ஏப்ரல் 1, 2026 முதல் அமலாகும் புதிய வருமான வரி விதிகள், சம்பளச் சலுகைகளுக்கான வரி மதிப்பீட்டைத் தரப்படுத்துவதுடன், அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் கடுமையான இணக்க நடைமுறைகள் மூலம் வரி ஏய்ப்பைக் குறைக்க வழிவகுக்கின்றன.
பல வருடங்களாக நடைமுறையில் இருந்த 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்கு பதிலாக, புதிய வருமான வரி விதிகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த புதிய விதிகள் வரும் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகின்றன. வரி செலுத்தும் நடைமுறைகள் எளிதாக்குதல், படிவங்களைக் குறைத்தல் மற்றும் தற்போதுள்ள நிதியாண்டு மற்றும் வரி மதிப்பீட்டு ஆண்டு என்பதற்குப் பதிலாக வரி ஆண்டு என்ற புதிய முறையை அறிமுகப்படுத்துதல் போன்ற பல மாற்றங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த மாற்றங்கள் ஒரு எளிமைப்படுத்தும் நடவடிக்கையாக அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தெரிகிறது.
இந்த புதிய வருமான வரி விதிகளின்படி, ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மீதான வரி விதிப்பு மிகவும் தெளிவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நிறுவனங்கள் வழங்கும் தங்குமிடம், கார் போன்ற வசதிகளின் மதிப்பைக் கணக்கிடுவதில் குழப்பங்கள் நீடித்தன. இனிவரும் காலங்களில், ஒரு ஊழியர் வசிக்கும் நகரத்தைப் பொறுத்து, அவரது சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சலுகை வரியாகக் கணக்கிடப்படும். உதாரணமாக, மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 10% வரை தங்குமிடச் சலுகைக்காக வரிக்கு உட்பட்ட வருமானமாக கருதப்பட வாய்ப்புள்ளது. அதேபோல், நிறுவனங்கள் வழங்கும் கார் வசதி, ஓட்டுநர் வசதி மற்றும் பயணச் சலுகைகள் கடுமையான கண்காணிப்பு மற்றும் தரப்படுத்தப்பட்ட மதிப்பீட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இது ஊழியர்களின் வரிக்கு உட்பட்ட வருமானத்தை அதிகரிக்கக்கூடும்.
அதையடுத்து சிறிய வகை சலுகைகளுக்கும் புதிய விதிகள் வரம்புகளை நிர்ணயித்துள்ளது. அதன்படி, ஒரு வேளைக்கு 200 ரூபாய் வரையிலான உணவு மட்டுமே வரி விலக்கு பெற தகுதியுடையது என நிர்ணயித்துள்ளது. நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் பரிசுகளுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் வரை மட்டுமே வரிவிலக்கு உண்டு. மேலும், நிறுவனங்களிடமிருந்து வட்டி இல்லா அல்லது குறைந்த வட்டிக்கு பெறப்படும் கடன்கள், சந்தை வட்டி விகிதங்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு வரி விதிக்கப்படும். முதலீடுகளைப் பொறுத்தவரை, பங்குகள் மற்றும் ESOP முறையிலான பங்குகளின் நியாயமான சந்தை மதிப்பை கணக்கிடுவதில் இனி கூடுதல் வெளிப்படைத்தன்மை இருக்கும் என தெரிகிறது. அதே நேரத்தில், பங்குச் சந்தை போன்ற நிதி அமைப்புகள் பரிவர்த்தனை விவரங்களை ஏழு ஆண்டுகள் வரை பராமரிக்க வேண்டும் என்பதால், வருமானத்தை மறைப்பது இனி கடினமாகும். மற்றொரு முக்கிய மாற்றமாக, வரி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒருவரின் வருமானத்தைத் துல்லியமாகத் தீர்மானிக்க முடியாத பட்சத்தில், வணிகப் பரிமாற்றம் அல்லது இதர அளவுகோல்களை கொண்டு வருமானத்தை மதிப்பிட வரிதுறை அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் இதர வழிகளில் வருமானம் ஈட்டுவோருக்கு முறையான ஆவணப் பராமரிப்பை அவசியமாக்கும். மேலும், டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வருமானங்களும் இனி தீவிரமாக கண்காணிக்கப்படும். சில சிக்கலான கணக்கீடுகளுக்கு ஆடிட்டர்களிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் இருப்பதால், வரி தாக்கல் செய்யும் நடைமுறை சற்று கூடுதல் பணிச்சுமை கொண்டதாக மாறக்கூடும்.
இறுதியாக, சுமார் 10 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு, இந்த புதிய விதிகள் மூலம் சலுகைகளின் மதிப்பு துல்லியமாக கணக்கிடப்படுவதால் வரிக்கு உட்பட்ட வருமானம் சற்று உயர வாய்ப்புள்ளது. இருப்பினும், புதிய வரி முறையின் கீழ் 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், ஏப்ரல் 1 முதல் அமலாகும் இந்த மாற்றங்கள் வெறும் எளிமைபடுத்துதல் மட்டுமல்லாமல், வரி ஏய்ப்பை தடுக்க மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. எனவே, வரி செலுத்துவோர் தங்கள் வருமானக் கட்டமைப்பு மற்றும் ஆவணங்களைச் சரியாகப் பராமரிப்பது அவசியமாகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.