இந்தியா ஒரு Paradoxical சமூகம். இந்த முரண் நமது கல்வி நிறுவனங்களிலும் கூட எதிரொலிக்கின்றன. சில கல்வி நிறுவனங்களும் பள்ளிகளும், மாணவர்களை வரும் மதிப்பெண் சுமக்கும் எந்திரங்களாக பார்க்கும்போக்கு நாடு முழுவதும் பலகாலமாக, புழக்கத்தில் இருந்து வருகிறது.
படிக்கும் பிள்ளைகளின் வாழ்வில் ஒழுக்கம் என்பது மிகத்தேவையான ஒரு பண்புநலன்தான் என்றாலும், அவற்றிற்காக குழந்தைகளின் உயிரையே கேட்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது, மேலும் சட்டங்களும், ஒழுங்குமுறைகளும் மனிதனின் வாழ்விலை மேம்படுத்த, எளிதாக்கதான் உருவாக்கப்பட்டதே தவிர, மனித உயிரைவிட அதுவும் ஒரு குழந்தையின் உயிரைவிட அவை மேலானவை அல்ல. அதை சமூகமும், பெற்றோரும், கல்வி நிலையங்களும் உணர வேண்டும். அந்த பிரச்சனைகளை சமூகத்தின் அனைத்து படிநிலைகளும் மறக்கும்போதுதான் மிக துயரமான சம்பவங்கள் நிகழ்கின்றன.
அப்படியொரு சம்பவம்தான், மஹாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்த மாணவியை 100 தோப்புக்கரணம் போட நிர்பந்தித்ததால் 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். அதுவும் குழந்தைகள் தினத்திலேயே ஆசிரியர் கொடுத்த தண்டனையால் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், வசாய் என்ற பகுதியில் ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் என்ற பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில்தான் 6 -ஆம் வகுப்பு படித்து வந்தார் காஜல் கவுட் என்ற சிறுமி. இவர் கடந்த நவம்பர் 8 -ஆம் தேதி பள்ளிக்கு சென்றபோது 10 நிமிடம் தாமதமாகியுள்ளது. 10 நிமிட தாமதத்தை பொறுத்துக்கொள்ள முடியாத, ஆசிரியர் அவரை புத்தகப்பையோடு 100 தோப்புக்கரணம் போடச்சொல்லி மிரட்டியுள்ளார். இதனால் வேறு வழியின்றி சிறுமியும் அந்த தண்டனையை ஏற்றுள்ளார். ஆனால் பள்ளி முடிந்து வீடு சென்றதிலிருந்தே மாணவி மிகுந்த கழுத்து மற்றும் முதுகு வலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்ததால் அவரின் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால் ஏற்கனவே சிறுமியின் உடல்நிலை மோசமடைந்திருந்தது. மருத்துவமனையில் உயிருக்கு போராடிய சிறுமி, கடந்த நவம்பர் 14 -ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனையில் ஈடுபட்டதில், சிறுமிக்கு பள்ளியில் கொடுத்த தண்டனையால் தான், அவர் உயிரிழந்தார் என்பது ஊர்ஜிதமானது.
13 வயது சிறுமிக்கு இப்படி கொடூரமான தண்டனை கொடுத்த ‘பள்ளி நிர்வாகிகள், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் (SP) அதிகாரி ரோஹித் சசேன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த பள்ளியில் இதுமட்டுமின்றி வேறுசில முறைகேடுகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த பள்ளிக்கு 8 -ஆம் வகுப்பு வரை மட்டுமே வகுப்புகள் நடத்த பள்ளிக்கு அனுமதி உள்ளது, ஆனால் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கும் மாணவர்களைச் சேர்த்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். பவசாய்-விரார் பகுதியில் உள்ள பல பள்ளிகள் இந்த முறையில்தான் மாணவர்களைச் சேர்த்து, பின்னர் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு அனுமதி உள்ள பள்ளிகளாக மாற்றுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நடைமுறை சட்டவிரோதமானது என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதியின் பள்ளிக்கல்வி அதிகாரி கலங்கே உறுதியளித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.