தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மானியக் கோரிக்கை விவாதங்களின்போது மீண்டும் கச்சத்தீவு சர்ச்சை எழுந்தது.
கச்சத்தீவைத் தாரை வார்த்தது காங்கிரஸா, திமுகவா என அரை நூற்றாண்டுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு வரும் அதே வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.
அப்போது காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் தாரகை கத்பட், அன்றைய காங்கிரஸ் அரசு கச்சத்தீவைத் தாரை வார்க்கவில்லை எனப் பேசினார். 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட கச்சத்தீவைக் கொடுத்துவிட்டு, சுமார் 25 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட வாட்ஜ் பேங்கைப் பெற்றதாகத் தெரிவித்தார்.
வாட்ஜ் பேங்க் வளங்கள் நிறைந்த ஆழ்கடல் பகுதி என தாரகை கத்பட் குறிப்பிட்டுள்ளார். கச்சத்தீவு வழங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1976-ல் செய்யப்பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி அந்தப் பகுதியை இந்திய அரசு பெறுகிறது. இந்த ஒப்பந்தம் என்ன சொல்கிறது, இதன் மூலம் இந்திய அரசுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதைக் காணலாம்.
கன்னியாகுமரிக்கு தெற்கே 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வாட்ஜ் பேங்க். இது ஒரு ஆழ்கடல் பகுதியாகும். கன்னியாகுமரிக்குக் கீழே கடலடியில் அமைந்துள்ள கண்டத்தின் முனைப்பகுதியான இது, இந்தியாவின் கடல் எல்லைக்கு அப்பால் அமைந்திருந்தாலும், இதன் மீதான பொருளாதார உரிமை இந்தியாவுக்கே உள்ளது என்பதை இந்தியா-இலங்கை இரு நாடுகளும் 1976-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் உறுதி செய்துள்ளன.
4,000 சதுர மைல் (சுமார் 6,500 ச.கி.மீ.) பரப்பளவுடைய இந்தப் பகுதியில், கடலின் ஆழம் 200 மீட்டர் அளவுக்கு இருக்கும்.
இந்தப் பகுதியில் கடல் பல்லுயிர் வளம் அதிகம் என்பதால், மீன் வளமும் அதிகம். மீன்கள் இனப்பெருக்கம் செய்ய உகந்த பகுதியாக இது கருதப்படுகிறது. இங்கு வெப்பநிலை மிதமானதாக இருந்தாலும், உப்புத்தன்மை அதிகமாக இருக்கும். இங்கு மீன்பிடிக்க மே மாதம் முதல் அக்டோபர் வரை சிறந்த காலமாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் உள்ள குளச்சல், சின்னமுட்டம் துறைமுகங்களில் இருந்தும், கேரளாவின் விழிஞ்சம் பகுதியிலிருந்தும் இங்கு மீன்பிடிப் படகுகள் வருகின்றன.
இங்கு சுமார் 425 வகையான மீன்கள் காணப்படுகின்றன. ஆண்டுக்கு 65,000 மெட்ரிக் டன் அளவுக்கு மீன்களைப் பிடிக்க முடியும்.
வாட்ஜ் பேங்க் பகுதியில் மீன்வளம் மட்டுமல்லாமல், எண்ணெய் வளமும் உள்ளதாகக் கூறப்படுகிறது. 1976-ம் ஆண்டு ஒப்பந்தத்திலும் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அரசு இந்த எண்ணெய் வளத்தை உறிஞ்சுவதில் நீண்ட காலமாக ஆர்வம் கொண்டுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு, வாட்ஜ் பேங்கின் 3 இடங்களில் பெட்ரோலியம் இருக்கிறதா எனச் சோதனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. எண்ணெய் மட்டுமல்லாமல் இயற்கை வாயுவும் இங்கே நிறைந்திருப்பதாகக் கருதப்படுகிறது.
இந்தத் திட்டத்துக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கவலைகளை எழுப்பினர். இது மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் பகுதியாக இருப்பதால், ஏற்கெனவே கடலில் மீன்வளம் குறைந்துவரும் நிலையில், பெட்ரோலியம் எடுக்கும் திட்டம் மீனவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் அபாயம் எழுந்தது.
எண்ணெய் வளம் அல்லது மீன்வளம் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலில், அரசு மீன் வளத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும் எனச் சூழலியல் ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்தியா-இலங்கை இடையிலான இரண்டாவது எல்லை நிர்ணய ஒப்பந்தம் 1976-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி கையெழுத்திடப்பட்டது.
மன்னார் வளைகுடா பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையை வரையறுக்கும் இந்த ஒப்பந்தத்தில், அன்றைய இந்தியாவின் வெளியுறவுத் துறைச் செயலர் கேவல் சிங்கும், இலங்கையின் வெளியுறவுத் துறைச் செயலர் டபிள்யு. டி. ஜெயசிங்கேவும் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம், "கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள வாட்ஜ் பேங்க், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தைச் சேர்ந்தது. அந்தப் பகுதியின் மீதும் அதன் வளங்கள் மீதும் இந்தியாவுக்கு முழு இறையாண்மை உண்டு" என்பதை உறுதியாக நிலைநிறுத்துகிறது.
காங்கிரஸ் கட்சியினர் கூறுவதன்படி, கச்சத்தீவை விட்டுக்கொடுத்து நாம் பெற்றது இதுதான். ஆனால், கச்சத்தீவை இழந்ததால் நாம், குறிப்பாகத் தமிழக மீனவர்கள் இழந்ததை இதற்கு இணையானதாக எடுத்துக்கொள்ள முடியுமா?
1973-ம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தில், இந்திய மீனவர்கள் வலைகளை உலர்த்தவும், புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தபோதிலும், 1976-ம் ஆண்டு ஒப்பந்தத்திற்குப் பிறகு அப்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை பறிபோனது. இலங்கையின் உள்நாட்டுப் போர் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
“இலங்கையுடனான நட்புறவை மேம்படுத்த, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கச்சத்தீவை 1974-ல் உணர்ச்சிவசப்பட்டு பரிசாகக் கொடுத்தார்” என்பதே பாஜக உள்ளிட்ட கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
இதனை மறுத்து, காங்கிரஸ் கூறும் கச்சத்தீவு-வாட்ஜ் பேங்க் என்ற பரிமாற்றத்தை ஏற்றுக்கொண்டாலும், கச்சத்தீவைப் பறிகொடுத்ததால் இதுவரையில் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இது தவிர, படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்கள் பலர் பல நாட்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இது ஒரு தோல்வியடைந்த ஒப்பந்தமே என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில்கொள்ளும்போது, இதனை ஒரு மோசமான முடிவாகவும் கருதலாம்.
2009ம் ஆண்டு உள்நாட்டுப் போர் இலங்கையில் முடிவுக்கு வந்த பிறகும் 1974 ஒப்பந்தத்தில் இந்திய மீனவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை மீட்டுத்தர அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பதுதான் வந்த விவகாரத்தில் கவலையளிக்கக் கூடிய விஷயமாகும்.
கச்சத்தீவு விவகாரம் எப்போதும் அரசியல் களத்தில் பேச்சு பொருளாக இருக்க, இந்த பிரச்சனையின் தீவிரத் தன்மைதான் காரணம். இதனைக் கருத்தில் கொண்டு அரசியல் ரீதியாக குற்றம் சாட்டுவதைத் தாண்டி அரசுகள் நடவடிக்கை எடுக்குமா என பல தசாப்தங்களாக காத்துக்கொண்டிருக்கின்றனர் உறவுகளைப் பறிகொடுத்த மீனவ மக்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்