இந்தியா

Lawyer Look-ல் மம்தா பானர்ஜி.. தேர்தல் தோல்விக்குப் பிறகு உயர் நீதிமன்றத்தில் அதிரடி என்ட்ரி! சட்டப்படி இதை அணிய முடியுமா?

நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி நேரில் ஆஜரானது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது

Muthu Lakshmi

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெடித்த வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி Mamata Banerjee வியாழக்கிழமை (மே 14) கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அங்கி அணிந்து ஆஜரானது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எச்.சி. சுஜோய் பால் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கை, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் வழக்கறிஞரான கல்யாண் பானர்ஜி-யின் மகன் ஷிர்ஷான்யா பந்தோபாத்யாய் தாக்கல் செய்திருந்தார். நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி நேரில் ஆஜரானது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியாகின. பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்த நிலையில், சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக முதல் முறையாக மாநில ஆட்சியை கைப்பற்றியது. முடிவுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே பல மாவட்டங்களில் அரசியல் மோதல்கள், தாக்குதல்கள், தீவைத்தல் சம்பவங்கள் மற்றும் பழிவாங்கும் வன்முறைகள் வெடித்ததாக தகவல்கள் வெளியாகின.

குறிப்பாக, பாஜக ஆதரவாளர்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதல்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தின. இதில் முக்கியமாக, சுவேந்து அதிகாரியின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்பட்ட சந்திரநாத் ரத் மே 6 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பல இடங்களில் வீடுகள் சேதப்படுத்தப்பட்டதாகவும், அரசியல் பழிவாங்கல் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கிடையில், மம்தா பானர்ஜி நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் அங்கி அணிந்து வந்தது சமூக ஊடகங்களில் வைரலானது. X தளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்ட பதிவில், “வங்க மக்களின் நலனுக்காக மம்தா தொடர்ந்து போராடுகிறார். உண்மை, நீதி மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளுக்கான அவரது உறுதி என்றும் மாறவில்லை” என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது. மேலும் “NO LEADER LIKE HER” என்று முன்னாள் முதலமைச்சர் மம்தாவை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தனர். 

சமூக ஊடகங்களில் இதற்கு கலவையான எதிர்வினைகள் பதிவானது. சிலர் அவரது சட்டப் பின்னணியை பாராட்டிய நிலையில், மற்றவர்கள் இதை அரசியல் நாடகமாக விமர்சித்தனர். மம்தா பானர்ஜி 1982 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஜோகேஷ் சந்திர சௌத்ரி சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் (LLB) பெற்றவர். அவர் கொல்கத்தா உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், குறிப்பிட்ட சட்ட நிபந்தனைகளின் கீழ் வழக்கறிஞர் அங்கி அணிய உரிமை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.