மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் பற்றி எரியும் நிலையில் மத்திய அரசு மவுனம் காப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்கள் பழங்குடி அந்தஸ்து கோரி மாணவர் அமைப்பு சார்பில் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. ஆனால், இந்த பேரணிக்கு எதிராக மாநிலத்தின் சில பகுதிகளில் பழங்குடி மக்கள் பேரணி நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமானது. மணிப்பூரில் கலவரம் நீடித்து வந்த நிலையில், போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர கலவரக்காரர்களை கண்டவுடன் சுடுவதற்கு மாநில ஆளுநர் அனிஷியா உய்கே உத்தரவிட்டார். மேலும், அம்மாநிலத்தில் இணைய சேவை முடக்கப்பட்டு மத்திய பாதகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
இத தொடர்பாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அரசின் மீது குற்றசாட்டை முன் வைத்துள்ளார். மணிப்பூர் கலவரத்தில் பலர் உயிரிழந்திருக்கும் நிலையில், பலியானவர்கள் குறித்த எண்ணிக்கையை அந்தமாநில அரசு வெளியிடவில்லை என குற்றஞ்சாட்டிய அவர் இதுபோன்ற நிகழ்வு மேற்குவங்கத்தில் நடைபெற்றிருந்தால் மத்திய அரசு பல்வேறு குழுக்களை விசாரணைக்கு அனுப்பி இருக்கும் என தெரிவித்தார். மேலும், கலவரம் குறித்து மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
முன்னதாக மேற்கு வங்கத்தில் இராம நவமி ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் மாநில அரசை பாஜக குற்றம் சுமத்தியது. மேலும் மத்திய அரசு இச்சம்பவம் குறித்து மேற்கு வங்க மாநில அரசிடம் விளக்க அறிக்கை கேட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:"பாஜக ஊழல் காரணமாக சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக சிதைந்துள்ளன" பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு...!!