இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே, "இன்னும் 48 ,மணி நேரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யாவிட்டால் CJP நாடு தழுவிய போராட்டத்தில் இறங்கும், அவர் பதவி விலகும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம்" எனக் கூறியுள்ளார்.
இந்த போராட்டம் கடந்த ஜூன் மாதம் ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தைப் போலவே இருக்கும் எனக் கூறியுள்ளனர்.
அபிஜித் திப்கேவின் இந்த அறைகூவளுக்கு காரணம், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர மறுஆய்வு (SIR) மற்றும் பல நடவடிக்கைகளுக்கு இணை ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆட்சேபனை தெரிவித்திருந்தனர் என இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் செய்தியறிக்கை அம்பலப்படுத்தியுள்ளதுதான்.
தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் ஆணையர்கள் கலந்தாலோசித்து பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த சில மாதங்களாக பல முடிவுகள் ஞானேஷ் குமாரால் தன்னிச்சையாக எடுக்கப்பட்டுள்ளன. சில நடவடிக்கைகள் இணை ஆணையர்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளன என செய்தியறிக்கை குற்றம் சாட்டுகிறது.
இருப்பினும், மூன்று பேர் கொண்ட தேர்தல் குழுவிற்குள் பிளவு இருந்ததாகக் கூறப்படும் கருத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
மூன்று ஆணையர்களும் கையெழுத்திட்ட ஓர் அறிக்கையில், மாறுபட்ட கருத்துக்கள் கலந்தாலோசனைகளின் இயல்பான ஒரு பகுதி என்றும், SIR தொடர்பான முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதனை ஏற்க மறுத்துள்ள திப்கே, ஞானேஷ் குமார் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் தலைமையிலான தேர்தல் ஆணையம், யார் வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை அரசாங்கமே எடுக்க வாய்ப்பு அளித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய திப்கே, "தலைமைத் தேர்தல் ஆணையர் மிகப்பெரிய தேச விரோதி. ஞானேஷ் குமார் இந்த நாட்டின் மிகப்பெரிய தேச விரோதி. அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும், ஏனெனில் அவர்தான் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.
மக்கள் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதுதான் ஜனநாயகம். இங்கே யார் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள், யார் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை அரசாங்கம் தீர்மானித்து வருகிறது. இதுவா ஜனநாயகம்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், "மொத்தத்தில் 13 கோடிக்கும் அதிகமான வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இது ஒரு சிறிய எண்ணிக்கை அல்ல. 2024 மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் (NDA) இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 2% ஆக இருந்தது. 13 கோடி வாக்குகளை நீக்குவது என்பது, மொத்த வாக்குகளில் ஏறக்குறைய 13% முதல் 14% வரை நீக்குவதற்குச் சமம்," என்று அவர் கூறினார்.
மேலும், "2024 தேர்தலில் பாஜகவால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. அந்தப் பெரும்பான்மையைப் பெறத் தவறியபோது, அவர்கள் பதற்றமடைந்தனர். '400 பார்' என்ற முழக்கத்தை எழுப்பிய அவர்கள் 240 இடங்கள் என்ற நிலைக்குச் சரிந்தனர். அதன் பிறகு, நாட்டின் மனநிலை மாறி வருவதையும், பிராந்திய சக்திகள் மிகவும் வலுவாக வெளிப்படுவதையும் அவர்கள் உணர்ந்தனர். panic button-ஐ அழுத்தி விட்டனர்." என்றும் பேசியுள்ளார்.
பிராந்திய தலைவர்களின் தோல்வி குறித்து விளக்கமாக பேசிய திப்கே, "மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் தொகுதியில் இருந்து 50,000 வாக்குகள் நீக்கப்பட்டன, அவர் சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மு.க. ஸ்டாலினின் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன, அவர் சுமார் 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தொகுதியில் இருந்து 40,000 வாக்குகள் நீக்கப்பட்டன, அவர் சுமார் 4,000-5,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்." எனப் பேசினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்