இந்தியா

கோயிலில் தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.7 கூடுதல் கட்டணம்... கடைக்கு ரூ.7 லட்சம் அபராதம் ஏன்?

அதற்கு கடை தரப்பில், அப்படி அதிகமாக வசூலிக்க அனுமதி இருப்பதாக கூறப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

மாலை முரசு செய்தி குழு

கோயிலுக்கு செல்லும்போது குடிநீர், தின்பண்டங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அங்குள்ள கடைகளில் வாங்குவது பக்தர்களுக்கு வழக்கமான ஒன்று. ஆனால், அப்படி வாங்கும் பொருட்களுக்கு பாட்டிலில் அச்சிடப்பட்ட விலையைவிட அதிகமாக பணம் வசூலித்தால் அதை சாதாரண விஷயமாக கடந்து செல்ல முடியாது என்பதை ஆந்திரப் பிரதேசத்தில் வெளியான ஒரு நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது. அனகவரம் கோயில் வளாகத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.7 கூடுதலாக வசூலித்த கடைக்கு ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் அனகவரத்தில் உள்ள ஸ்ரீ வீர வெங்கட சத்யநாராயண சுவாமி கோயிலுக்கு கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி டி. வெங்கடேஸ்வர ராவ் என்பவர் சென்றிருந்தார். அப்போது கோயில் வளாகத்தில் செயல்பட்டு வந்த உரிமம் பெற்ற கடையில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை வாங்கியுள்ளார். அந்த பாட்டிலில் அதிகபட்ச சில்லறை விலை எனப்படும் MRP ரூ.18 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கடையில் அவரிடம் ரூ.25 வசூலிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. பணம் செலுத்தியதற்கான UPI பரிவர்த்தனை விவரமும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டிலில் ரூ.18 என விலை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், ஏன் ரூ.25 வசூலிக்கப்படுகிறது என்று பக்தர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கடை தரப்பில், அப்படி அதிகமாக வசூலிக்க அனுமதி இருப்பதாக கூறப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கோயில் நிர்வாகத்திடமும் தனது புகாரை தெரிவித்தார். ஆனால், பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காததால் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் கடை உரிமையாளர் தரப்பில் வேறு விளக்கம் அளிக்கப்பட்டது. ரூ.25 என்பது தண்ணீர் பாட்டிலுக்காக மட்டும் பெறப்பட்ட தொகை அல்ல என்றும், குளிர்பானம் மற்றும் பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்களுக்காக அந்தப் பணம் பெறப்பட்டதாகவும் கடை தரப்பு வாதிட்டது. அதாவது, தண்ணீர் பாட்டிலின் விலையைவிட அதிகமாக பணம் வசூலித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டை அவர்கள் மறுத்தனர்.

ஆனால், இந்த விளக்கத்தை ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. தண்ணீர் பாட்டில் வாங்கியதையே மறுக்கும் நிலையில், அதே தொகை வேறு பொருட்களுக்கானது என்று கூறுவது ஒன்றுக்கொன்று முரண்படுவதாக ஆணையம் குறிப்பிட்டது. மேலும், கடை தரப்பில் தங்களது வாதத்தை உறுதிப்படுத்தும் விற்பனைப் பதிவு, ரசீது, கண்காணிப்பு கேமரா காட்சி போன்ற ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதும் வழக்கில் முக்கியமாக பார்க்கப்பட்டது. இதன் அடிப்படையில், ரூ.18 MRP கொண்ட தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.25 வசூலிக்கப்பட்டது என நுகர்வோர் ஆணையம் முடிவு செய்தது. MRP-யை விட அதிகமாக வசூலிப்பது நியாயமற்ற வணிக நடைமுறையாகவும், நுகர்வோருக்கு வழங்க வேண்டிய சேவையில் குறைபாடாகவும் கருதப்படும் என்று ஆணையம் தெரிவித்தது. இதன் காரணமாக கடை உரிமையாளருக்கு பெரிய அளவில் அபராதம் விதிக்கப்பட்டது.

அதன்படி, பக்தரிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.7-ஐ திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல், ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ.10,000 இழப்பீடும், வழக்கு தொடர்பான செலவுகளுக்காக ரூ.5,000-மும் வழங்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது. இதனுடன் நிற்காமல், கடை உரிமையாளர் ரூ.7 லட்சத்தை நுகர்வோர் நல நிதியில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், பக்தரிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை வெறும் ரூ.7 மட்டுமே என்பதுதான். ஆனால், நுகர்வோர் உரிமைகளை மீறுவது மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பெரிய அளவில் தண்டனைத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு நபரிடம் வசூலிக்கப்பட்ட சிறிய தொகையை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் இதுபோன்ற நடைமுறைகள் தொடர வாய்ப்பு இருப்பதால், தண்டனை நடவடிக்கைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக ஆணையத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் கடை நடத்துவதால் மட்டும் MRP விதிகளில் இருந்து விலக்கு கிடையாது என்பதும் இந்த வழக்கில் முக்கியமாக வெளிப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு கிடைக்கும் பொருட்களுக்கு எவ்வளவு விலை என்பதை எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில் MRP தெளிவாகக் காட்டப்பட வேண்டும் என்று ஆணையம் கூறியுள்ளது. மேலும், கடைகளில் அதிக விலை வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்கக்கூடிய முறையும் இருக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த வழக்கில் கோயில் நிர்வாகத்துக்கு நேரடியாக அபராதப் பொறுப்பு விதிக்கப்படவில்லை. கடை தனிப்பட்ட உரிமம் பெற்ற நிறுவனத்தால் நடத்தப்பட்டதாகவும், ஏற்கனவே இதுபோன்ற அதிக கட்டணம் வசூலித்ததாக வந்த புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை கருத்தில் கொண்டு, நிர்வாகத்தின் மீது பணம் செலுத்தும் பொறுப்பு சுமத்தப்படவில்லை. இருப்பினும், கோயில் வளாகத்தில் செயல்படும் உரிமம் பெற்ற கடைகளில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு கோயில்களுக்கு மட்டும் பொருந்தும் ஒரு சம்பவமாக பார்க்க முடியாது. ரயில் நிலையம், பேருந்து நிலையம், சுற்றுலா தலங்கள், மருத்துவமனை வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொருட்கள் வாங்கும்போது, பாட்டிலில் அல்லது பொருளில் அச்சிடப்பட்ட MRP-ஐ மக்கள் கவனிப்பது அவசியம். விலையைவிட அதிகமாக வசூலிக்கப்பட்டால், ரசீது அல்லது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பதிவை ஆதாரமாக வைத்துக்கொண்டு உரிய இடத்தில் புகார் அளிக்க முடியும். ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.7 அதிகமாக வசூலித்த விவகாரம், இப்போது ரூ.7 லட்சம் அபராதம் என்ற அளவுக்கு சென்றுள்ளது. பணம் சிறிய தொகையாக இருந்தாலும், நுகர்வோர் உரிமை என்பது சிறிய விஷயம் அல்ல என்பதையே இந்த வழக்கு உணர்த்துகிறது. குறிப்பாக பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் விலை நிர்ணயம் மற்றும் விற்பனை விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கும் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் அளித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.