மும்பை பைதோனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வில், அவர்கள் சாப்பிட்ட தர்பூசணியில் எலி மருந்தில் பயன்படுத்தப்படும் ஜிங்க் பாஸ்பைடு என்ற நச்சு வேதிப்பொருள் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துயர சம்பவம் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தெற்கு மும்பையில் நடைபெற்றது. தொழிலதிபரான அப்துல்லா டோகாடியா (44), அவரது மனைவி நஸ்ரின் டோகாடியா (35), மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13) ஆகியோர் வீட்டில் தர்பூசணி சாப்பிட்ட சில நேரங்களிலேயே கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அதிகாலை 3 மணிக்கு குடும்பத்தினர் வாந்தி, வயிற்று வலி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகளால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், சில மணி நேரங்களிலேயே நால்வரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த திடீர் மரணங்கள் முதலில் உணவில் விஷம் கலந்த இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து, உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அதிகாரிகள் வீட்டிலிருந்தும், பழம் வாங்கப்பட்ட கடையிலிருந்தும் மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆரம்ப பரிசோதனைகளில் செயற்கை நிறமூட்டிகள் அல்லது ரசாயன பழுக்க வைக்கும் பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
ஆனால், தற்போது வெளியான தடய அறிவியல் ஆய்வக (FSL) அறிக்கை விசாரணையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் மற்றும் வீட்டில் மீதமிருந்த தர்பூசணி மாதிரிகளில் ஜிங்க் பாஸ்பைடு தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஜிங்க் பாஸ்பைடு என்பது எலிகளை கொல்லும் மருந்தில் பயன்படுத்தப்படும் மிகவும் ஆபத்தான நச்சுப் பொருளாகும். இது உட்கொண்ட சில மணி நேரங்களிலேயே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தர்பூசணியில் இந்த நச்சு திட்டமிட்டு கலக்கப்பட்டதா அல்லது வேறு எந்த காரணத்தால் அவர்களே எடுத்துக் கொண்டதா என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், பிரேத பரிசோதனையின் போது சில உள் உறுப்புகள் பச்சை நிறமாக காணப்பட்டதாகவும், இது நச்சு விஷ பாதிப்புக்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த வழக்கில் தற்செயலான நச்சுக் கலப்பு, தற்கொலை அல்லது திட்டமிட்ட கொலை உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் மும்பை காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. குடும்பத்தினர், உறவினர்கள், அண்டை வீட்டார் மற்றும் பழ விற்பனையாளர்களிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.