அடங்கிய குழு சம்பவ இடத்திற்குச் சென்றது. அப்போது கிராம மக்கள் போலீசாரைச் சூழ்ந்து கொண்டு கற்கள், கம்புகள் மற்றும் பாரம்பரிய ஆயுதங்களால் தாக்கியதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் குறைந்தது 12 போலீசார் காயமடைந்தனர். அவர்களில் சிலர் உடனடியாக மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நிலையில், மற்றவர்கள் மாவட்ட மருத்துவமனையிலும், மேலும் மூன்று பேர் தியோகர் எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.
தங்களது நிலத்தில் அனுமதியின்றி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள நிறுவனம் முயன்றதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இயந்திரங்களை அகற்றுமாறு பலமுறை கேட்டும் நிறுவனம் மறுத்ததால் போராட்டம் தீவிரமடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களது எதிர்ப்பை ஒடுக்குவதற்காகவே காவல்துறையினர் வரவழைக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
நிறுவனத்தின் பொது மேலாளர் கூறுகையில், சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவில் நிலக்கரித் தொகுதி விரிவடைந்துள்ளதாகவும், ஆய்வுப் பணிகளில் 70 முதல் 80 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்தத் திட்டம் இன்னும் ஆரம்பகட்டத்தில்தான் இருப்பதாகவும், உண்மையான சுரங்கப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு புவியியல் அறிக்கை, சுரங்கத் திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகள் உள்ளிட்ட பல நடைமுறைகள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து, மோதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே, பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த பொது மேலாளர் மறுநாள் மாலை மீட்கப்பட்டார். நிலக்கரி வளத்தைப் பயன்படுத்துவதற்கான திட்டமும், கிராம மக்களின் நில உரிமை மற்றும் ஒப்புதல் தொடர்பான கேள்விகளும் மோதலாக மாறியுள்ள நிலையில், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்