இந்தியா

அஜித் பவாரின் இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி.. துணை முதல்வர் உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்த பொதுமக்கள்!

சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப்படையினர் அஜித் பவார் உள்பட ஆறு பேரின் உடலை மீட்டு...

Mahalakshmi Somasundaram

மராட்டிய மாநிலத்தில் உள்ள பராமதியில் நேற்று நடக்க இருந்த தேசியவாத காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் நேற்று காலை மராட்டிய மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் பராமதிக்கு சென்ற போது அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதில் அஜித் பவார் அவருடன் பயணித்த இரண்டு பாதுகாவலர்கள், இரண்டு விமானிகள் மற்றும் விமான பணியாளர் ஒருவர் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பராமதியில் விமான ஓடு தளத்திற்கு அருகில் சென்ற போது விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து விலகிய நிலையில் விமானிகள் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது சரியாக காலை 8.45 க்கு கட்டுப்பட்ட இழந்த விமானம் விபத்துக்கு உள்ளாகி வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப்படையினர் அஜித் பவார் உள்பட ஆறு பேரின் உடலை மீட்டு பராமதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி விபத்து குறித்து மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இடம் போனில் கேட்டறிந்தார். இந்த விபத்தை தொடர்ந்து நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்று நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மராட்டிய முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை அஜித் பவாரின் உடல் அவரது சொந்த ஊரான பராமதியில் உள்ள பள்ளிக்கூட வளாகத்தில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை அவருக்கு அரசு மரியாதைகளுடன் இறுதி சடங்கு நடைபெற உள்ள நிலையில் இறுதி சடங்கில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அஜித் பவாரின் இறப்புக்கு திரௌபதி முர்மு உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.