Delhi HC NEET Verdict 
இந்தியா

"NEET மாணவர்களுக்கு முக்கிய தீர்ப்பு..." - அரசு வழங்கிய மாற்றுத்திறன் சதவீதத்தை மருத்துவக் குழு குறைக்க முடியுமா?

அரசு வழங்கிய UDID அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றுத்திறன் சதவீதத்தை, MBBS சேர்க்கைக்கான மருத்துவ மதிப்பீட்டுக் குழு தன்னிச்சையாக குறைக்க முடியாது

மாலை முரசு செய்தி குழு

மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவுடன் NEET தேர்வை எழுதும் மாணவர்களுக்கு மதிப்பெண் மட்டுமல்ல, அவர்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் தகுதி விதிகளும் முக்கியமானவை. குறிப்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு வழங்கிய மாற்றுத்திறன் சான்றிதழில் குறிப்பிடப்பட்ட சதவீதம் முக்கிய பங்கு வகிக்கிறது.

அத்தகைய சான்றிதழில் 40 சதவீதத்துக்கு மேல் மாற்றுத்திறன் இருப்பதாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சேர்க்கை நேரத்தில் மருத்துவக் குழு அதை குறைத்து மதிப்பிட்டால் என்ன ஆகும் என்ற கேள்விக்கு தற்போது முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

NEET-UG 2026 மூலம் MBBS சேர்க்கைக்கு முயன்ற இரண்டு மாணவர்களின் மாற்றுத்திறன் சதவீதத்தை மருத்துவ மதிப்பீட்டுக் குழுக்கள் குறைத்த விவகாரத்தில், டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய விளக்கம் அளித்துள்ளது. அரசு வழங்கிய UDID அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றுத்திறன் சதவீதத்தை, MBBS சேர்க்கைக்கான மருத்துவ மதிப்பீட்டுக் குழு தன்னிச்சையாக குறைக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இவ்விவகாரத்தில் முக்கியமான கேள்வி, ஒரு மாணவர் மருத்துவப் படிப்பைத் தொடரும் அளவுக்கு உடல் ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் தகுதியானவரா என்பதுதான். அதற்கான மதிப்பீட்டை மருத்துவக் குழு செய்யலாம். ஆனால் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட மாற்றுத்திறன் சான்றிதழில் உள்ள சதவீதத்தை மீண்டும் கணக்கிட்டு குறைப்பது அந்தக் குழுவின் பணியல்ல என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இரண்டு மாணவர்களின் வழக்குகளில்தான் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றது. அவர்களில் சிவம் குமார் என்ற 18 வயது மாணவருக்கு நிரந்தர பார்வைக் குறைபாடு இருப்பதாக அரசு வழங்கிய UDID அட்டையில் 60 சதவீத மாற்றுத்திறன் பதிவு செய்யப்பட்டிருந்தது. NEET-UG 2026 அனுமதிச்சீட்டிலும் அவரது மாற்றுத்திறன் தொடர்பான விவரம் இடம்பெற்றிருந்தது.

தேர்வில் அவருக்கு கூடுதல் நேரம் வழங்கும் வசதியும் இருந்தது. ஆனால் MBBS சேர்க்கைக்கான மருத்துவ மதிப்பீட்டில் அவரது மாற்றுத்திறன் 30 சதவீதமாகக் கணக்கிடப்பட்டது. இதனால் 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் என்ற அளவை அடிப்படையாகக் கொண்ட மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டுக்கு அவர் தகுதியற்றவராக மாற்றப்பட்டார். இருப்பினும், அதே மருத்துவக் குழு அவர் MBBS படிக்கவும், மருத்துவராக பணியாற்றவும் உடல் ரீதியாக தகுதியானவர் என்றும், நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தமாட்டார் என்றும் தெரிவித்திருந்தது.

மற்றொரு மாணவியான ஆஷியாவின் UDID அட்டையில் 61 சதவீத நிரந்தர உடல் இயக்கக் குறைபாடு இருப்பதாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சேர்க்கைக்கான மருத்துவ மதிப்பீட்டில் அவரது மாற்றுத்திறன் 16 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. பின்னர் மேல்முறையீட்டு மருத்துவக் குழுவும் அந்த மதிப்பீட்டை ஏற்றுக்கொண்டது. இதன் காரணமாக அவர் மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைக்கு தகுதியற்றவராக கருதப்பட்டார்.

முதல் சுற்று கலந்தாய்விலும் அவரால் அந்தப் பிரிவில் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து மாணவர்கள் நீதிமன்றத்தை அணுகினர். அவர்களின் தரப்பில், UDID அட்டை என்பது அதிகாரப்பூர்வமான மாற்றுத்திறன் ஆவணம் என்றும், சேர்க்கை நேரத்தில் மருத்துவக் குழுவின் பணி மாணவர் MBBS படிப்பைத் தொடரும் அளவுக்கு செயல்திறன் கொண்டவரா என்பதை மதிப்பிடுவது மட்டுமே என்றும் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மாற்றுத்திறன் சதவீதத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாற்றுத்திறன் சான்றிதழை வழங்கும் அதிகாரப்பூர்வ அமைப்புக்கே இருப்பதாகக் குறிப்பிட்டது.

அந்த சான்றிதழில் ஏதேனும் தவறு இருப்பதாக அதிகாரிகள் கருதினால், அதற்கான சட்டப்பூர்வ வழிமுறையில் அதை எதிர்த்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் மருத்துவக் கல்லூரி சேர்க்கையின் போது மட்டும் அந்த சதவீதத்தை குறைத்து, மாணவரின் இடஒதுக்கீட்டு தகுதியை மாற்ற முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், UDID அட்டையில் பதிவு செய்யப்பட்ட சதவீதத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனால், அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ மாற்றுத்திறன் அட்டையின் நோக்கமே பாதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதே நேரத்தில் மருத்துவக் குழுவின் பங்கு தேவையற்றதாகிவிடவில்லை. மாணவர் MBBS படிப்பை தொடர முடியுமா, பாடநெறியின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியுமா, தேவையான வசதிகள் வழங்கப்பட்டால் படிப்பை மேற்கொள்ள முடியுமா, நோயாளிகளின் பாதுகாப்புக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா என்பவற்றை மருத்துவக் குழு தொடர்ந்து மதிப்பிடலாம்.

இரண்டு மாணவர்களும் ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாவது சுற்று கலந்தாய்வு வாய்ப்புகளை இழந்திருந்த நிலையில், அடுத்த கட்டமாக நடைபெறும் மூன்றாவது சுற்று மற்றும் தேவையானால் இறுதி சிறப்பு கலந்தாய்விலும் அவர்களின் UDID அட்டையில் உள்ள மாற்றுத்திறன் சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அது அவர்களின் NEET தரவரிசை மற்றும் விதிகளின்படி இருக்கும். இந்த தீர்ப்பு NEET மூலம் மருத்துவப் படிப்பில் சேர முயலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, ஏற்கனவே வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ சான்றிதழுக்கும், சேர்க்கை நேரத்தில் நடைபெறும் மருத்துவ மதிப்பீட்டுக்கும் இடையே குழப்பம் ஏற்பட்டால் எந்த ஆவணத்துக்கு முக்கியத்துவம் என்பதில் நீதிமன்றம் தெளிவான நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளது. மாணவர் மருத்துவப் படிப்பைத் தொடரும் திறன் குறித்து மதிப்பீடு செய்யப்படலாம்; ஆனால் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறன் சதவீதத்தை அதே கட்டத்தில் குறைப்பது வேறு விஷயம் என்பதே தீர்ப்பின் முக்கிய அம்சமாகும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்