உலகின் மிகச்சிறந்த மற்றும் துல்லியமான போக்குவரத்து வசதிகளைக் கொண்ட ஜப்பான் நாடு, அங்கு வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளது. வரும் மே 2026 முதல், வெளிநாட்டுப் பயணிகள் ஜப்பான் முழுவதும் தடையின்றி பயணம் செய்ய 'டூரிஸ்ட் பாஸ்மோ' (TOURIST PASMO) என்ற புதிய பிரீபெய்ட் டிராவல் கார்டை அறிமுகம் செய்கிறது. இந்த ஒரே ஒரு கார்டு உங்கள் கையில் இருந்தால் போதும், ஜப்பானின் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் மட்டுமின்றி, அங்குள்ள வெண்டிங் மெஷின்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கூட நீங்கள் மிக எளிதாகப் பணம் செலுத்த முடியும்.
பொதுவாக ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் போது, ஒவ்வொரு முறை ரயிலில் ஏறும்போதும் டிக்கெட் எடுப்பதும், பேருந்து பயணங்களுக்குச் சரியான சில்லறை வைத்திருப்பதும் வெளிநாட்டினருக்கு ஒரு பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. இந்தச் சிரமத்தைக் குறைக்கவே ஜப்பான் அரசு இந்த ஐசி கார்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்டை நீங்கள் ஒரு முறை 'டேப்' (Tap) செய்வதன் மூலம் நொடிப் பொழுதில் பணம் செலுத்தலாம். இதனால் ஒவ்வொரு முறையும் டிக்கெட் மெஷின் முன் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.
இந்த 'டூரிஸ்ட் பாஸ்மோ' கார்டு ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 'பாஸ்மோ பாஸ்போர்ட்' என்ற கார்டுக்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது 2024-ல் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது நவீன வசதிகளுடன் புதிய அவதாரத்தில் மீண்டும் அறிமுகமாகிறது. இந்த கார்டின் டிசைன் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஜப்பானிய மொழியான காஞ்சியில் 'பயணம்' என்பதைக் குறிக்கும் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பும் போது, ஒரு அழகான நினைவுப் பொருளாக (Souvenir) கூட இதைப் பயணிகள் தங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.
இந்த கார்டைப் பெறுவதும் மிகவும் எளிது. ஜப்பானின் நரிடா (Narita) மற்றும் ஹனேடா (Haneda) போன்ற சர்வதேச விமான நிலையங்களிலேயே இதைப் பெற்றுக் கொள்ளலாம். ஹனேடா விமான நிலையத்தில் இதைப் பெறுவதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 590 ரூபாய் (1,000 யென்) முதல் 5,900 ரூபாய் (10,000 யென்) வரை எனப் பல விலைத் திட்டங்கள் உள்ளன. நரிடா விமான நிலையத்தில் சுமார் 1,200 ரூபாய் விலையில் முழுமையாக ரீசார்ஜ் செய்யப்பட்ட கார்டுகள் கிடைக்கின்றன. மிக முக்கியமாக, இந்தக் கார்டைப் பெற எவ்வித முன்பணமும் செலுத்தத் தேவையில்லை.
சுற்றுலாப் பயணிகள் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களும் இதில் உள்ளன. இந்த கார்டு வாங்கிய தேதியில் இருந்து 28 நாட்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும். குறுகிய காலச் சுற்றுப்பயணம் வருபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் இருக்கும் பேலன்ஸ் தொகையை உங்கள் பயணம் முடிந்த பிறகு மீண்டும் பெற முடியாது என்பதால், தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்வது நல்லது. 2026-ல் ஜப்பான் செல்லத் திட்டமிடுபவர்களுக்கு இந்த கார்டு ஒரு 'ஆல்-ஆக்சஸ் பாஸ்' போலச் செயல்படும் என்பதில் சந்தேகமில்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்