trump modi clash  
இந்தியா

டொனால்ட் டிரம்ப் அழைப்புகளை 4 முறை தவிர்த்த மோடி! - ஜெர்மன் நாளிதழ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

ஜெர்மன் நாளிதழின் அறிக்கையின்படி, இந்தியாவின் மீது அதிபர் டிரம்ப் விதித்துள்ள 50% வரிகள்தான் மோடியின் கோபத்திற்கு முக்கியக் காரணம்.

மாலை முரசு செய்தி குழு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த சில வாரங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேச நான்கு முறை முயற்சித்துள்ளார். ஆனால், இந்த நான்கு அழைப்புகளையும் பிரதமர் மோடி ஏற்க மறுத்துவிட்டார் என்று ஜெர்மனியைச் சேர்ந்த ஃபிராங்புர்ட்டர் அல்ஜெமைன் (Frankfurter Allgemeine - FAZ) என்ற புகழ்பெற்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மோடியின் இந்த முடிவு, "அவரது கோபத்தின் ஆழத்தையும், அதே சமயம் அவரது எச்சரிக்கை உணர்வையும்" வெளிப்படுத்துவதாக அந்தச் செய்தி கூறுகிறது.

ஜெர்மன் நாளிதழின் அறிக்கையின்படி, இந்தியாவின் மீது அதிபர் டிரம்ப் விதித்துள்ள 50% வரிகள்தான் மோடியின் கோபத்திற்கு முக்கியக் காரணம். பிரேசில் தவிர வேறு எந்த நாட்டிற்கும் இவ்வளவு அதிக வரியை அமெரிக்கா விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஜூலை 31 அன்று டிரம்ப், "இந்தியா ரஷ்யாவுடன் என்ன வர்த்தகம் செய்தாலும் எனக்கு கவலையில்லை. அவர்களின் செத்துப் போன பொருளாதாரங்களை அவர்கள் ஒன்றாகவே கீழே கொண்டு செல்லட்டும்," என்று இந்தியப் பொருளாதாரத்தை நேரடியாக விமர்சித்ததும், மோடியை வருத்தமடையச் செய்திருக்கலாம் என்று அந்த நாளிதழ் தெரிவிக்கிறது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஆகஸ்ட் 10 அன்று, இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக முன்னேறி வருகிறது என்று பிரதமர் மோடி மறைமுகமாகப் பதிலடி கொடுத்தார்.

மற்ற நாடுகள் அமெரிக்கச் சந்தையைச் சார்ந்திருப்பதைக் capitalise செய்யும் ஒரு அணுகுமுறையை டிரம்ப் கொண்டுள்ளார். ஆனால், தனது முதல் ஆட்சிக்காலத்தில், இந்தியாவின் பொருளாதார நலன்களுக்குச் சமரசம் செய்துகொள்ளாமல், டிரம்புடன் ஒரு சுமுகமான உறவைப் பிரதமர் மோடி பேணி வந்தார் என்று FAZ குறிப்பிடுகிறது. டிரம்ப் தனது அதிரடி நடவடிக்கைகளின் மூலம் மற்ற நாடுகளைப் பணிய வைக்க முயன்றபோதும், மோடி அதற்கு அடிபணிய மறுத்துவிட்டார் என்று அந்த நாளிதழ் கூறுகிறது.

வியட்நாம் சம்பவம் ஒரு பாடம்

டிரம்பின் தொடர்ச்சியான அழைப்புகளை மோடி ஏன் தவிர்த்தார் என்பதற்கான ஒரு காரணத்தையும் அந்த நாளிதழ் விளக்குகிறது. வியட்நாம் நாட்டுடன் அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப், ஒரு தொலைபேசி அழைப்பின்போது பேசினார். எந்தவொரு உறுதியான முடிவும் எட்டப்படாத நிலையில், ஒப்பந்தம் முடிந்துவிட்டதாகச் சமூக வலைதளங்களில் அவர் அறிவித்தார். இப்படி ஒரு சிக்கலில் சிக்கிக் கொள்ள மோடி விரும்பவில்லை என்றும், இது போன்ற 'அரசியல் நாடகங்களில்' பங்கேற்க மோடிக்கு விருப்பமில்லை என்றும் FAZ செய்தி தெரிவிக்கிறது.

இந்தோ-பசிபிக் திட்டம் கேள்விக்குறியா?

இந்தியாவை சீனாவிற்கு எதிரான ஒரு கூட்டணியில் முக்கியப் பங்காற்ற வைக்கும் அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் திட்டம், மோடியின் இந்த முடிவுகளால் பலவீனமடையலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிப்பதாக அந்த நாளிதழ் கூறுகிறது. "இந்தியாவின் இந்த மாற்றம், அமெரிக்காவின் வர்த்தக வரிகளுக்கு ஒரு பதில் மட்டுமல்ல, இது ஒரு மூலோபாய ரீதியான மாற்றம். அமெரிக்கா பின்வாங்கும் நிலையில், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் உலகளாவிய செல்வாக்கு மற்றும் தொழில் வளர்ச்சியில் பொதுவான நலன்கள் உள்ளன" என்று நியூயார்க்கில் உள்ள இந்தியா-சீனா நிறுவனத்தின் இணை இயக்குநர் மார்க் ஃபிரேசியர் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் விவகாரங்கள்

டிரம்பின் தலையீடு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களைத் தணிப்பதாகத் தான் கூறியதும், அதை டெல்லி நிராகரித்ததும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. மேலும், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு சண்டையை நிறுத்துவதற்கு டிரம்ப்பின் மத்தியஸ்தம் மற்றும் வர்த்தக வாய்ப்புகள்தான் காரணம் என்றும் டிரம்ப் கூறியதும், இந்தியாவிற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.

கடைசி தொலைபேசி உரையாடல்: ஜூன் 17

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் (MEA) கூற்றுப்படி, ஜூன் 17 அன்று அதிபர் டிரம்ப் விடுத்த கோரிக்கையின் பேரில் மோடி அவரிடம் பேசினார். இந்த உரையாடல் சுமார் 35 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, டிரம்பின் மத்தியஸ்தம் குறித்த அவரது கூற்றுக்களை மோடி திட்டவட்டமாக மறுத்ததாக வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. "இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த ஒரு மட்டத்திலும் அமெரிக்க மத்தியஸ்தம் குறித்துப் பேசப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ நடவடிக்கை நிறுத்தம், பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் நேரடியாகத் தொடங்கியது," என்று பிரதமர் மோடி டிரம்ப்பிடம் தெளிவாகத் தெரிவித்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.