பாலினத்தேர்வு குறித்த சர்ச்சை மசோதா.. கேள்விகுறியாகுமா திருநங்கைகளின் உரிமை?

ஒவ்வொரு முறையும் எங்களை நாங்கள் நிரூபித்துக்கொண்டேதான் இந்த சமூகத்தில் எங்கள் வாழ்க்கையை நடத்தவேண்டுமா? எனது பாலினம் எனது அடையாளம், அது எனது உரிமை..
பாலினத்தேர்வு குறித்த சர்ச்சை மசோதா.. கேள்விகுறியாகுமா திருநங்கைகளின் உரிமை?
Published on
Updated on
5 min read

திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா, 2026 சுய அடையாளத்தை நீக்கும் இந்த மசோதாவில் திருநங்கைகளை மறுவரையறை செய்து, சுயமாகப் பாலின அடையாளத்தை உணரும் உரிமையை நீக்கும் நோக்கில், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-ஐத் திருத்துவதற்கான மசோதாவை மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்தியது.

மேலும் ஹிஜ்ரா, கின்னர், அரவாணி, ஜோக்தா போன்ற சமூக-கலாச்சார அமைப்புகளை ஊக்குவிப்பது, பாலின வேறுபாடுகள் உள்ள நபர்கள், பாலியல் பண்புகளில் உயிரியல் மாறுபாடுகளைக் கொண்ட நபர்கள், சுயமாக உணரப்பட்ட பாலின அடையாளம் அல்லது பாலின திரவத்தன்மையின் அடிப்படையில் மட்டுமே அடையாளம் காணும் நபர்களை இது விலக்குகிறது. இது திருத்த மசோதாக்களை குறித்து சமூக செயற்பாட்டாளர், திருநங்கை சுவேதா அவர்களிடம் கருத்துக்கள் பேசப்பட்டது.

திருநங்கைகள் திருத்த மசோதாக்கள் பற்றிய உங்களுடைய கருத்து என்ன? முதலில் பாலினத்தேர்வு என்பது அவரவரின் தனிப்பட்ட தேர்வு, அது ஓர் உணர்வு. 15 வருடங்களுக்கு முன்பு, திருநங்கைகளை ஒரு உளவியல் மருத்துவர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் ஆகியோரின் முன்பு நிர்வாணமாக நின்று அவர்களின் கண்காணிப்பின் கீழ் மட்டுமே திருநங்கைகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. ஆனால் நாட்போக்கில் அது மாறி, திருநங்கை, திருநம்பி என்று தங்களை தாங்கள் உணர்ந்தாலே போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது இதில் இருந்து இந்த திருநங்கை திருத்த மசோதா 2026 மாறுகிறது. இதில் அடிப்படை உரிமையே இங்கு மறுக்கப்படுகிறது. தற்போது இந்த மசோதாவில், மருத்துவ ஒப்புதலின் அடிப்படையிலேயே திருநங்கைகளுக்கான உரிமை வழங்கப்படும் என்றால் இதில் மனித உரிமையே முற்றிலுமாக கேள்விக்குறியாகிறது. பழைய NALSA தீர்ப்பில், தாங்கள் திருநங்கைகள் என்பதை தாங்கள் உணர்ந்தாலே போதும், அடையாள அட்டை வழங்கலாம் என்று இருந்தது.

