SIR Voter List Revision Tamil Nadu 
இந்தியா

உங்கள் Voter ID பெயர் பட்டியலில் இல்லையா? Form 6, Form 7, Form 8 எதற்கு? டிசம்பர் 11 கடைசி நாள்!

மூன்று படிவங்களையும் வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரடியாகச் சமர்ப்பிக்கலாம்....

Mahalakshmi Somasundaram

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துவிட்டீர்களா? சமீபத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிக்குப் (SIR) பிறகு, இன்று (நவ 12) -ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெயர் விடுபட்டவர்கள், முகவரி மாற்றம் செய்ய வேண்டியவர்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள விரும்புபவர்கள் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதற்கான கடைசி நாள் டிசம்பர் 11, 2026 ஆகும்.

Form 6 எதற்குப் பயன்படுத்தப்படுகிறது?

வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்க்க விரும்புபவர்கள் Form 6 விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக, SIR திருத்தத்தின்போது பெயர் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் பெயரைச் சேர்க்கவும், 18 வயது நிறைவடைந்த புதிய வாக்காளர்கள் தங்களைப் பதிவு செய்யவும் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தலாம். வயது மற்றும் இருப்பிடத்திற்கான உரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

Form 7 எதற்காக?

வாக்காளர் பட்டியலில் தவறாக இடம்பெற்றுள்ள பெயரை நீக்கக் கோருவது அல்லது ஒருவர் பெயர் சேர்க்கப்படுவதற்கு ஆட்சேபனை தெரிவிப்பது போன்றவற்றுக்கு Form 7 பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் உயிரிழந்திருந்தாலோ, நிரந்தரமாக வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்திருந்தாலோ உரிய காரணங்களுடன் இந்தப் படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Form 8 எதற்குப் பயன்படும்?

ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் தங்களது முகவரியை மாற்ற, பெயர் உள்ளிட்ட விவரங்களில் பிழைகளைத் திருத்த, மாற்று வாக்காளர் அடையாள அட்டை (EPIC) பெற அல்லது மாற்றுத்திறனாளி என்ற விவரத்தைப் பதிவு செய்ய Form 8 பயன்படுத்தப்படுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த மூன்று படிவங்களையும் வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரடியாகச் சமர்ப்பிக்கலாம். மேலும், தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in இணையதளம் அல்லது ECINET செயலி மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்:

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: நவம்பர் 12, 2026

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 11, 2026

விண்ணப்பங்கள் மீதான தீர்வு: டிசம்பர் 28, 2026-க்குள்

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஜனவரி 4, 2027

எனவே, உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதைச் சரிபார்த்து, தேவைப்பட்டால் உரிய படிவத்தை டிசம்பர் 11-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை கையில் இருப்பது மட்டுமே போதாது; வாக்காளர் பட்டியலிலும் பெயர் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்வது அவசியம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.