மாநிலங்களவையில் திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா, 2026 நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து, திருநங்கைகளுக்கான தேசிய மன்றத்தின் இரண்டு உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்தச் சட்டம், சுய அடையாளம் மற்றும் கண்ணியத்திற்கான அடிப்படை உரிமைகளைப் பாதிக்கிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
திருநங்கைகள் உரிமைகள் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய திருநங்கைகள் மன்ற உறுப்பினர்களான கல்கி சுப்ரமணியம், ரிதுபர்ணா நியோக் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். சபையின் தெற்கு மண்டலப் பிரதிநிதியான கல்கி சுப்ரமணியம் மற்றும் வடகிழக்கு மண்டலப் பிரதிநிதியான ரிதுபர்ணா நியோக் ஆகியோர், சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கப்படாததையும், மசோதாவின் பாகுபாட்டின் தன்மையைக் காரணம் காட்டி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரிடம் தங்களது ராஜினாமாக்களைச் சமர்ப்பித்தனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா 2026, எதிர்க்கட்சிகள் மற்றும் திருநங்கை சமூகத்திடம் இருந்து தொடர்ச்சியான விமர்சனங்களைப் பெற்றது. இந்தச் சட்டம், ஒரு திருநங்கையின் சட்டப்பூர்வ வரையறையைச் சுருக்கி, சுய-உணர்வ-பாலின அடையாளத்திற்கான உரிமையை நீக்குவதன் மூலம் 2019 ஆம் ஆண்டு சட்டத்தை முற்றிலுமாக மாற்றியமைக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
சட்டம் கூறுவது என்ன?
முந்தைய கட்டமைப்பின் கீழ், தனிநபர்கள் தங்களின் சொந்த பாலின அடையாளத்தின் அடிப்படையில் தங்களைத் திருநங்கைகளாக அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தது. இதன் பொருள், அங்கீகாரம் பெறுவதற்காக ஒருவர் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவோ அல்லது உயிரியல் நிலைமைகளை நிரூபிக்கவோ வேண்டிய அவசியம் இருக்கவில்லை. தற்போது உள்ள மசோதா, தலைமை மருத்துவ அதிகாரி தலைமையிலான ஒரு வாரியம், ஒரு நபரின் பாலினத்தை மாவட்ட நீதிபதிக்கு "பரிந்துரைக்க" வேண்டும் என்றும் இந்த மசோதா மூலம், திருநங்கை அடையாளத்தை ஒரு சமூக அல்லது தனிப்பட்ட அடையாளமாகக் கருதாமல், ஒரு மருத்துவ நிலையாகக் கருதும் பழைய நிலைக்கு திரும்புவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது 2019 ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 4(2) ஐ நீக்குவதோடு, சுயநிர்ணயத்தின் சட்ட அங்கீகாரத்தை நீக்குகிறது. இதன் காரணமாக பல்வேறு அமைப்புகள் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு குரல்களை எழுப்பிவருகின்றனர். இந்நிலையில், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா, 2026ஐ, தற்போதுள்ள 2019 சட்டத்தில் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் வகையில், மக்களவை செவ்வாய்க்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
ஏன் இந்த சட்டம்:
இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான நோக்கங்கள் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கையின்படி, உயிரியல் நிலைமைகள் காரணமாக சமூகப் புறக்கணிப்பை எதிர்கொள்ளும் ஒரு குறிப்பிட்ட வகை திருநங்கைகளை அங்கீகரித்து பாதுகாப்பதை இந்தத் திருத்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தகைய பாதிப்புகளை எதிர்கொள்ளும் தனிநபர்களை மையமாகக் கொண்ட ஒரு கட்டமைப்பை இந்தச் சட்டம் நிறுவ முயல்கிறது. திருத்தப்பட்ட விதிகளின்படி, அடையாளச் சான்றிதழ் வழங்குவது, நியமிக்கப்பட்ட அதிகாரியின் பரிந்துரைகளின் அடிப்படையிலும், தேவைப்பட்டால் மருத்துவ நிபுணர்களுடனான கலந்தாலோசனையின் பேரிலும் மாவட்ட நீதிபதியின் ஆய்வுக்கு உட்பட்டதாக இருக்கும்.
ஆனால் இந்த சட்டத்திற்கு பல்வேறு எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. மேலும், இது மனிதநேயமற்ற செயல் என்று பலர் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில்தான், தேசிய திருநங்கைகள் மன்ற உறுப்பினர்களான கல்கி சுப்ரமணியம், ரிதுபர்ணா நியோக் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். தனது ராஜினாமா கடிதத்தில், "வாழ்வாதாரம் போன்ற இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தில் நமது கூட்டுக்குரல் ஒடுக்கப்பட்டிருக்கும் ஓர் இடத்தில் என்னால் தொடர்ந்து நீடிக்க முடியாது" என்று கல்கி எழுதியிருந்தார். தென்னிந்தியா மற்றும் நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் மற்றும் இருபாலின சமூகத்தினருடன் விரிவான உரையாடல்களில் ஈடுபட்டதாகவும், அந்த மசோதா பிற்போக்கானது என்பதில் பெருமளவில் ஒருமித்த கருத்து நிலவியதைக் கண்டறிந்ததாகவும் அவர் கூறினார். இந்தத் திருத்தங்களை எதிர்த்து, மற்றவர்களுடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கல்கியும் அறிவித்துள்ளார்.
மேலும், ரிதுபர்ணா நியோக் தனது நிலைப்பாட்டினையும், கவலையையும் வெளிப்படுத்தினார், “ஒரு சட்டப்பூர்வ பிரதிநிதியாக, நமது வாழ்க்கையைப் பாதிக்கும் சட்டங்கள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதே எனது முதன்மைப் பணியாகும். எந்தவொரு முறையான கலந்தாலோசனையும் இன்றி இந்த மசோதாவை முன்னெடுத்துச் செல்லும் முடிவு, இந்த மன்றம் நிறுவப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கிறது” என்று அவர் கூறினார். இந்த மசோதா, ஒருவர் சுயமாக உணர்ந்துகொள்ளும் பாலின அடையாளத்திற்கான உத்தரவாதத்தை நீக்குகிறது, திருநங்கை எனத் தகுதிபெறுவோரின் வரையறையைச் சுருக்குகிறது, மேலும் பல அடுக்கு மருத்துவ மற்றும் நிர்வாக ஆய்வுகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த விதிகள், சமூகத்தின் பெரும் பிரிவினரைச் சட்டத்தின் கீழ் கிடைக்கும் பாதுகாப்புகளிலிருந்து விலக்கிவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளன என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
விரிவான கலந்தாய்வு மற்றும் ஒரு தேர்வுக் குழுவின் மறுஆய்வுக்கான எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை மீறி, மாநிலங்களவை இந்த மசோதாவை நிறைவேற்றிய உடனேயே இந்த ராஜினாமாக்கள் நிகழ்ந்துள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.