தற்போது, மக்களவை அமைச்சர் வீரேந்திர குமார், இந்த நிறுத்தியமைக்கப்பட்ட மசோதாவை கொண்டு வர காரணம் என்ன?. பல பெண்களும், ஆண்களும் தங்களது பாலினத்தை சரியாக வைத்துதான் இருக்கிறார்களா..? அப்படி இருக்கும் பட்சத்தில் எங்களுக்கு மட்டும் ஏன் இந்த பரிசோதனை?. மருத்துவர் அளித்தால் தான் நாங்கள் திருநங்கை என்றால் அது எங்களுக்கு தேவை இல்லையே. ஒவ்வொரு முறையும் எங்களை நாங்கள் நிரூபித்துக்கொண்டேதான் இந்த சமூகத்தில் எங்கள் வாழ்க்கையை நடத்தவேண்டுமா?. எனது பாலினம் எனது அடையாளம், அது எனது உரிமை. அடைப்படையிலே எங்களுக்கு சரிவர இந்த ஒன்றிய அரசால் உதவமுடியவில்லை என்றால், எப்படி எங்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும்?. எங்களது உரிமைகள் எங்களுக்கு எப்படி கிடைக்கும்?. பல கட்சிகள் தங்களது கட்சிகளில் திருநங்கைகளை உறுப்பினர்களாக வைத்துள்ளது. இருப்பினும் இதுபோல நடப்பது ஏன்?, என்று தனது ஆணித்தரமான கேள்விகளை முன்வைத்தார். மேலும், சுய அடையாளத்தை அழிப்பதற்கான அடக்குமுறை அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கியது?.

காலம் காலமாகவே நாங்கள் விளிம்புநிலை மக்களாகவே இருந்துவருகிறோம், மீண்டும் இந்த சட்டம் வந்தால் தொடரதான் செய்யும். எங்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், ஒவொருமுறையும் நாங்கள் திருநங்கைதான் என்று எங்களையும், எங்களது உணர்வுகளையும் இவர்கள் முன்பு நிரூபித்தும், மருத்துவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தியும்தான் இருக்கவேண்டும் என்றால் எங்களது உணர்வுகள் என்னாவது?. எங்களை பரிசோதிக்க இவர்களுக்கு என்ன தகுதிகள் வகுக்கப்பட்டிருக்கிறது?. அடிப்படையான திருநங்கைகளின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள்? என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவிற்கு என்ன நன்மை பயக்கப்போகிறது?, எந்த ஒரு காரணங்களும் இல்லை. பின்பு ஏன் இவ்வளவு துரிதமாக இந்த திருத்தச்சட்டம் வர வேண்டும்?. மேலும், தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த திருநங்கை அடையாள அட்டையை வைத்து ஒரு 'சிம் கார்டு' கூட வாங்கமுடியாது. அடையாள அட்டை இருக்கிறது என்றால் ஆதார் அட்டையில் மாற்றினால் மட்டுமே வங்கிக்கணக்கு திறக்கப்படும் என்று கூறுகிறார்கள். இந்த அடையாள அட்டை வெறும் கணக்கெடுப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அந்த கணக்கெடுப்பினை கூட மத்திய மற்றும் மாநில அரசுகள் சரிவர செய்வது கிடையாது.

திருநங்கைளில் பலரும் படித்துள்ளார், அவர்களது எதிர்கால வாழ்வு நல்லமுறையில் இருக்கவே எங்களை போன்ற சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மூத்த திருநங்கைகள் அனைவரும் வாழ்க்கையை அர்பணித்துள்ளனர். எங்களது வாழ்வை அர்ப்பணித்து, அடுத்துவரும் திருநங்கை சமூகத்திற்கு வழிகாட்டியாக இருக்கவே முனைப்புடன் போராடிவருகிறோம். அப்படி இருக்கையில் இவர்களது கட்டுப்பாட்டிற்கு எங்களால் எப்படி அடிபணியமுடியும்?. எங்களையும் சக உயிர்களாக மதியுங்கள்.

