பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை தற்போது குறைத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 9-லிருந்து 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சராசரி குடும்ப நுகர்வு அளவுகளுக்கு ஏற்ப சீரமைக்கும் வகையில், மத்திய அரசு இந்த எண்ணிக்கையை குறைத்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 மே மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், பயனாளிகள் ஆரம்பத்தில் ஒவ்வொரு ஆண்டும் 12 மானிய விலையிலான 14.2 கிலோகிராம் LPG சிலிண்டர்களைப் பெறத் தகுதி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டும் இந்த எண்ணிக்கை ஒன்பது சிலிண்டர்களாகக் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் நான்கு சிலிண்டர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் இத்திட்டத்தின்படி ஏழைத் தாய்மார்களுக்கு, ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வீதம் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. 2025-ல் ஒரு சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம் வீதம் வழங்கப்பட்ட நிலையில், ஆண்டுக்கு 9 சிலிண்டர்களாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் அதன் விலைவாசியும் உயர்ந்து வருவது அன்றாட வாழ்வை பெரிதும் பாதித்து வருகிறது. குறிப்பாக வீட்டு சமையல் எரிவாயு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தட்டுப்பாடு மாற்று சிலிண்டர் விலை உயர்வு என அடுத்தடுத்த சிக்கல்கள் எழுந்து வருவது நடுத்தர மற்றும் ஏழை மக்களை வெகுவாக பாதித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 14.2 கிலோ வீட்டு உபயோக LPG சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்தது. பின்னர் ஜூன் 7ம் தேதி மேலும் ரூ 29 உயர்ந்தது. தற்போது சிலிண்டர் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு மேலும் மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கருது தெரிவித்து வருகின்றனர்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது, இதனால் நீர்வழி போக்குவரத்து தடைப்பட்டது. மேலும் இறக்குமதி, ஏற்றுமதி என எல்லாமே கேள்விக்குறியானது. போர் தொடங்கி 100 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்று வரை முடிவு எட்டப்படாத நிலையில், மேற்கு அமீரக நாடுகளை சார்ந்து இருக்கும் மற்ற நாடுகள் பெருமளவு பாதிப்பை சந்தித்து வருகிறது. ஆனாலும் இந்தியாவில் அடுத்த 80 நாட்களுக்கு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் LPG குறித்து மக்கள் கவலை கொள்ள வேண்டாம் என்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.