

மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தர்பூசணி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவத்தில், தற்போது ஒரு அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உணவு நச்சுத்தன்மையால் (Food Poisoning) இறக்கவில்லை என்றும், எலிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் கொடிய விஷம் அவர்களின் உடலில் கலந்திருப்பதே மரணத்திற்கு காரணம் என்றும் தடயவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களைப் பரிசோதித்த போது, அவர்களின் உள் உறுப்புகள் பச்சை நிறமாக மாறியிருந்தது போலீசாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது விஷம் கலந்திருப்பது உறுதியாகியுள்ளது.
உயிரிழந்த 45 வயது அப்துல்லா டோகாடியா, அவரது மனைவி நஸ்ரீன் மற்றும் மகள்கள் ஜைனப், ஆயிஷா ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கள் உறவினர்களுக்கு இரவு விருந்து அளித்துள்ளனர். அன்று நள்ளிரவு 1 மணி அளவில் தர்பூசணிப் பழத்தைச் சாப்பிட்டுள்ளனர். அதிகாலை 5 மணி அளவில் குடும்பத்தினர் அனைவருக்கும் கடும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, சில மணி நேரங்களிலேயே அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் சாப்பிட்ட ஆட்டுக்கறி புலாவ் உணவைச் சாப்பிட்ட உறவினர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத நிலையில், தர்பூசணி மீது சந்தேகம் திரும்பியது.
தடயவியல் சோதனையில், அவர்கள் சாப்பிட்ட தர்பூசணிப் பழத்தில் 'ஜிங்க் பாஸ்பைட்' (Zinc Phosphite) எனப்படும் எலி விஷத்தில் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விஷம் அவர்களின் மூளை, இதயம் மற்றும் குடல் போன்ற உறுப்புகளைப் பாதித்து, அவற்றை பச்சை நிறமாக மாற்றியுள்ளது. இந்தச் நச்சுப் பொருள் தற்செயலாகப் பழத்தில் கலந்ததா அல்லது யாராவது திட்டமிட்டு ஊசி மூலம் பழத்திற்குள் செலுத்தினார்களா என்பது குறித்துப் போலீசார் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அப்துல்லா டோகாடியாவின் உடலில் மார்ஃபின் (Morphine) எனப்படும் வலி நிவாரணி மருந்தின் துகள்களும் கண்டறியப்பட்டுள்ளன. இது மருத்துவக் காரணங்களுக்காக எடுக்கப்பட்டதா அல்லது இதில் வேறு ஏதேனும் சதித் திட்டம் உள்ளதா என்றும் சந்தேகிக்கப்படுகிறது. தற்போதைக்கு இது விபத்தினால் நேர்ந்த மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், தடயவியல் அறிக்கை வெளியாகி இருப்பதால், இந்த மர்ம மரணங்கள் குறித்துப் போலீசார் அடுத்தகட்ட விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.