பழைய 2019ம் ஆண்டு சட்டத்தை தற்போது திருத்தி அமைக்கும் வகையில் இந்த ஐந்து வருடத்தில் அப்படி என்ன நடந்து விட்டது?. இந்த திருத்த மசோதாவில் திருநங்கைகள் மிகப்பெரிய சவால்களை சந்திக்க உள்ளார்கள். சமூகத்தில் பல பிரச்சனைகள் உள்ளது. குறிப்பாக பாலியல் வன்கொடுமை, கொலை, குடும்ப அட்டை அனைவரையும் சென்றடையாத நிலை போன்றவை இன்றளவிலும் இருக்கதான் செய்கிறது. அப்படி இருக்க, அதனை தடுக்க முன்வராமல் இந்த சட்டத்தை அமல்படுத்த என்ன அவசரம்?. திருநங்கைகளை பாலியல் தொழில் செய்யக்கூடாது என்றும் கூறும் இந்த அரசு, மாற்று பாதையாக என்ன அமைத்து தந்துள்ளது?. மாற்றிவழிகளை தராமல் அவசரமாக இந்த மசோதாவை திருத்தி என்ன செய்யப்போகிறீர்கள்?. சமூகத்தின் தேவையை அறிந்து, மாற்று வழிகளை கொடுப்பதே நல்ல அரசு. இந்த மசோதாக்களை குறித்து, ஒரு கலந்தாலோசிக்கும் குழுவை மத்திய மற்றும் மாநில அளவில் நியமித்து கருத்துக்களை கேளுங்கள். உங்கள் கையில் அதிகாரம் இருக்கிறது, வாய்ப்பிருக்கிறது என்று வழிகாட்டுதல் இன்றி இதனை செய்யாதீர்கள். ஒரு திருநங்கையை, திருநங்கை என்று முடிவு செய்யவேண்டியது திருநங்கைதானே தவிர்த்து நீங்கள் இல்லை. ஒரு இந்திய குடிமகனாக, குடிமகளாக 'நாங்கள் யார்?' என்பதை முடிவு செய்வது எங்களது உரிமை. மேலும், தன்பாலின தேர்வினையே உடைப்பது நியாயமில்லாத ஒரு செயல் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த மசோதாவை கொண்டுவர காரணமாக கூறுவது, சிறுவர்களை கடத்தி திருநங்கைகள் அல்லது திருநம்பிகளாக மாற்றுகின்றனர். மேலும் திருநங்கைகளுக்கு செல்லவேண்டிய சலுகைகள் இன்றளவிலும் செல்லாமல் இருக்கிறது. அதை போக்கவே இந்த மசோதா அமலுக்கு வருகிறது என்கிறார்கள், இது பற்றி உங்கள் கருத்து..?

அப்படியென்றால் கடுமையான சட்டங்களை கொண்டுவாருங்கள். குழந்தைகளை கடத்தி அவ்வாறு செய்கிறார்கள் என்றால் அவர்களை கைது செய்யுங்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக என்ன சட்டங்களை இயற்றியுள்ளீர்கள்?. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?, 6 மதம் கழித்து குற்றவாளிக்கு சிறைத்தண்டனை என அறிவிப்பு வரும், அதன் பின்பு அவ்வளவுதான். இதில் எங்குள்ளது மனிதாபிமானம்?, உங்கள் சட்ட வல்லுநர்கள்தான் யார்?. 2019 திருநங்கை (உரிமைகள் பாதுகாப்பு) மசோதாவை அமல்படுத்துங்கள். இந்த மசோதாவை அமல்படுத்தாமல் 4 வருடங்களை கடத்திவிட்டு, தற்போது இந்த திருத்த மசோதாவை உடடியாக அமல்படுத்த வேண்டிய காரணம் என்ன?. குறிப்பாக,பாலியல் குற்றம் செய்வோர், குழந்தைகளை கடத்துவோருக்கு எதிராக உங்களால் எதுவுமே செய்யமுடியவில்லையே. எங்களை மட்டும் ஏன் பயன்படுத்துகிறீர்கள்?. அப்படி என்றால் எங்களை கண்டு இந்த அரசு அஞ்சுகிறதா?. இதில் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயம் என்பது எங்கள் மீது இழைக்கப்படும் மிகப்பெரிய அநியாயம். யாருடைய கட்டாயத்தின் பேரிலும் எங்களது பாலியல் அடையாளத்தினை நாங்கள் வெளியே கொண்டுவரவில்லையே?, அப்படி இருக்க உங்களுடைய பரிந்துரை எங்களுக்கு எதற்கு?.

