இந்தியா

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் டிஜிபிடம் புகார்..!

Malaimurasu Seithigal TV

புதுச்சேரியில் அதிமுக பெயர் மற்றும் கட்சி கொடியினை பயன்படுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் டிஜிபிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. அதே போல் இந்திய தேர்தல் ஆணையமும் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி அங்கீகரித்து கட்சி, சின்னம் உள்ளிட்டவைகளை பயன்படுத்தவும் அனுமதி வழங்கியது. 

இந்நிலையில் புதுச்சேரியில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், மற்றும் கட்சி நிர்வாகிகள் டிஜிபியை சந்தித்து மனு ஒன்று அளித்தனர். அதில் உச்சநீதிமன்றத்தாலும், தேர்தல் ஆணையத்தாலும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி என்றும் கட்சியின் பெயர், மற்றும் சின்னங்களுக்கும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரியில் தேவையின்றி அதிமுகவின் பெயர் மற்றும் கட்சி கொடி, சின்னத்தை பயன்படுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், கட்சியின் பெயர், கொடியினை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளதாகவும், அதனை மீறி பயன்படுத்துபவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.