இந்தியா

“ஒரு ஜவான் போர்க்களத்தில் நிற்கும்போது உணரும் அனுபவத்தை…” - கடற்படை வீரர்களுக்கு மோடி புகழாரம்!!

“நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள். வீரமிக்க....

மாலை முரசு செய்தி குழு

இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கடற்படை வீரர்களுடன் பிரதமர் மோடி தனது தீபாவளியைக் கொண்டாடினார். கடந்த சில ஆண்டுகளாகவே முப்படையின் ஏதேனும் ஒரு பிரிவைச் சேர்ந்த வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி கொண்டாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

அந்தவகையில் கோவாவில் ஐஎன்எஸ் போர்க்கப்பலில் கடற்படை வீரர் மற்றும் வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி தீபாவளியைக் கொண்டாடினார். 

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது, “நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள். வீரமிக்க கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவது எனது பாக்கியம்.  ஒருபுறம் கடலும், மறுபுறம் இந்தியத் தாயின் துணிச்சலான வீரர்களின் பலமும் என்னிடம் உள்ளது. இந்திய கடற்படையின் துணிச்சலான வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவது தனது அதிர்ஷ்டம். இந்த நாள் மறக்கமுடியாதது. இந்த காட்சி நம்பமுடியாதது. இந்தியா மீதான நமது வீரர்களின் நேசம் தான், நமது கப்பல்கள் விமானங்களின் பலம். கடல் நீரில் சூரியனின் கதிர்களின் பிரகாசம், துணிச்சலான வீரர்களால் ஏற்றி வைக்கப்படும் தீபாவளி விளக்குகளைப் போன்றது.

ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மற்றும் அதன் வெற்றிக்காக இந்திய பாதுகாப்பு படை வீரர்களை பாராட்டுகிறேன். கடற்படை, விமானப்படையின் கூட்டு முயற்சி தான் பாகிஸ்தான் விரைவாக சரணடையச் செய்தது. ஐஎன்எஸ் விக்ராந்தில் கழித்த இரவை வார்த்தைகளில் விவரிக்க கடினமாக உள்ளது. நீங்கள் அனைவரும் எவ்வளவு அபரிமிதமான ஆற்றலையும் உற்சாகத்தையும் நிரப்பியிருந்தீர்கள் என்பதை நான் கண்டேன்.

நேற்று நீங்கள் தேசபக்தி பாடல்களைப் பாடுவதையும், உங்கள் பாடல்களில் ஆப்பரேஷன் சிந்தூரை விவரித்த விதத்தையும் பார்த்தபோது, ஒரு ஜவான் போர்க்களத்தில் நிற்கும்போது உணரும் அனுபவத்தை எந்த வார்த்தைகளாலும் முழுமையாக வெளிப்படுத்த முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.