பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த பகுதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடைக்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்குள் அரங்கேறிய இந்தச் சம்பவத்தில், தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி வரை இருக்கலாம் என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியா நகரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பரபரப்பான சுப்ரியா சினிமா சாலையில் செயல்பட்டு வரும் சென்கோ கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நகைக்கடையையே கொள்ளையர்கள் குறிவைத்துள்ளனர். புதன்கிழமை மதியம் சுமார் 12.30 மணியளவில் மூன்று இருசக்கர வாகனங்களில் 8 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்துள்ளது. முதலில் வாடிக்கையாளர்களைப் போல கடைக்குள் நுழைந்த அவர்கள், அங்குள்ள சூழலைச் சில நிமிடங்கள் கவனித்துள்ளனர். பின்னர் திடீரென தங்களிடம் வைத்திருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து ஊழியர்களை மிரட்டத் தொடங்கியுள்ளனர்.
எதிர்பாராத விதமாக ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் கடைக்குள் புகுந்ததால் அங்கிருந்த ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாத வகையில் அனைவரையும் ஒரே இடத்தில் அமர வைத்துள்ளனர். சிலரது கைகளைக் கட்டியதுடன், அவர்களிடம் இருந்த செல்போன்களையும் பறித்துள்ளனர். இதனால் யாராலும் உடனடியாக வெளியே உள்ளவர்களுக்குத் தகவல் தெரிவிக்கவோ, போலீசாரைத் தொடர்புகொள்ளவோ முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில், கொள்ளையர்களைத் தடுக்க முயன்ற சில ஊழியர்கள் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவரைத் துப்பாக்கியின் பின்பகுதியால் தாக்கியதில் அவருக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இரண்டு பேரின் தலையிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக நேரில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆயுதங்களைக் காட்டி அனைவரையும் மிரட்டிய கொள்ளையர்கள், கடையில் இருந்த தங்கம், வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த நகைகளை அவசரமாகச் சேகரித்துள்ளனர். கடையில் இருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் குறித்து ஊழியர்கள் தெரிவித்த தகவலின்படி, கடையில் வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி வரை இருக்கலாம் என்று ஆரம்பகட்டமாகக் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடையின் இருப்புப் பதிவுகள் மற்றும் மீதமுள்ள நகைகளைக் கணக்கிட்ட பிறகே உண்மையான இழப்பு எவ்வளவு என்பது தெரியவரும். தற்போது அதிகாரப்பூர்வமாக இறுதி மதிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தச் சம்பவத்தில் மேலும் அதிர்ச்சியளிக்கும் விஷயம், கொள்ளையர்கள் கடையைவிட்டுச் செல்லும்போது தெரிவித்ததாகக் கூறப்படும் மிரட்டல்தான். அங்கிருந்த ஒரு பெண் தெரிவித்த தகவலின்படி, கொள்ளையர்கள் வெளியேறும்போது, 'நாங்கள் மீண்டும் வருவோம்; இது வெறும் டிரெய்லர்தான்' என்ற பொருள்படும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக நகைக்கடைக்கு விரைந்தனர். டிஐஜி ஹர்கிஷோர் ராய், எஸ்பி குமார் கவுதம், டிஎஸ்பி அஜித் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஊழியர்கள் மற்றும் நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் வந்த மூன்று இருசக்கர வாகனங்கள், அவர்கள் தப்பிச் சென்ற பாதை உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து வருகின்றனர். மேலும், கடை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தனிப்படை அமைக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் பட்டப்பகலில் இவ்வளவு பெரிய கொள்ளை நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையேயும் நகை வியாபாரிகளிடையேயும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் எப்படித் திட்டமிட்டு இந்தச் சம்பவத்தை அரங்கேற்றினர், அவர்களுக்குப் பின்னால் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கு கொண்டு செல்லப்பட்டன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்