Maharashtra women sugarcane workers 
இந்தியா

"கர்ப்பப்பையை நீக்கிட்டுதான் வேலைக்கு வரணும்" - ஒரு நாள் கூட லீவு இல்ல.. கரும்பு காட்டில் பெண்களுக்கு நடந்த அவலம்!

கரும்பு தோட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் தங்களின் கருப்பையை நீக்குவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Vinvizhi Leninton

பெண்களுக்கு பல பிரச்சனைகள் இருந்துவரும் நிலையில், அவர்களின் மாதவிடாய் பிரச்சனை என்பது மிகப்பெரிய ஒரு பிரச்சனையாக பார்க்கப்பட்டு அவர்களின் கருப்பையை நீக்க கட்டாயப்படுத்தும் நிலை இருக்கிறது என்று கூறினால் உங்களால் நம்பமுடிகிறதா?. ஆம்! அதிக நேரம் வேலை செய்ய, கூலி பெற, இடைவிடாது உழைக்க என்று கூறி இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட்டில் கரும்பு தோட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் தங்களின் கருப்பையை நீக்குவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

2019-ல் வெளிவந்த ஒரு அறிக்கையின் படி, பீட் மாவட்டத்தில் 82,309 பெண்கள் குறித்த தகவல்கள் களப்பணியாளர்களால் சேகரிக்கப்பட்டது. கணக்கெடுக்கப்பட்ட பெண்களில் 13,861 பேர் கடந்த பத்தாண்டுகளில் கருப்பை நீக்கம் செய்திருந்தது கண்டறியப்பட்டது. அந்த பெண்களில் பெரும்பாலானோர் 35-40 வயதுக்குட்பட்டவர்கள், அதே சமயம் 25 வயதுக்குட்பட்ட ஒரு சிறிய பிரிவினரும் கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது. சுமார் 400 பெண்கள் அடங்கிய குழுவிடமிருந்து தனிப்பட்ட நேர்காணல்கள், குழு விவாதங்கள் மற்றும் மூடிய அறைக்குள் இருந்து எடுக்கப்பட்ட வாக்குமூலங்களும் சேகரிக்கப்பட்டன, என்று அரசாங்கத்திடம் அறிக்கை சமர்பித்ததாக டாக்டர் கோர்ஹே தெரிவித்துள்ளார்.

அந்த பகுதியில் வேலை செய்யும் ஏராளமான பெண்கள், கரும்புகளை அறுவடை செய்தல், அவற்றை சேகரித்தல், பெரிய கரும்புக் கட்டுகளைத் தூக்கி லாரிகள் மற்றும் டிராக்டர்களில் ஏற்றுதல் போன்ற நீண்ட நேர கடுமையான உடல் உழைப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர். வாக்குறுதிகள் பல அளிக்கப்பட்ட போதிலும், குறைந்த ஊதியம் கொடுப்பது, வேலைக்கு வராத அல்லது பகுதி நேரம் வரும் நாட்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற அச்சத்திலேயே கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளுமாறு பெண்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று தொழிலாளர் உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பெருமளவில் நடைபெறும் இந்த கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகளுக்கான மற்ற காரணங்களாக, குழந்தைத் திருமணங்கள், பெண்களின் உடல்நலப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வின்மை, வறுமை, அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் ஆலோசனை வழங்கப்படாமை, தண்ணீர் பற்றாக்குறை, மாதவிடாய் சுகாதாரம் மற்றும் கழிப்பறைகள் இல்லாமை ஆகியவற்றை அக்குழு பட்டியலிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அறுவை சிகிச்சையானது பெண்களுக்கு மாதவிடாய் வலி எனும் மாதாந்திரப் பிரச்சனையிலிருந்து அவர்களை விடுவித்து, அதிக நேரம் வேலை செய்ய அனுமதிக்கும் என்று பெண்களிடம் கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

"மாதவிடாய் வலி அல்லது கர்ப்பம் என்பது அதிக வேலை நாட்களையும், அதிக ஊதிய இழப்பையும் ஏற்படுத்துவதாகவும், கரும்பு ஒப்பந்தக்காரர்கள் பெண்களை கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு உடல்ரீதியாகக் கட்டாயப்படுத்தாவிட்டாலும், அவர்கள் பெண்களை அந்த நிலைக்கு தள்ளும் சூழ்நிலைகளை உருவாக்குகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதாவது, பெண்களிடம் ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையை நிர்ணயித்து, அவற்றை அடைய கிட்டத்தட்ட 12 மணி நேரம் கடுமையாக, ஒப்பந்ததாரர்கள் வாயிலாக வேலை வாங்குகின்றனர். இந்த இலக்கை அடைய வேண்டிய சுமையை பெண்கள் மீது சுமத்துவதால் அதைச் சாத்தியமாக்குவதற்காக, பெண்கள் கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு சுமார் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை செலவிடுவதாகவும் கூறப்படுகிறது.

