வணிகவியல் துறையின் துணைப் பேராசிரியர் ஒருவர், ஒரு மாணவரைப் பலமுறை 'பயங்கரவாதி' என்று குறிப்பிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் பிஇஎஸ் (PES) பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். வீடியோ வைரலானதை தொடர்ந்து, மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பேராசிரியர்.
பெங்களூருவில் உள்ள பிஇஎஸ் (PES) பல்கலைக்கழகப் பேராசிரியர், வகுப்பின் போது ஒரு முஸ்லிம் மாணவரைத் திரும்பத் திரும்ப 'பயங்கரவாதி' என்று அழைத்துள்ளார். மார்ச் 24 அன்று நடந்த இந்தச் சம்பவத்தை, அங்க வகுப்பில் இருந்த மற்றொரு மாணவர் தனது கைபேசி மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார். அந்தக் காணொளியில், பேராசிரியர் முரளிதர் தேஷ்பாண்டே அந்த இஸ்லாமிய மாணவரைப் பார்த்து 'பயங்கரவாதி' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி கத்துவதை கேட்கமுடிகிறது. அறிக்கைகளின்படி, அந்தப் பேராசிரியர், ஈரான் போருக்கு “அவரைப் போன்றவர்கள்தான்” காரணம் என்று குற்றம் சாட்டுவதும், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “வந்து இவர்களை அழைத்துச் செல்வார்” என்று கூறுவதும், மற்றும் அந்த மாணவர் “நரகத்திற்குச் செல்வார்” என்று சொல்வதும் போன்ற தொடர்ச்சியான வசைச் சொற்களையும் கூறியதாகக் கூறப்படுகிறது. 57 வினாடிகள் கொண்ட அந்தக் காணொளி வெளியாகி, சமூகவலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) கடுமையான நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. தனது புகாரில் இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI), “பிஇஎஸ்(PES) பல்கலைக்கழக ஆசிரியர் டாக்டர் முரளிதர் தேஷ்பாண்டே, ஒரு சிறுபான்மை மாணவரைப் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. டாக்டர் முரளிதர் தேஷ்பாண்டேவை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் பகிரங்க மன்னிப்புக் காணொளி ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) கோருகிறது,” என்று கூறியுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பிஇஎஸ் பல்கலைக்கழகம், மார்ச் 27, வெள்ளிக்கிழமை அன்று பேராசிரியரைப் பணியிடை நீக்கம் செய்தது. அந்தப் பணியிடை நீக்க உத்தரவில், “ஒரு மாணவர் புகார் தெரிவித்த தகவல் பெறப்பட்டுள்ளது. எனவே இவ்விஷயம் குறித்த விரிவான விசாரணை முடியும் வரை, நீங்கள் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறீர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.