மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் விமான நிலையத்தில் சுமார் 35 ஆண்டுகாலமாக ஒரே இடத்தில் நகராமல் நின்றுகொண்டிருந்த ஒரு போயிங் 720 விமானத்தின் பின்னணியில் உள்ள சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த 1991-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி, 'கான்டினென்டல் ஏவியேஷன்' நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானம், என்ஜின் கோளாறு காரணமாக நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. வழக்கமாக இதுபோன்ற சமயங்களில் பழுதுபார்க்கப்பட்டு சில நாட்களில் விமானம் கிளம்பிவிடும். ஆனால், இந்த விமானம் மட்டும் நாக்பூர் மண்ணை விட்டுப் பிரியாமல் பல தசாப்தங்களாக அங்கேயே முடங்கியது.
1960-களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போயிங் 720 ரக விமானங்கள், நடுத்தர தூரப் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டவை. சுமார் 156 பயணிகள் வரை அமரக்கூடிய வசதி கொண்ட இந்த விமானம், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஏர்லைன்ஸ் நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக 'லெட் செப்பெலின்' என்ற புகழ்பெற்ற ராக் இசைக்குழுவினர் கூட இந்த ரக விமானத்தைத்தான் தங்களின் பயணங்களுக்குப் பயன்படுத்தினர். இந்தியாவில் இருந்த ஒரே ஒரு போயிங் 720 விமானம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 1961-இல் அமெரிக்காவில் தனது பயணத்தைத் தொடங்கிய இந்த விமானம், பல நாடுகளுக்குச் சென்று இறுதியில் இந்திய நிறுவனத்திடம் வந்து சேர்ந்தது.
இந்த விமானம் நின்றிருந்த இடம் விமான நிலையப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியது. ரன்வேயில் இருந்து வெறும் 90 மீட்டர் தொலைவிலேயே இது நிறுத்தப்பட்டிருந்தது. சர்வதேச விதிமுறைப்படி ரன்வேயைச் சுற்றி 150 மீட்டர் தூரத்திற்கு எந்தத் தடைகளும் இருக்கக்கூடாது. ஒருவேளை தரையிறங்கும் விமானம் நிலைதடுமாறிப் பாதை மாறினால், ஓரத்தில் நிற்கும் இந்த விமானத்தின் மீது மோதி பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தது. இவ்வளவு பெரிய ஆபத்து இருந்தும், பல ஆண்டுகளாக இந்த விமானத்தை அங்கிருந்து அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த விமானம் அங்கேயே முடங்கிக் கிடந்ததற்குப் பின்னால் ஒரு பெரிய சட்டப் போராட்டமும், பணப் பிரச்சனையும் ஒளிந்திருந்தது. விமானத்தின் உரிமையாளர் சாம் வர்மா என்பவருக்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் இடையே வாடகை தொடர்பாகப் பெரிய சர்ச்சை நிலவியது. விமானத்தை அருகில் இருந்த ஒரு தனியார் இடத்திற்கு மாற்றத் தான் அனுமதி கேட்டதாகவும், ஆனால் அதிகாரிகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டுப் பல கோடி ரூபாய் வாடகை கேட்டுத் துன்புறுத்தியதாகவும் உரிமையாளர் குற்றம் சாட்டினார். ஆனால், அதிகாரிகள் தரப்பிலோ விமானம் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. இப்படியே காலங்கள் ஓட, விமானத்திற்கான வாடகை பாக்கி மட்டும் சுமார் 7 கோடி ரூபாயைத் தாண்டியது. கனரா வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக்கிடந்த இந்த விவகாரத்தில், இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தலையிட்ட பிறகுதான் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. இந்த விமானத்தை உடனடியாக அகற்றாவிட்டால், நாக்பூர் விமான நிலையத்தின் உரிமத்தையே ரத்து செய்துவிடுவோம் என்று டிஜிசிஏ எச்சரித்தது. இதன் விளைவாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏர் இந்தியா பொறியாளர்களின் உதவியுடன் விமானத்தின் பழைய டயர்கள் மாற்றப்பட்டு, சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ள நாக்பூர் ஃபிளையிங் கிளப் பகுதிக்கு இந்த விமானம் இழுத்துச் செல்லப்பட்டது.
ஒரு காலத்தில் கம்பீரமாகப் பறந்த இந்த விமானத்தை ஒரு உணவகமாகவோ அல்லது அருங்காட்சியகமாகவோ மாற்றப் பல திட்டங்கள் போடப்பட்டன. ஆனால், சட்ட சிக்கல்கள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் காரணமாக அந்தத் திட்டங்கள் எதுவுமே நிறைவேறவில்லை. இன்று அந்தப் போயிங் 720 விமானம் நாக்பூர் ஃபிளையிங் கிளப்பில் துருப்பிடித்து, கண்ணாடி உடைந்து சிதைந்த நிலையில் ஒரு பழைய இரும்புக்கூடாகக் காட்சி அளிக்கிறது. இந்தியாவின் ஒரே போயிங் 720 விமானத்தின் வரலாறு இப்படி ஒரு சோகமான முடிவைச் சந்தித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.