உத்தரப் பிரதேச உயர் கல்வி அமைச்சர் யோகேந்திர உபாத்யாயா உத்தரப் பிரதேச உயர் கல்வி அமைச்சர் யோகேந்திர உபாத்யாயா
இந்தியா

'ஜானி ஜானி யெஸ் பாப்பா' குழந்தைகளை பொய் சொல்ல ஊக்குவிக்கிறதா? - உயர் கல்வி அமைச்சர் சர்ச்சை பேச்சு!

குழந்தைகளுக்கான ஆங்கிலப் பாடல் இந்திய விழுமியங்களைப் பிரதிபலிக்கவில்லை என்றும், அவை குழந்தைகளிடையே பொய் சொல்லும் பழக்கத்தை ஊட்டுவதாக கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

Vinvizhi Leninton

உத்தரப் பிரதேச உயர் கல்வி அமைச்சர் யோகேந்திர உபாத்யாயா, மே 6 அன்று, 'ஜானி ஜானி யெஸ் பாப்பா' என்ற பிரபலமான குழந்தைகளுக்கான ஆங்கிலப் பாடல் இந்திய விழுமியங்களைப் பிரதிபலிக்கவில்லை என்றும், அவை குழந்தைகளிடையே பொய் சொல்லும் பழக்கத்தை ஊட்டுவதாக கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

கான்பூரின் மெர்ச்சன்ட் சேம்பர் ஹாலில் சிக்ஷா மித்ராக்கள் (துணை ஆசிரியர்கள் மற்றும் ஒப்பந்தக் கல்வியாளர்கள்) கூட்டத்தில் உரையாற்றியபோது, ​​குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைக்கும் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய விழுமியங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் குறித்த விவாதத்தை அமைச்சர் தூண்டினார். அவர் தனது உரையில், பாடத்திட்டத்துடன் சேர்த்து நன்னெறிகளையும் போதிக்கும் ஒரு கல்வி முறையை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் பழமையான 'குரு-சிஷ்ய' முறையை (ஆசிரியர்-மாணவர் மரபு) குறிப்பிட்ட அவர், அந்தப் பழமையான ஒழுங்கை மதித்து, ஒரு குருவின் நிலையை ஏற்றுக்கொள்வதன் மூலமே ஆசிரியர்களால் மாணவர்களிடையே நன்னெறிகளை உருவாக்க முடியும் என்றும் அவர் கூறினார். ஆசிரியர்கள், பாடப்புத்தகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையின் எல்லைகளைக் கடந்து, அன்றாட வாழ்வில் சிறிய பாடங்கள் மூலம் மாணவர்களுக்குச் சரியான பாதையைக் காட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய மதிப்பீட்டு முறைகளுக்கு இடையிலான வேறுபாடுகளை பற்றி அவர் வலியுறுத்திக் கூறினார். 'ஜானி ஜானி யெஸ் பாப்பா' போன்ற குழந்தைகளுக்கான ஆங்கிலப் பாடல்கள் தற்போதைய தலைமுறைக்குத் தேவையான விழுமியங்களை வழங்குவதில்லை என்றும், 'சர்க்கரை சாப்பிடுவதா, வேண்டாம் அப்பா' என்ற சொற்றொடர்கள் குழந்தைகளைத் தங்கள் பெற்றோரின் முன்னிலையில் பொய் சொல்ல ஊக்குவிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், முந்தைய தலைமுறையினர் வாசித்து வளர்ந்த இந்தி கவிதைகள், ஆழமான வாழ்க்கை விழுமியங்களைக் கொண்டிருப்பதாக பாஜக தலைவர் பாராட்டினார்.

இதனைத்தொடர்ந்து அந்த நிகழ்வில், உபாத்யாயா 12 சிக்ஷா மித்ராக்களுக்கு அவர்களின் மதிப்பூதிய உயர்வுக்கான மாதிரி காசோலைகளை வழங்கி கௌரவித்தார். சிக்ஷா மித்ராக்கள் கல்வி அமைப்பில் ஒரு வலுவான இணைப்பு என்று கூறிய அவர், அவர்களுக்கான மதிப்பூதியத்தை அரசு ரூ.10,000-லிருந்து ரூ.18,000-ஆக உயர்த்தியுள்ளதாகவும் அறிவித்தார். மேலும், கல்வியை விழுமியங்களுடன் இணைக்க வேண்டியதன் அவசியத்தையும் மீண்டும் வலியுறுத்தினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.