4 மாநிலங்களில் MLC தேர்தல்.. ஒரு தொகுதியை கூட வெல்லாத காங்கிரஸ்.. பகடி செய்த PM மோடி! ஆனால் சொந்த தொகுதி வாரணாசியில் வந்த பின்னடைவு!  AI Generated
இந்தியா

4 மாநிலங்களில் MLC தேர்தல்.. ஒரு தொகுதியை கூட வெல்லாத காங்கிரஸ்.. பகடி செய்த PM மோடி! ஆனால் சொந்த தொகுதி வாரணாசியில் வந்த பின்னடைவு!

சட்டமன்ற மேலவைத் தேர்தல்களில் மக்கள் நேரடியாக வாக்களிப்பது இல்லை. அதுகுறித்து விளக்கமாக பார்க்கும் முன்னர் இன்று நடந்தது என்ன எனப் பார்க்கலாம்.

Antony Ajay R

உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சட்டமன்ற மேலவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஒரு இடத்தைக் கூட நாடாளுமன்ற எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெற்றிபெற வில்லை என்பதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மோடியின் பகடி பதிவு!

அவரது பதிவில், சட்டமன்ற மேலவை (MLC) தேர்தல்கள் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் நடந்திருக்கிறது.

வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

காங்கிரஸ் எத்தனை இடங்களை வென்றிருக்கிறது என கணியுங்கள்?" என எமோஜியுடன் பகடியாக பதிவிட்டுள்ளார் மோடி.

பாஜக அரசு SIR மூலம் வாக்குகளை திருடிவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. தலைமை தேர்தல் அதிகாரியான ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என பரவலான பிரசாரத்தையும் போராட்டத்தையும் முன்னெடுத்து வருகிறது.

பல எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடப்பதாக குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளன. இந்த நிலையில் ஜென்-Z மக்களை கவரும் விதமாக பகடியாக மோடி பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாரணாசியில் பாஜகவின் தோல்வி

சட்டமன்ற மேலவைத் தேர்தல்களில் மக்கள் நேரடியாக வாக்களிப்பது இல்லை. அதுகுறித்து விளக்கமாக பார்க்கும் முன்னர் இன்று நடந்தது என்ன எனப் பார்க்கலாம்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் 11 இடங்கள், பீகாரில் 8, மகாராஷ்டிராவில் 5 மற்றும் கர்நாடகாவில் 4 இடங்களுக்கும் தேர்தல்கள் நடந்துள்ளது.

உ.பியில்  பட்டதாரிகளுக்கான லக்னெள, வாரணாசி, ஆக்ரா, மீரட், அலகாபாத்-ஜான்சி ஆகிய 5 தொகுதிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான லக்னெள, வாரணாசி, ஆக்ரா, மீரட், பரேலி - மொராதாபாத், கோரக்பூர் - ஃபைசாபாத் ஆகிய 6 தொகுதிகள் அடங்கும்.

இதில் 5 தொகுதிகளில் பாஜக மற்றும் 3 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியும் வெற்றி பெற்றுள்ளது இதுவரை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதில், பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாரணாசி ஆசிரியர்கள் தொகுதியில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி சமாஜவாதி வேட்பாளர் லால் பிஹாரி வெற்றி பெற்றுள்ளார். அந்த தொகுதியில் பட்டதாரிகள் இடத்துக்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

இன்னும் 3 மாதங்களில் உத்தரபிரதேசம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தோல்வி பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆளும் மாநிலத்தில் கூட கோட்டை விட்ட காங்கிரஸ்

மறுபக்கம் கர்நாடகாவில் 4 இடங்களிலும் ஆளும் கட்சியான காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. 3 இடங்களை பாஜக வென்றுள்ள நிலையில், ஒரு இடத்தை (பெங்களூரு ஆசிரியர் இடம்) அதன் கூட்டணி கட்சியான ஜனதா தளம் (மதசார்பற்ற) வெற்றி பெற்றுள்ளது. இது காங்கிரஸுக்கு பெருத்த பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் மட்டும் இல்லாமல் பிகாரிலும், மகாராஷ்டிராவிலும் பின்னடைவை சந்தித்துள்ளது காங்கிரஸ். பீகாரில் பிரசாத் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி கூட ஒரு இடத்தை வென்றுள்ளது. மகாராஷ்டிராவில் 5 இடங்களில் 3ல் பாஜகவின் மகாயுதி கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. இன்னும் முடிவுகள் வரவில்லை.

சட்டமன்ற மேலவை (MLC) தேர்தல்கள்

சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் (MLC) அனைவரும் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. பல்வேறு பிரதிநிதிகள் மற்றும் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் மூலம் மறைமுகத் தேர்தல் மற்றும் நியமனம் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது நாடாளுமன்ற மேலவையான ராஜ்ய சபாவை ஒத்தது.

மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு (1/3) நபர்களை அந்தந்த மாநிலத்தின் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் (MLAs) வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மற்றொரு பங்கு (1/3) உறுப்பினர்களை நகராட்சிகள், மாவட்ட வாரியங்கள் மற்றும் பிற உள்ளூர் சுயராஜ்ய அமைப்புகளின் உறுப்பினர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மீதமிருக்கும் இடங்களைப் பொருத்தவரையில், மொத்த உறுப்பினர்களில் பன்னிரண்டில் ஒரு பங்கு (1/12) நபர்களை அந்த மாநிலத்தில் வசிக்கும் பட்டதாரிகள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள். (இதற்கு வாக்களிக்க, தேர்தல் அறிவிப்புக்குக் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு முன்பே பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்).

மொத்த உறுப்பினர்களில் பன்னிரண்டில் ஒரு பங்கு (1/12) நபர்களை அந்த மாநிலத்தில் உள்ள இடைநிலை மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மீதமுள்ள ஆறில் ஒரு பங்கு (1/6) உறுப்பினர்களை மாநில ஆளுநர் நேரடியாக நியமிக்கிறார். (இதற்குத் தேர்தல் நடப்பதில்லை; கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை மற்றும் கூட்டுறவு இயக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களை ஆளுநர் நியமிப்பார்).

அதாவது ஒரு மேலவையில் (உதாரணமாக) 12 உறுப்பினர்கள் எனில், 4 பேர் MLAகளாலும் 4 பேர் நகராட்சிகள், மாவட்ட வாரியங்கள் மற்றும் பிற உள்ளூர் சுயராஜ்ய அமைப்புகளின் உறுப்பினர்களாலும் ஒருவர் ஆசிரியர்களாலும், ஒருவர் பட்டதாரிகளாலும், 2 பேர் ஆளுநர் நியமானத்தின் மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மேலவை உறுப்பினர்களின் (MLC) பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். இதில் மூன்றில் ஒரு பங்கு (1/3) உறுப்பினர்கள் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் ஓய்வு பெறுவார்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்