இந்தியா

ஆணவக்கொலைகளுக்கு எதிராக இயற்றப்பட்டது சட்டம்!பசவண்ணாவின் 12 ஆம் நூற்றாண்டு வசனத்தை குறிப்பிட்டு நடைமுறைக்கு வந்த மசோதா...

அதிகரித்து வரும் ஆணவக் கொலைகள் மற்றும் சாதி அடிப்படையிலான வன்முறைகளுக்கு சட்டரீதியான ஒரு பதிலாக இந்த மசோதா...

மாலை முரசு செய்தி குழு

கர்நாடகாவில் திருமணத்தில் தேர்வு செய்யும் சுதந்திரம் மற்றும் குற்றங்களைத் தடுத்தல் மற்றும் தடை செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய 'ஏவ நம்மவ ஏவ நம்மவ மசோதா'வை சட்ட மேலவை செவ்வாய்க்கிழமை அன்று நிறைவேற்றியது.

மசோதாவில் “ஏவ நம்மவ, ஏவ நம்மவ” என்ற சொற்றொடர் இடம்பெற்றிருப்பது, “அவர் நம்முடையவர், அவர் நம்முடையவர்” என்று பொருள்படும் பசவண்ணாவின் 12 ஆம் நூற்றாண்டு கன்னட வசனத்தைக் குறிப்பிடுவதாகும். சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் எச்.கே. பாட்டீலால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஊரக வளர்ச்சி அமைச்சர் பிரியங்க் கார்கேவால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, கர்நாடகா முழுவதும் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகள் மற்றும் சாதி அடிப்படையிலான வன்முறைகளுக்கு சட்டரீதியான ஒரு பதிலாக இந்த மசோதா அமைந்திருக்கிறது. "இது சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதோடு, சமூகப் புரட்சிக்கு வழிவகுக்கும் நோக்கமாகக் கொண்ட ஒரு மசோதா" என்று மசோதாவைத் தாக்கல் செய்தபோது பாட்டீல் கூறினார்.

இச்சட்டம் கொண்டுவர காரணமாக கூறப்படுவது, ஹுப்பள்ளி தாலுக்காவில் ஒரு தலித் இளைஞரைத் திருமணம் செய்துகொண்டதற்காக, அப்பெண்ணின் தந்தை, தனது 20 வயது கர்ப்பிணி மகளையும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையையும் கொலை செய்ததைத் தொடர்ந்து இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'கௌரவத்தின் பெயரால்' என்ற தலைப்பில் 2024ல் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'மக்கள் சிவில் உரிமைக் கழகம்-கர்நாடகா', ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2023 வரை நடந்த 13 கௌரவம் தொடர்பான தாக்குதல்களை ஆவணப்படுத்தியுள்ளது. ஆணவக்கொலைகள் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்தனர் என்று அறிக்கை கூறுகிறது. மேலும், இந்த மசோதா, சம்மதம் தெரிவித்த வயது வந்தவர்களுக்குத் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும், உரிமையும் உண்டு என்பதையும், அந்தத் தேர்வில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்பதையும் இந்த மசோதா அங்கீகரிக்கிறது. இதுமட்டுமின்றி, கலப்புத் திருமணத் தம்பதிகளுக்குக் காவல்துறையின் பாதுகாப்பும், உள்ளாட்சி நிர்வாகத்தின் ஆதரவும் தேவை என்பதை உணர்ந்து, இந்த மசோதாவானது தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தம்பதிகள் பாதுகாப்புக்காக வரும்போது உள்ளாட்சி நிர்வாகம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விரிவான நடைமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான ஆதரவு அமைப்பை உருவாகியுள்ளது. இதனடிப்படையில், தாக்கப்படலாம் அல்லது அச்சுறுத்தப்படலாம் என அஞ்சும் தம்பதியினருக்கு, அதுகுறித்த தகவல் கிடைத்த ஆறு மணி நேரத்திற்குள் உள்ளூர் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் தங்குமிடம் உள்ளிட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று மசோதா கூறுகிறது.

இச்சட்டத்தின் கீழ் நிகழும் ஒரு குற்றம் தொடர்பாக எந்தவொரு நபர், சாட்சி அல்லது தகவல் அளிப்பவர் அளிக்கும் புகார்களைப் பதிவு செய்யவும், தேவைப்படும்போது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவும், மேலும் 60 நாட்களுக்குள் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது வழிகாட்டுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆணவக் கொலைகள் நடந்ததாக அறியப்பட்ட மாவட்டங்களைக் கண்டறிந்து, பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இந்தச் சட்டம் மாநில அரசுக்கு வழிகாட்டுகிறது. மேலும், “பாரம்பரியம்” என்ற பெயரில் செய்யப்படும் குற்றங்களைத் தடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்புப் பிரிவை உருவாக்கவும், அதற்கென பிரத்யேக உதவி எண்களை ஏற்படுத்தவும் இது வழிவகுக்கிறது. மேலும், வெவ்வேறு சாதிகளில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் தம்பதிகளுக்கு, திருமணங்களை நடத்தி வைப்பதற்கும், ஆலோசனைகளை வழங்குவதற்கும் வசதி செய்து கொடுப்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓய்வுபெற்ற நீதிபதி, காவல் அதிகாரி, வருவாய் அதிகாரி, துணைப் பதிவாளர் மற்றும் பிறரைக் கொண்ட 'ஏவ நம்மவ வேதிகே' என்ற குழு அமைக்கப்படும் அச்சட்டம் கூறுகிறது.

ஆனால், எதிர்க்கட்சியான பாஜகவைச் சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவை எதிர்த்தனர் . அதேசமயத்தில், தம்பதிகள் சேர்ந்து வாழும் தங்கள் விருப்பத்தை அறிவிப்பது தொடர்பான மசோதாவின் பிரிவை முன்னாள் சட்ட அமைச்சர் எஸ். சுரேஷ் குமார் எதிர்த்தார். கார்கலா எம்எல்ஏ, வி.சுனில் குமார், "பாரதிய நியாய சன்ஹிதாவில் விதிகளை விட சட்டம் எவ்வாறு சிறந்தது?" போன்ற கேள்விகளை கேட்டார்.

இருப்பினும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா, சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறும் பிரச்சினைகளை அரசு கவனத்தில் கொள்ளாததால், இதுபோன்ற கொலை வழக்குகளில் தண்டனை விகிதம் குறைவாக உள்ளது என்று சுட்டிக்காட்டினார். மேலும், விதிகளை வகுக்கும்போது எதிர்க்கட்சிகளின் கவலைகள் கவனத்தில் கொள்ளப்படும் என்று கூறி சட்ட அமைச்சர் எச்.கே. பாட்டீல் உறுதியளித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.