இந்த சட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் எங்களுடைய ஒவ்வொரு உரிமையையும் பெற அரசிடம் நாங்கள் கையேந்தி நிற்கும் நிலை உருவாகிவிடும். திருநங்கைகளை பாதுகாக்க விரும்பினால், 18 வயது நிரம்பாத சிறுவர்கள் பெண்ணாக மாறும் நிலையில் அச்சிறுவர்களின் பெற்றோர்கள் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்ற கூடாது என்று சட்டம் இயற்றுங்கள். பெற்றோர்கள் அவ்வாறு செய்யும் பட்சத்தில் அவர்களின் குடும்ப அட்டை, அடையாள அட்டையை முடக்குவதற்கான சட்டங்களை இயற்றுங்கள், ஓட்டுரிமையை முடக்குங்கள். இதை செய்ய திராணி இல்லாத அரசு, இந்த சட்டத்தை நடைமுறைபடுத்தி என்ன செய்யப்போகிறது?. எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், யாசகம் பெரும் திருநங்கைகள், பாலியல் தொழில் செய்யும் திருநங்கைகள் செய்துகொண்டேதான் இருக்கப்போகிறார்கள். அதில் எந்த மாற்றமுமே ஏற்படப்போவதில்லை. ஏனெனில் எங்களுக்கும் வயிறு, பசி, வாழ்வாதாரம் என்று எல்லாம் உள்ளது. அரசு எங்களை கருத்தில் கொண்டு திருநங்கைகளுக்கு வீடு, அரசு வேலை என்று எதுவும் தரப்போவது இல்லை. தகுதி மற்றும் படிப்பின் அடிப்பைடையில்தான் தரப்போகிறீர்கள். திருநங்கைகளை படிக்கச் சொல்கிறீர்கள், வேலைக்கு செல்ல சொல்கிறீர்கள், பன்முகத்தன்மையை பற்றி எல்லாம் பேசுகிறீர்கள், ஆனால் எங்களது பாலின உரிமையை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் தலையிடு செய்கிறீர்கள். எங்களது சுய அடையாளத்தை முடிவு செய்யவேண்டியது நாங்கள்தானே தவிர நீங்கள் இல்லை.

இதில் ஹிஜ்ரா, கின்னர், ஜோக்தர் போன்ற அமைப்புகளை ஊக்கப்படுத்துவது போல் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?இந்த மசோதா விவகாரத்தில் அரசு மத ரீதியாக எடுத்து செல்கிறது. இதில் வட, தென் இந்தியா என்று இரண்டாக பிரித்து செயல்படவேண்டும். 2019ம் ஆண்டிற்கான மசோதாவில் மட்டும் ஏன் ஹிஜ்ரா, கின்னர், ஜோக்தர் போன்ற அமைப்புகள் பெயர் இல்லை?. அப்போது இந்த அமைச்சர்கள் எங்கு சென்றார்கள்?. மதவாதியாக இருப்பவர்கள் பாலியல் குற்றங்கள் செய்வதில்லையா?, குற்றங்கள் புரிவதில்லையா?. முந்தைய காலங்களில் திருநங்கைகள் அறுவை சிகிக்சை மேற்கொண்டா இருந்தார்கள்?,இல்லையே. அப்போது உங்களின் இந்த அவசர மசோதா எங்கு சென்றது?. வரலாற்றை மறந்துவிட்டீர்களா? இல்லை அழிக்க துடிக்கிறீர்களா?. இதுவும் ஒருவகை திணிப்புதான்.

