கங்கனா ரனாவத், க்ரித்தி சனோன், ராகுல் காந்தி  
இந்தியா

"பிகினியில் ராக்கி கட்டுவதா?" - நடிகைக்கு எழுந்த விமர்சனங்கள்; ஆதரவாக நின்ற ராகுல் காந்தி - நீக்கப்பட்டதா விளம்பரம்?

க்ரித்தி சனோன் சமீபத்தில் நடித்த ‘காக்டெயில் 2’ திரைப்படத்தில் அவரது ஆடை வடிவமைப்புக்காக விமர்சிக்கப்பட்டார். அதனுடன் இணைந்து, இந்த விளம்பரத்துக்கான விமர்சனமும் இணையத்தில் எழுந்தது.

மாலை முரசு செய்தி குழு

பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் சமீபத்தில் நடித்த ஒரு நகைக்கடை விளம்பரமும், அதைத் தொடர்ந்த சர்ச்சைகளும் அரசியல் களத்தில் எதிரொலித்துள்ளன.

ரக்‌ஷா பந்தன் விழாவை ஒட்டி எடுக்கப்பட்ட அந்த விளம்பரத்தில், நடிகை தனது நாய்க்கு ராக்கி கட்டுவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விளம்பரம் நகை பிராண்டான ஜிவா (Giva) நிறுவனத்தினுடையது. சர்ச்சை அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்த விளம்பரத்தை அகற்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களில், "ஒரு பிராண்டாக, மகிழ்ச்சியான இந்த தருணங்களை எப்போதும் முழு குடும்பத்துடன் கொண்டாடுவதை நாங்கள் நம்பி வந்துள்ளோம். இந்த முறை, அந்த அன்பையும் கொண்டாட்டத்தையும் நமது செல்லப்பிராணிகளிடமும் காட்ட விரும்பினோம். எங்களின் சமீபத்திய விளம்பரம் அறியாமலேயே சமூகத்தின் சில தரப்பினரின் உணர்வுகளைப் புண்படுத்தியிருந்தால், அது எங்களின் நோக்கம் அல்ல. மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக, அந்த விளம்பரத்தை அனைத்து தளங்களிலிருந்தும் அகற்றியுள்ளோம்." என அறிவித்துள்ளது அந்த நிறுவனம்.

நாய்க்கு ராக்கி கட்டும் காட்சி

அதில் அவர் அணிந்திருந்த பிராலெட் பாணி ரவிக்கையை பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கேள்வி எழுப்பினார். "பெண்களுக்கு இது ஒரு பொற்காலம். நம் அலமாரிகளில் விதவிதமான ஆடைகள் நிறைந்திருக்கின்றன. காக்டெய்ல் உடைகள், லெஹங்கா, ஜீன்ஸ், புடவை, பிகினி, சல்வார் கமீஸ் என எவ்வளவோ ஆடைத் தேர்வுகள் இருக்கும்போது, ஒரு பெண் ஏன் தனது சகோதரனுக்கு ராக்கி கட்டும்போது பிகினி அல்லது உள்ளாடை போன்ற உடைகளை அணிய வேண்டும்? உங்களின் ஆடை வடிவமைப்பு உணர்வு எங்கே போனது? இந்த விளம்பரம் வேண்டுமென்றே அருவருப்பாக எடுக்கப்பட்டது போல் இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

க்ரித்தி சனோன் சமீபத்தில் நடித்த ‘காக்டெயில் 2’ திரைப்படத்தில் அவரது ஆடை வடிவமைப்புக்காக விமர்சிக்கப்பட்டார். அதனுடன் இணைந்து, இந்த விளம்பரத்துக்கான விமர்சனமும் இணையத்தில் எழுந்தது. இதில் அவரது நாய்க்கு ராக்கி கட்டுவது போன்ற காட்சிக்கும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்த நடிகை, "பண்டிகைகளின் உண்மையான சாராம்சம் நாம் உடுத்தும் ஆடைகளில் இல்லை; அந்தப் பாரம்பரியத்திற்கு நாம் கொடுக்கும் உணர்வுகளிலும் அர்த்தத்திலும்தான் இருக்கிறது.

ரக்‌ஷா பந்தன் என்பது பாதுகாப்பிற்கான ஒரு பிணைப்பு. நானும் என் சகோதரியும் ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக்கொள்கிறோம். ஒரு சகோதரனை விடவும் நாங்கள் ஒருவரையொருவர் பாதுகாப்போம் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்" என எழுதினார்.

கங்கனா ரனாவத்

சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற ‘ஸ்கூல் எக்கோஸ்’ நிகழ்ச்சியில், நவீன பெண்கள் மனுஸ்மிருதி கூறும் விதிகளுக்குக் கட்டுப்படாமல் வாழ வேண்டும் என ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதே சூட்டில், பெண்களின் ஆடைத் தேர்வு குறித்த இந்த விவாதத்திலும் தனது கருத்துகளைத் தெரிவித்தார். க்ரித்தி சனோனின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியைப் பகிர்ந்த ராகுல் காந்தி, "ஒரு பெண் என்ன ஆடை அணிய வேண்டும், என்ன செய்ய வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்பது முழுக்க முழுக்க அவளுடைய தனிப்பட்ட விருப்பம்.

பெண்கள் தங்களின் சுதந்திரத்தைப் பயன்படுத்தும்போது, அவர்களை இணையத்தில் விமர்சிப்பதையும் ட்ரோல் செய்வதையும் நிறுத்துங்கள்" எனக் காட்டமாகப் பதிவிட்டார்.

ராகுல் காந்திக்கு பதிலளிக்கும் நோக்கில் மீண்டும் கங்கனா ரனாவத், "என் வளர்ப்பைக் கேள்வி கேட்பவர்களும், என்னைத் தாக்குபவர்களும், முதலில் என்னைப் போல வெற்றியை அடைந்துவிட்டுப் பிறகு பேச வாருங்கள்.

தோல்வியடைந்தவர்களிடமிருந்தோ அல்லது தகுதியற்றவர்களிடமிருந்தோ நான் எந்த அறிவுரையையும் பெறப் போவதில்லை" எனப் பதிவிட்டார்.

ஒரு நகைக்கடை விளம்பரத்தில் தொடங்கிய விவாதம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான காரசார வார்த்தைப் போராக மாறியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்