மேற்கு வங்கத்தில் அரசியல் சூழல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பதவியிலிருந்து விலக முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக மறுத்துவிட்ட நிலையில், அம்மாநில சட்டசபையை அதிகாரப்பூர்வமாக கலைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டசபையின் பதவிக்காலம் வியாழக்கிழமை நள்ளிரவோடு முடிவடைந்த நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 174 (2)(பி) பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். ராஜ்பவன் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட இந்த ஒற்றை வரி அறிவிப்பு கொல்கத்தா அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதால், வங்காளத்தின் இந்த அதிகாரப் போட்டி நீதிமன்றத்திற்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் மம்தா பானர்ஜி பதவி விலக மறுத்தாலும், சட்ட ரீதியாக அவர் முதலமைச்சராக நீடிக்க முடியாது என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சட்டசபை கலைக்கப்பட்டவுடன் அமைச்சரவையின் அதிகாரமும் முடிவுக்கு வந்துவிடும். புதிய அரசு அமையும் வரை ஆளுநரின் விருப்பத்தின் பேரில் மம்தா பானர்ஜி தற்காலிக முதலமைச்சராக (Caretaker CM) மட்டுமே செயல்பட முடியும். இது ஒரு நடைமுறைதானே தவிர, அவர் கட்டாயம் பதவியில் நீடிக்கலாம் என்கிற அதிகாரப்பூர்வ விதி ஏதும் இல்லை.
புதிய எம்.எல்.ஏ-க்கள் தேர்வு செய்யப்பட்டு, பெரும்பான்மை கொண்ட தலைவர் அழைக்கப்படும் வரை இந்த இடைக்கால ஏற்பாடு நீடிக்கும். மம்தா பானர்ஜி பிடிவாதமாகப் பதவி விலக மறுப்பது அரசியலமைப்பு சட்ட நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் விளக்குகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தால் மட்டுமே ஒருவர் முதலமைச்சராக இருக்க முடியும். இப்போது சட்டசபையே இல்லாத நிலையில், மம்தா பானர்ஜிக்கு அந்த ஜனநாயக ரீதியான அதிகாரம் இல்லாமல் போகிறது. எனவே, அவர் வழக்கமான முதலமைச்சராகத் தொடர எந்த ஒரு நேரடி சட்ட வழியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தேர்தல் மனு தாக்கல் செய்வதே ஒரே வழியாகும். குறிப்பிட்ட தொகுதிகளில் விதிகள் மீறப்பட்டிருந்தால் அதை உயர் நீதிமன்றத்தில் நிரூபித்து அதன் மூலம் சட்ட ரீதியான தீர்வைப் பெற முடியும். எவ்வாறாயினும், மேற்கு வங்கத்தில் ஆளுநருக்கும் மம்தா பானர்ஜிக்கும் இடையே மூண்டுள்ள இந்த நேரடி மோதல், இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.