இந்த சட்டத்தை அமல்படுத்தும் பட்சத்தில் திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? நிறைய பிரச்சனைகளுக்கு இந்த சட்டம் வழிவகுக்கும். நாங்கள் நாங்களாக இருக்க முடியாது, எங்களுக்கான ஒழுங்கு நடவடிக்கைகள் மாறுபடும், திருநங்கைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் பிரச்சனைகள் தலைதூக்கும். ஒரு சாதாரண ஓய்வூதியம் பெறுவது கூட எங்களுக்கு கேள்விக்குறியாகிவிடும். மேலும் எங்களது பாலினம் குறித்து மிகப்பெரிய கேள்வியை செல்லும் இடமெல்லாம் நாங்கள் சந்திக்க நேரிடும். அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் பெண் மனம் கொண்ட ஆணாக மாறி வாழும் திருநங்கைகளை நோக்கி துளைக்கப்படும் கேள்விகளுக்கு யார் பொறுப்பெடுப்பது?. அவர்கள் எங்களை அவமானப்படுத்தப்படமாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்?. இதில் தனிநபரின் சுதந்திரமே முடக்கப்பட்டுவிடும்.

திருநங்கைகளின் தேவை மற்றும் பிரச்சனை என்னவாக இருக்கிறது? எங்களுக்கு இடஒதுக்கீடு கட்டாயம் வேண்டும். இடஒதுக்கீடு வந்தால் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கைகள் மாறும். திருநங்கைகள் மீது பல குற்றங்கள் சுமத்தப்படுகிறது. குறிப்பாக, பாலியல்தொழில் செய்கிறார்கள், யாசகம் பெறுகிறார்கள் போன்றவை குறைய வேண்டும் என நீங்கள் உண்மையில் நினைத்தால் அரசு கட்டாயம் இடஒதுக்கீடு திருநங்கைகளுக்கு என்று கொண்டு வரவேண்டும். அதன் மூலம் கிடைக்கும் எந்த வேலையையும் நங்கள் செய்துகொள்கிறோம். இதை குறித்து அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யட்டும். எங்களை ஒதுக்காமல், எங்கள் குரல்களை நசுக்கலாமல், முடக்கமல் இருந்தாலே போதும். அனைத்து தரப்பு மக்களும் இப்போது அரசியலுக்கு உள்ளேவர தொடங்கியுள்ளதால் அதை எப்படி கட்டுப்படுத்த என்று தெரியாமல் அரசு இதனை கையில் எடுத்துள்ளது. திருநங்கைகளை அதே விளிம்பு நிலையில் வைக்கவேண்டும் என்ற யுக்தியை கையாளுகின்றனர். கட்சிகளிலும் கூட பெயருக்கே திருநங்கைகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. மற்றபடி எங்களுக்கு நடக்கும் அநீதி குறையவே இல்லை. வல்லரசு நாடுகளே இந்த விஷயத்தை சரியாக கையாளும்போது, இவர்களுக்கு என்ன?. திருநங்கைகளை அவர்களாகவே இருக்கவிடுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். வேலைவாய்ப்பினை ஏற்படுத்திகொடுங்கள் என்று கேட்கிறோம், அடுத்த வேளை உணவிற்கே வாய்ப்பில்லாமல் இருக்கிறோம் அதை வழங்குவதை விடுத்தது இந்த மசோதாவை அவசரமாக அமலுக்குக்கொண்டுவருவது எவ்வகையில் நியாயம். அடிப்படை உரிமையே எங்களுக்கு கொடுக்காமல் இருக்கும்போது இந்த சட்டம் எதற்கு?.

இறுதியாக , இந்த மசோதாவை வாபஸ் வாங்கவேண்டும் என்றும், நாங்கள் நாங்களாகவே இருந்துகொள்கிறோம். யாசகம் பெற்றோ, எங்களது சமூகத்தை உயர்திக்கொள்கிறோம். இந்த மசோதாவின் மூலம், எங்களை அவமானப்படுத்துவது, மனித உரிமைமீறலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள் என்று சமூக செயற்பாட்டாளர் சுவேதா ஆணித்தரமாக தனது கருத்துக்களை முன்வைத்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com