2019-ம் ஆண்டில் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகளின்படி, மகாராஷ்டிராவின் முக்கிய கரும்புத் தொழிலாளர் மையங்களில் ஒன்றான பீட் மாவட்டத்தில் உள்ள பெண்களிடையே கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகளின் விகிதம், தேசிய சராசரியான 3%-ஐ விட அதிகமாக, அதாவது 36% ஆக இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அதன் பின்னர், சமூக செயல்பாட்டாளர்களின் அழுத்தத்தின் காரணமாக, உள்ளூர் அதிகாரிகள் இவ்விவகாரத்தை விசாரிக்க ஒப்புக்கொண்டனர். மேலும், கடந்த பத்தாண்டுகளில் அந்த மாவட்டத்தில் 25 வயதுக்குட்பட்ட சில பெண்கள் உட்பட 13,000-க்கும் மேற்பட்ட கரும்புத் தொழிலாளர்களின் கருப்பைகள் அகற்றப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதில், 12 வயது சிறுமிகள் கூட குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டு, கரும்புத் தொழிலாளர்கள் தேவைப்படும் பகுதிகளுக்குத் தங்கள் கணவர்களுடன் செல்வதாகக் கூறப்படுகிறது.

மேலும், மாதவிடாய், கர்ப்பம் அல்லது கருச்சிதைவு காலங்களில் கூட பெண்களுக்கு ஒரு நாள் கூட விடுப்பு எடுக்க அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. இது எல்லா வகையிலும் ஒரு கொத்தடிமை தனமாகவே பார்க்கப்படுகிறது. அவர்கள் ஓய்வு எடுத்தால் தினக்கூலியை இழப்பது மட்டுமல்லாமல், தொழிலாளர் ஒப்பந்தக்காரருக்கும் பணம் வேறு செலுத்த வேண்டியுள்ளது, என்று பெண் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பணியாற்றும் அமைப்புகளின் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் சீமா குல்கர்னி தெரிவித்துள்ளார்.

கரும்பு அறுவடைக்காக இடம்பெயர்ந்த 82,309 பெண்கள், கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட 13,861 பெண்களில், 45 சதவீதத்திற்கும் அதிகமானோர் அதாவது 6,314 பேர் தூங்குவதில் சிரமம், மனச்சோர்வு, விரக்தியான எண்ணங்கள், மூட்டு வலி மற்றும் முதுகுவலி போன்ற மன மற்றும் உடல் ரீதியான துன்பங்களை அனுபவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பெண்கள் அனுபவிக்கும் உடல் ரீதியான பிரச்சனைக்காக பல ஆயிரக்கணக்கில் செலவு செய்வதோடு, மன ரீதியான பாதிப்பிற்கு அவர்கள் என்ன செய்வார்கள்? அதற்கு அவர்களுக்கு பணம் எங்கிருந்து வரும்?. உடல் ரீதியான மருத்துவ செலவுகள் அவர்களுக்கு எக்கச்சக்கமாக இருக்கும் போது அன்றாட கூலிக்கு வேலைக்கு பெண்கள் இதற்கெல்லாம் எப்படி செலவு செய்வர்கள்? என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

சில கார்ப்பரேட் வேலைகளில் கூட பெண்களுக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. அதில் முக்கியமாக, தாமதமாக திருமணம் செய்து கொள்ள சொல்லுதல், ஒரு வேளை திருமணம் செய்து கொண்டால் குழந்தை பிறப்பை தள்ளி வைக்க சொல்லுதல், ஒரு வேளை குழந்தை பிறந்துவிட்டால் வேலைக்கு எடுக்கவே சில நிறுவனம் யோசிப்பதாக பல பெண்கள் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் தங்களது வேதனைகளை கொட்டியுள்ளனர். படித்த பெண்களே தங்களை நிரூபிக்க இவ்வளவு செய்ய வேண்டிய நிலையில், படிக்காத கூலிக்கு வேலை செய்யும் பெண்கள் இந்த அளவிற்கு இறங்க வேண்டி உள்ளது என்பது கொடுமையிலும் கொடுமையான விஷயம். கொத்தடிமையாக மனிதர்களை வைப்பதே குற்றம் என்றால் அவர்களின் உடலின் மீது வரை ஆதிக்கம் செலுத்தும் மனநிலையை என்ன வென்று சொல்வது?.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்