"உயிருக்கு ஆபத்து இல்லை, ஆனால்.." 8 வயது சிறுவனால் தாக்கப்பட்ட பெண் குழந்தை.. ஆணையம் விசாரணை சொல்வது என்ன? 
இந்தியா

"உயிருக்கு ஆபத்து இல்லை, ஆனால்.." 8 வயது சிறுவனால் தாக்கப்பட்ட பெண் குழந்தை.. ஆணையம் விசாரணை சொல்வது என்ன?

"சிகிச்சைக்கு நிதியுதவி செய்ய யாரும் இல்லாததால், நாங்கள் பெண்ணை செக்டர் 6-ல் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. இதில் அரை மணி நேரத்திற்கும் மேலாக வீணானது" - சிறுமியின் உறவினர்

Antony Ajay R

ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா (Panchkula) நகர அரசு சமஸ்கிருதி மாதிரி பள்ளியைச் சேர்ந்த 6 வயது மாணவி 3ம் வகுப்பு மாணவனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வரை தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களை உலுக்கியுள்ளது.

அக்டோபர் 28ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்காமல், வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றதால் குழந்தையைக் காப்பாற்றுவது கடினமாகிவிட்டதாக குழந்தையின் உறவினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

தாக்குதலுக்கு பிறகு குழந்தை சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளது. பள்ளி ஆசிரியர்கள் முதலில் குழந்தையை செக்டர் 21-ல் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் சிகிச்சைச் செலவுகள் குறித்த பிரச்சினை எழுந்ததால், செக்டர் 6-ல் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனை சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (PGIMER) மாற்ற பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து சிறுமியின் மாமா ஃபாசில் கூறுகையில், "ஆரம்பத்தில் ஆசிரியர்கள் சிகிச்சைச் செலவுகளை ஏற்க முன்வந்தனர், ஆனால் மருத்துவமனை ரூ.70,000 கேட்டது. பின்னர் ஆசிரியர்கள் தங்களால் ரூ.20,000 மட்டுமே பங்களிக்க முடியும் என்று கூறினர். அதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய எட்டு வயது சிறுவனின் தந்தை அழைக்கப்பட்டார், அவரும் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை மட்டுமே பங்களிக்க முன்வந்தார்.

சிகிச்சைக்கு நிதியுதவி செய்ய யாரும் இல்லாததால், நாங்கள் பெண்ணை செக்டர் 6-ல் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. இதில் அரை மணி நேரத்திற்கும் மேலாக வீணானது" என்று கூறியுள்ளார்.

மேலும், "அரசு மருத்துவமனையும் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல், சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அவரை மாற்ற பரிந்துரைத்தது.” எனக் கூறியுள்ளார்.

குழந்தையின் தந்தை ஒரு சலூனில் சிகை திருத்துபவராக பணியாற்றி வருகிறார். தாய் இல்லத்தரசி.

சிறுமியின் நிலை குறித்து ஃபாசில் கூறுகையில், "அவள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுவிட்டாள், ஆனால் மன அதிர்ச்சி நிலையில் இருக்கிறாள். அவளுக்கு தலையில் நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளன, மேலும் மூக்கில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.

தாக்குதல் குறித்து பேசுகையில் ஃபாசில், அந்த சிறுவனுக்கு குழந்தையை முன்பே தெரியாது என்றும், இரு வகுப்புகள் ஒன்றாக அமரவைக்கப்பட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் எழுந்ததாகவும் கூறியுள்ளார்.

வகுப்பு முடிந்தபிறகு சிறுவன் சிறுமியின் தந்தை ஒரு வகுப்பறையில் இருப்பதாகக் கூறி தனியாக வரவழைத்து தாக்கியதாக ஃபாசில் கூறியுள்ளார்.

சிறுவன் சிறுமியின் டை-யை பிடித்து இழுத்து கையால் தாக்கியதையும், பூத்தொட்டியால் அடித்ததையும் செங்கல்லை சில முறை முகத்தில் போட்டதையும் வீடியோவில் காண முடிகிறது.

அதன்பிறகு சிறுவன் அந்த அறையை பூட்டியதாகவும், காவலாளியும் சிறுமியை கவனிக்கவில்லை என்றும் ஃபாசில் கூறுகிறார். ஆட்டோ ஓட்டுனர் மற்றும் சிலர் குழந்தையை தேடும்போது அந்த சிறுவன் அவள் அங்கே கிடப்பதாகவும் வேறு சிலர் அவளைத் தாக்கியதாகவும் கூறியதாகக் கூறுகிறார் ஃபாசில்.

வீடியோ மூலம் அந்த சிறுவன் தான் குழந்தையைத் தாக்கியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இதனை ஒத்துக்கொண்ட சிறுவன், அவள் தன்னை மனநலம் குறைந்தவர் எனக் கூறியதால் தாக்கியதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

சிறுமியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஹரியானா மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (HSCPCR) தானாக முன்வந்து விசாரணை நடத்தத் தொடங்கியிருக்கிறது.

ஆணையத்தின் தலைவர் திரிப்தி ஹரிபால் ஷியோரன், அக்டோபர் 30 அன்று PGIMER மருத்துவமனைக்குச் சென்று, குழந்தையின் உடல்நிலை மற்றும் சம்பவம் தொடர்பான சூழ்நிலைகளை அறிந்துகொள்வதற்காக அதன் பெற்றோருடன் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சம்பவத்தால் குழந்தைக்கு ஏற்படக்கூடிய உளவியல் தாக்கம் குறித்தும் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. இளம் வயதில் ஏற்படும் இத்தகைய அதிர்ச்சிகரமான அனுபவம், நீண்ட நாட்கள் அச்சம், பாதுகாப்பின்மை மற்றும் மன உளைச்சலுக்கு வழிவகுக்கும் என்றும் அது குறிப்பிட்டது.

மருத்துவ சிகிச்சையுடன், குழந்தையின் உளவியல் நலனுக்கும் உணர்வு ரீதியான மீட்சிக்கும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் இடங்களில் ஆலோசனை மற்றும் தேவையான ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

சனிக்கிழமையன்று (31.10.2026), ஆணையம் பஞ்ச்குலா மாவட்டக் கல்வி அலுவலருக்கு, இவ்விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான உண்மை அறிக்கையையும் விவரத்தையும் கோரி, தாமாகவே முன்வந்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

இந்த சம்பவத்தில் குழந்தைகளைக் கண்காணிப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பள்ளி நிர்வாகம் தோல்வியடைந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை மூடுக்கியிருக்கிறது ஆணையம்.

தங்கள் வளாகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பையும் உறுதி செய்வது கல்வி நிறுவனங்களின் தனிப்பட்ட பொறுப்பு என்பதை மீண்டும் வலியுறுத்திய ஆணையம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தீவிரமாகக் கையாளப்பட வேண்டும் என்றும், அவை மீண்டும் நிகழாமல் தடுக்க பயனுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.